என் மலர்
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானில் நாளை தொடக்கம்: நீரஜ் சோப்ரா மீண்டும் தங்கம் வெல்வாரா?
- தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
- நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.
டோக்கியோ:
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (13-ந் தேதி ) தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.
இதில் 198 நாடுகளை சேர்ந்த 2202 வீரர் வீராங்க னைகள் கலந்து கொள்கிறார்கள். 49 பிரிவுகளில் பந்தயம் நடத்தப்படுகிறது. வழக்கம்போல் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
19 பேர் கொண்ட இந்திய அணி உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது. வரலாற்றில் முதல்முறையாக ஈட்டி எறிதலில் 4 இந்தியா்கள் கலந்து கொள்கிறார்கள் .
இதில் நீரஜ் சோப்ரா மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கடந்த 2023-ம் ஆண்டு அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
அவர் இந்த முறையும் தங்கம் வெல்வாரா ? என்று ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. ஒலிம்பிக் சாம்பியனும், பாகிஸ்தான் வீரருமான அர்சத் நதீம் உள்ளிட்ட வீரர்கள் அவருக்கு கடும் சவாலாக இருப்பார்கள். நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதி சுற்று 17-ந் தேதியும், இறுதிப்போட்டி 18-ந் தேதியும் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு-
ஆண்கள்: நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ், யஷ்வீா் சிங், ரோகித் யாதவ் (ஈட்டி எறிதல்), முரளி ஸ்ரீசங்கா் (நீளம் தாண்டுதல்), குல்வீா் சிங் (5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டம்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கா் ( டிரிபிள் ஜம்ப்), சா்வேஷ் அனில் குஷோ் (உயரம் தாண்டுதல்), அனிமேஷ் குஜுா் (200 மீட்டர்), தேஜாஸ் சிா்சே (110 மீ தடை தாண்டுதல்), சொ்வின் செபாஸ்டியன் (20 கி.மீ. நடைப் பந்தயம்), ராம் பாபு, சந்தீப் குமாா் (35 கி.மீ. நடைப் பந்தயம்).
பெண்கள்: பாருல் , அங்கிதா தியானி (3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பிரியங்கா கோசு வாமி (35 கி.மீ. நடைப்பந்த யம்), பூஜா (800 மீட்டர் , 1,500 மீட்டர்).






