என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 0-4 என்ற கணக்கில் இழக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு சூறாவளிகள் ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை அதுவும் கூக்கபுரா புதிய பந்தில் சமாளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் எத்தகைய வலுமிக்க பவுலர்கள் என்பதை அவர்கள் நிரூபித்து காட்டி விடுவார்கள். இந்த டெஸ்ட் தொடரில், முதலில் நடக்க உள்ள பகல்-இரவு இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) டெஸ்ட் முக்கியமானது. அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஒரு போதும் தோற்றது கிடையாது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அதன் பிறகு விராட் கோலி இல்லாத இந்திய அணி எஞ்சிய மூன்று டெஸ்டுகளிலும் தோற்று தொடரை 0-4 என்ற கணக்கில் இழக்க நேரிடும்.

    காயத்தால் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முதலாவது டெஸ்டில் ஆடாதது இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாகும். புகோவ்ஸ்கி காயத்தால் விலகி விட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணியில் யார் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்பதில் கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது. ஆனாலும் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட் நல்ல நிலையில் உள்ளனர். அது மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை எதிர்கொண்டு எந்த அணியும் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன் குவித்ததில்லை. அதனால் தான் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று சொல்கிறேன்.

    இவ்வாறு வாகன் கூறினார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியுடன் மீண்டும் இணைகிறார்.
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியுடன் விடுவிக்கப்பட்டார். தற்போது நிலைமை சரியாகி விட்டதால் அவர் இன்று ஆஸ்திரேலிய அணியுடன் மீண்டும் இணைகிறார். இந்த தகவலை தெரிவித்த சக வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் நேற்று கூறுகையில், ‘ஸ்டார்க்கின் வருகை உற்சாகம் அளிக்கிறது. எங்களது அணியிலும், பந்து வீச்சு கூட்டணியிலும் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கக்கூடியவர். பிங்க் பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனையை (மொத்தம் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார்) ஒவ்வொருவரும் அறிவர். இந்த வகை பந்தில் அவர் தனித்துவமான பந்து வீச்சாளர். எனவே அவரை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம்’ என்றார்.

    ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை தொடர்ந்து 4 முறை வீழ்த்தியுள்ள ஹேசில்வுட் டெஸ்ட் போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புடன் காத்திருக்கிறார். ‘இது புதிய தொடர். கோலிக்கு எதிராக நன்றாக தொடங்க வேண்டியது முக்கியம். முதலாவது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அவரது விக்கெட்டை நான் வீழ்த்த வேண்டும். அது தான் சிறந்த தொடக்கமாக இருக்கும்’ என்று ஹேசில்வுட் குறிப்பிட்டார்.
    வெலிங்டனில் நடந்த 2வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி.
    வெலிங்டன்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.

    நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 174 ரன்னும், வாக்னர் 66 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்ரியல் , அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56.4 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி, ஜேமிசன் தலா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

    பாலோஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 329 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

    நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 2-வது இன்னிங்சிலும் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்பெல் 68 ரன்னும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 61 ரன்னும், விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வா 57 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 79.1 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    இதனால் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் போல்ட், நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டும், சவுத்தி, ஜேமிசன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹென்றி நிகோலசும், தொடர் நாயகனாக ஜேமிசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை அந்த அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) ஆட்டம் டிராவில் முடிந்தது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை அரங்கேறிய 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிகமான நேரம் (57 சதவீதம்) சென்னையின் எப்.சி. வசமே சுற்றிக்கொண்டிருந்தாலும் எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை. அதே சமயம் 66-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த பொன்னான வாய்ப்பை கவுகாத்தி வீரர் இட்ரிசா சைலா நழுவ விட்டார். முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் டிரா ஆன 11-வது ஆட்டம் இதுவாகும்.

    சென்னை அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. 6-வது ஆட்டத்தில் ஆடிய கவுகாத்தி அணிக்கு இது 4-வது டிராவாகும்.

    இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.
    மயங்க் அகர்வால் உடன் கேஎல் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணியில் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார். மற்றொரு வீரர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. பிரித்வி ஷா, ஷுப்மான் கில் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், ஆஷிஷ் நெஹ்ரா கேஎல் ராகுலைத்தான் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் ‘‘மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்கும் மற்றொரு வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை நான் பலவீனம் என்று அழைக்க மாட்டேன். ஆனால், உறுதியாக இந்த விசயம் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஷுப்மான் கில் அல்லது பிரித்வி ஷாவை நீங்கள் சொல்லலாம்.

    ஆனால், கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என நான் நம்புகிறேன். தற்போதுள்ள ஃபார்மில் கேஎல் ராகுல் ரன்கள் அடித்தால், இந்த பலவீனம் பலமாக மாறும். அவர்தான் தொடக்க வீரர் என்பதில் நான் உறுதியாக இருப்பேன்’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ், லங்கா பிரிமீயர் லீக்கில் தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த நாடு திரும்புகிறார்.
    லங்கா பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கிப்ஸ் செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், பதவியை ராஜினாமா செய்து விட்டு அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    கிப்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக கொழும்பு வரவில்லை. வர்ணனையாளராகத்தான் வந்தார். கொழும்பு அணியின் தலைமை பயிற்சியாளர் வாட்மோர் சொந்த விசயத்திற்காக வெளியேறினார். அதன்பின் கபிர் அலி பதவியாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட, கிப்ஸ் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
    நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
    லோதா கமிட்டி பரிந்துரையின்படி புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ நடத்தும் முக்கியமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனால் கிரிக்கெட் கட்டமைப்புகளை சிறந்த வகையில் உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் மின்சார கோபுர வசதியுடன் ஆறு மைதானங்கள் உள்ளன.

    இந்த நிலையில் சர்வதேச போட்டிகளை நடத்த விரும்புகிறோம். அனுமதியுங்கள் என புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அந்தக் கடிதத்தில் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் அழகான மைதானங்களை கட்டியுள்ளது. மின்சார விளக்கு கோபுரம் வசதி கொண்ட ஆறு மைதானங்கள் உள்ளது. கடந்த சில வருடங்களில் இருந்து நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். இது சிறிய மைதானங்கள் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இரண்டு மண்டலத்தில் உள்ள அணிகளுக்கு பயோ-செக்யூர் வழங்கி, போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம். ஒட்டுமொத்த சையத் முஷ்டக் அலி டி20 தொடரையும் ஆறு தரமான மைதானங்களில் நடத்தலாம். இந்த தொடருக்கான முதல்தர போட்டிகளுக்கான ஆறு மைதானங்களை தர தயாராக இருக்கிறோம்.

    அனைத்து தயராக உள்ளது. இரண்டு மண்டல அணிகள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் தங்கும் வகையில் 4 ஸ்டார் ஓட்டல்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா அணி முந்தைய அணியை விட சிறந்த அணியாக உள்ளது. மூன்று பேர் மிகவும் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக நடக்க இருக்கிறது.

    2018-2019 சீசனில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்தது. ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா அணி மிகவும் வலுவாக உள்ளது. இந்திய அணிக்கு மூன்று பேர் மிரட்டலாக இருப்பார்கள் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடந்த முறையை காட்டிலும் இந்த முறை ஆஸ்திரேலியா முக்கியமான மூன்று வீரர்களை கொண்டுள்ளது. அவர்கள் வார்னர், ஸ்மித், மார்னஸ் லாபஸ்சேன் ஆகியோரை பெற்றுள்ளனர்.

    கடந்த முறையை காட்டில் இந்தத் தொடருக்கான அணி மிகவும் சிறந்தது. உங்கள் அனுபவ வீரர்கள் இருவர் இல்லாதபோது, திடீரென்று அந்த வெற்றிடத்தை உணரலாம். அதைத்தான் ஆஸ்திரேலியாவும் கடந்த சீசனில் உணர்ந்தது’’ என்றார்.
    பார்முலா 1 பந்தயத்தின் இந்த வருடத்திற்கான கடைசி கிராண்ட் பிரி அபு தாபி கிராண்ட் பிரி பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் முதல் இடத்தை பிடித்தார்.
    பார்முலா 1 கார்பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் பல கிராண்ட் பிரியாக நடைபெறும். ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்ற புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான பார்முலா 1-ன் கடைசி கிராண்ட் பிரியும், 17-வது போட்டியுமான அபு தாபி கிராண்ட் பிரி இன்று நடைபெற்றது.

