என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தாலும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து விக்கெட் வீழ்த்தி முத்திரை படைத்தார்.
    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. மழைக் காரணமாக நேற்று 46.5 ஓவர்களே வீசப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும், உஸ்மான் கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.  ஸ்மித், கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மித் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால், கவாஜா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விளையாட முடியாத நிலை ஏறு்பட்டது. இதனால் நீண்ட நாட்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கவாஜா. தொடர்ந்து விளையாடி அவர் 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஸ்டூவர்ட் பிராட்
    ஐந்து விக்கெட் சாய்த்த பிராட்

    பேட் கம்மின்ஸ் 24 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 34 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் சிறப்பாக பந்து வீச ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது.

    ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது எளிதான விசயம், அதே சமயத்தில் உங்கள் கையில் பேட் இருக்கும்போது எதிர்கொள்வது கடினமானது என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரிஷாப் பண்ட் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன்கள் சேர்த்தது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. புஜாரா (53), ரகானே (58) அரைசதம் அடித்த போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஹனுமா விஹாரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது.

    இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருக்கும்போது ரிஷாப் பண்ட் களம் இறங்கினார். அவர் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். களம் இறங்கியதும் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டெர் டஸ்சன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த பந்து ஹெல்மட்டை தாக்கியது. ரபடா வீசிய அடுத்த ஷாட் பிட்சி பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். ஆனால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொறுப்பற்ற தன்மையுடன் ஆட்டமிழந்ததால், ரிஷாப் பண்ட்-ஐ கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

    ரிஷாப் பண்ட் குறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் ‘‘யாராவது ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் எளிதான விசயம். அதேபோல், உங்களுடைய கையில் பேட் கொடுக்கப்பட்டு, எதிரணி பந்து வீச்சை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்போது அது மிகவும் கடுமையான விசயமாக இருக்கும்.

    இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த நிலையில், ரிஷாப் பண்ட் சண்டை போடுவதை விட்டுவிட்டு, மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடுவதைத்தான் நான் விரும்பியிருப்பேன்.

    ரிஷாப் பண்ட்

    என்னைப் பொறுத்த வரைக்கும் ஏமாற்றம் என்பது மிக மிக குறைத்து மதிப்பிடும் சொல் எனக் கருதுவேன். ஏனென்றால், இந்த வகையில் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது கற்றுக் கொள்வது. இந்தியாவில் இளம் வீரர்கள் டீன் எல்கரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தலைசிறந்த அணிக்கெதிராக விளையாடும்போது எளிதான ரன்கள் சேர்த்து விட முடியாது’’ என்றார்.

    டீன் எல்கர் 121 பந்தில் 46 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 122 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.
    அனுமதி மறுப்பால் இரவு முழுவதும் மெல்போர்ன் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தார் ஜோகோவிச்
    மெல்போர்ன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

    எனினும் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரருமான 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வந்தார்.  இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் போட்டியில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. 

    இதற்கிடையே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி விட்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

    இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய விரும்பும் யாராக இருந்தாலும் தேவையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக ஜோகோவிச் விமானம் மூலம் மெல்போர்னின் துல்லாமரைன் விமான நிலையத்தை புதன்கிழமை இரவு வந்தடைந்தார்.

    மருத்துவ விலக்குகளை அனுமதிக்காத விசாவிற்கு அவரது குழு விண்ணப்பித்திருப்பது தெரியவந்த பிறகு,  ஆஸ்திரேலிய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காகக்  அவர் காத்திருந்தார். ஆனால் அவரை ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.  கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக் காட்டி அவருக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய தேவையான பூர்த்தி செய்த ஆதாரங்களை வழங்க தவறியதால் ஜோகோவிச் விசா ரத்துச் செய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து இரவு முழுவதும் மெல்போர்ன் விமான நிலையத்தில் நோவாக் ஜோகோவிச்  சிக்கித் தவித்தார்.
    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது.
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 

    27 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 58 ரன்கள் எடுத்தார். புஜாரா 53 ரன்களும், ஹனுமா விகாரி 40 ரன்களும் சேர்த்தனர். 

    இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மார்க்ராம் 31 ரன்களும், பீட்டர்சன் 28 ரன்களும் சேர்க்க, 3ஆம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

    நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற மேலும் 122 ரன்கள் தேவை, கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. 
    கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த நிலையில், புஜாரா, ரஹானே நிதானமாக ஆடி ரன்கள் குவித்தனர்.
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்களில் சுருண்டது. இதை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்கள் எடுத்து அவுட்டானது.

    2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியாவின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 8, மயங்க் அகர்வால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய புஜாரா, ரஹானே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. புஜாரா 53, ரஹானே 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  

    தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அஸ்வின் 16, ஷர்துல் தாகூர் 28, சமி 0, பும்ரா 77 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி, 2-வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்துள்ளது.  நிதானமாக ஆடிய விஹாரி 40 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

    இதன் மூலம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணியை விட 239 ரன்கள் முன்னிலையில் உள்ளது.  240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்குகிறது.

    சவுரவ் கங்குலியின் மனைவி டோனாவிற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கங்குலி கொரோனாவில் இருந்து மீண்டார். அவரை 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

    இந்நிலையில் தற்போது கங்குலியின் மகள் சனாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். 

    இதை தொடர்ந்து கங்குலியின் மனைவி டோனாவிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    ஜொகன்னஸ்பர்க்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பீட்டர்சன் அதிக பட்சமாக 62 ரன்களும், பவுமா 51 ரன்களும் எடுத்தனர். ‌

    இந்திய ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி 61 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தென் ஆப்ரிக்கா வீரர்கள் எல்கர், பீட்டர்சன், டாசன், பவுமா, வெர்ரின், மார்கோ ஜேன்சன், லுங்கி நிகிடி ஆகியோர் ஷர்துல் தாகூரிடம் சரணடைந்தனர்.

    ஷர்துல் தாகூர் கைல் வெர்ரினின் விக்கெட்டை வீழ்த்தியபோது களத்தில் இருந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தாகூரை பார்த்து,

    ‘யார்ரா நீ, எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன? நீ பால் போட்டாலே விக்கெட் விழும்’ என தமிழிலில் கிண்டலாக பாராட்டினார். அவர் பேசிய வார்த்தைகள் நடுவர் மைக்கின் மூலம் ஒளிபரப்பில் கேட்டது. இதையடுத்து அந்த வீடியோவை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
    ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 3 டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

    ஆ‌ஷஸ் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 
    பும்ரா, முகமது சமி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள். அது எனக்கு விக்கெட்டாக அமைந்தது என ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.
    ஜோகன்னஸ்பர்க்:

    இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன் எடுத்தது. பீட்டர்சன் அதிக பட்சமாக 62 ரன்னும், பவுமா 51 ரன்னும் எடுத்தனர். ‌ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டும், முகமது ‌ஷமி 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் 8 ரன்னும், மயங்க் அகர்வால் 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். புஜாரா 35 ரன்னிலும், ரகானே 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இந்திய அணி தற்போது 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் உள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இரு அணிகளுக்கும் சமமான நிலையில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    ‌ஷர்துல் தாகூர் 61 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் 66 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சாதனையாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஹர்பஜன் சிங் 2011-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் 120 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், தென் ஆப்பிரிக்க மண்ணிலும் சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை ‌ஷர்துல் தாகூர் படைத்துள்ளார்.

    சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக பந்துவீசிய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ‌ஷர்துல் தாகூர் பெற்றார். 1999-2000-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஆண்டி காட்டிக் 46 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.

    அதற்கு அடுத்தபடியாக மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹோக்கர்ட் 2004-05-ம் ஆண்டில் ஜோகன்னஸ் பர்க்சில் 61 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். ‌ஷர்துல் தாகூரும் அவரை போன்றே பந்துவீசி அவருடன் இணைந்து இருக்கிறார்.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தாலும் பந்துவீச்சில் தான் இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை என்று ‌ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது எனது சிறந்த பந்துவீச்சுதான். ஆனாலும் நான் இன்னும் சிறந்த நிலையை அடையவில்லை. முகமது ‌ஷமி மற்றும் பும்ரா அணியின் முன்னணி பவுலர்கள் ஆவார்கள். நன்றாக பந்துவீசினார்கள். ஆனால் அதிர்ஷ்டம் அமையவில்லை. அவர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள். அது எனக்கு விக்கெட்டாக அமைந்தது.

    டெஸ்டில் விளையாட நான் தொடர்ந்து விரும்புகிறேன். தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் என்மீது நம்பிக்கை வைத்தது. இந்தியா போன்ற நாடுகளில் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமானது. இதற்கு அதிகளவில் போட்டி இருக்கிறது.

    புஜாரா தற்போது நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறார்.

    இவ்வாறு ‌ஷர்துல் தாகூர் கூறினார்.

    2வது இன்னிங்சில் 40 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கை 2 விக்கெட்களை மட்டும் இழந்து வங்கதேசம் எட்டியது
    மவுன்ட் மவுன்கானு:

    நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் மவுன்ட் மவுன்கானுவில் நடைபெற்றது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 458 ரன்கள் குவித்து. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், நீல் வாக்னெர் 3 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அடுத்து 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 169 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    அதிகபட்சமாக வில் யங் 69 ரன்களும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.  இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை ருசித்தது.

    கொரோனா தொற்று அதிகரிப்பினால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் தள்ளி வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால் 3வது அலையை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.  மேலும் ஒமைக்ரான் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த நிலையில், நடப்பு 2021-22 பருவத்திற்கான ரஞ்சி கோப்பை, சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
    ஜோகன்னஸ்பெர்க் :

    இந்திய,  தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய
    அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  

    தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க  வீரர்கள் திணறினர்.   முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி சிறப்பான பந்து வீச்சு


    பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி,  61 ரன்கள் விட்டுக்கொடுத்து 7  விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.  இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2ம் இன்னிங்சை தொடங்கியது.  

    அணித் தலைவர் கே.எல் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தர். 2- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு  85 ரன்கள் எடுத்துள்ளது.

    இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புஜாரா 35 ரன்களுடன், ரகானே 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
    ×