    இதில் ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார். மெர்சிடெஸ் வீரர் போட்டாஸ் 2-வது இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரரும், சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தவறுமான லீவிஸ் ஹாமில்டன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    பார்முலா-1 பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் 347 புள்ளிகள் பெற்றுள்ளார். வால்ட்டெரி போட்டாஸ் 223 புள்ளிகளும, மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 223 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
    அடிலெய்டு பிங்க்-பால் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 17-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. சூரியன் மறையும் நேரத்தில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் பாடு திட்டாட்டம்தான்.

    இந்திய அணி வங்காளதேசத்திற்கு எதிராக ஒரேயொரு பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் விளையாடியுள்ளது.

    அடிலெய்டு டெஸ்டுக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடியது. இதில் மிடில் ஆரடர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பி்ங்க்-பாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என விஹாரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஹாரி கூறுகையில் ‘‘ரெட் பந்தில் விளையாடிய பின்னர், பகல்-இரவு டெஸ்ட் போட்டிற்கான பிங்க்-பாலில் விளையாட பழகுவது மிகவும் சவாலானது. பேட்டிற்கு பந்து சிறந்த முறையில் வருகிறது. முதல் நாளில் சீம் மூவ்மென்ட் இருந்ததாக கருதுகிறேன். இந்த பந்திற்கு ஏற்றபடி பழகுவது மிகவும் சவாலானது. தற்போது இந்திய அணி மிகச் சிறப்பாக தயார்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன்.

    டெஸ்ட் போட்டிக்கு சற்று முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது சிறந்த பயிற்சியாக இருந்து என உணர்கிறேன். நாங்கள் தரமான எதிரணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம்’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்த பாபர் அசாம் காயம் அடைந்ததால், பாகிஸ்தான் அணி மிகப்பெரிய சோகத்தில் உள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 14 நாட்கள் கோரன்டைனில் இருக்கும் பாகிஸ்தான் வீரர்கள், பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்றைய பயிற்சியின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான பாபர் அசாமின் வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் 12 நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டி20 போட்டி வருகிற 18-ந்தேதி, 20-ந்தேி, 22-ந்தேதிகளில் நடக்கிறது. இதனால் பாபர் அசாம் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேனாக பாபர் அசாம் விலகியது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு என அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    பாபர் அசாம் குறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் பாபர் அசாம் தற்போது உலகின் சிறந்த வீரராக உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையில் அவர் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரைக் கண்டு மற்ற அணிகள் பயப்படும் போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக தவறனா நேரத்தில் ஏற்பட்ட காயம் துரதிருஷ்டவசமானது’’ என்றார்.
    நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை உடனடியாக துணைக் கேப்டனாக்க வேண்டும் என கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீஸ் ஸ்மித். இவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார். 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது ஆஸ்திரேலியா வீரர் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த சம்பவத்தில் ஸ்மித்திற்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு வருடம் தடைவிதித்தது. மேலும், ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்க கூடுதலாக ஒரு வருடம் தடைவிதித்தது. கடந்த மார்ச் மாதத்துடன் அவருக்கு தடைவித்து இரண்டு வருடம் முடிவடைந்துவிட்டது.

    இதனால் கேப்டன் பதவியை வழங்க தகுதியாகிவிட்டார். இருந்தாலும் கேப்டன் பதவி கொடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்திய தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் அவரை துணைக் கேப்டனாக்க வேண்டும் என முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘ஒருவர் 2-வது வாய்ப்பை பெறக்கூடாது என்பதற்கான எந்த ஒரு காரணத்தையும் நான் பார்க்கவில்லை. கேப்டன் அல்லது துணைக் கேப்டன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு அவர் சரியான வீரர். அந்த இடத்திற்கு மிகவும் வெளிப்படையான நபர். அவர் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட்டும், தேர்வாளர்களும், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியை வகிக்க தயாராக இருந்தால், அவரை உடனடியாக துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும்’’ என்றார்.
    ×