என் மலர்
விளையாட்டு
ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 5, ரோகித் சர்மா 6, ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.
துபாய்:
டெஸ்ட் போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் , 3-வது இடத்தில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளனர் .
இதேபோல், பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 2-வது இடத்திலும் , தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 3-வது இடத்திலும், இந்தியாவின் பும்ரா 10-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்...குஜராத் அணியில் ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் தேர்வு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் அனைத்து வகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இன்று ஓய்வு பெற்றார்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் (வயது 39). கேரளாவில் பிறந்த இவர், 2006ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். டோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார்.
இதுவரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார்.
சூதாட்ட குற்றச்சாடுகளால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஸ்ரீசாந்த், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். டுவிட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீசாந்த், இந்தியாவுக்காக விளையாடி எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன், என கூறி உள்ளார்.
“மிகுந்த வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். இந்திய உள்நாட்டு (முதல் வகுப்பு மற்றும் அனைத்து வகை போட்டிகள்) கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தேன். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்றாலும், இந்த நேரத்தில் இந்த முடிவை எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயலாகும். கிரிக்கெட்டின் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்” என ஸ்ரீசாந்த் கூறி உள்ளார்.
இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் ஸ்ரீசாந்த் விளையாடினார். மேகாலயாவுக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போட்டியில் கேரள அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அந்த போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார். அதுவே அவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்தவித சுவாரசியமும் இல்லாமல் அமைந்து விட்டதாக கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ராவல்பின்டி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே ராவல்பின்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னும், இமாம்-முல்-ஹக் 157 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 459 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா, லபுசேன் முறையே 97, 90 ரன்கள் எடுத்தனர்.
நேற்றைய 5-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 252 ரன் எடுத்தது. தொடக்க வீரர்களான ஷபிக் (136 ரன்), இமாம்-முல்-ஹக் (111 ரன்) சதம் அடித்தனர்.
இந்தநிலையில் ராவல்பின்டியின் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட்கம்மின்ஸ் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பொதுவாக பேட்டிங்குக்கும், பந்துவீச்சும் சம அளவில் போட்டி இருக்க வேண்டும். இதுதான் நியாயமானதாக இருக்கும். அப்போதுதான் டெஸ்ட் போட்டிக்கான மதிப்பும் அதிகரிக்கும்.
இந்த ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இதுமாதிரியான ஆடுகளங்களில் விக்கெட் எடுப்பது மிகவும் சவாலானது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எந்தவித சுவாரசியமும் இல்லாமல் டெஸ்ட் போட்டி முடிவு அமைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த டெஸ்ட் போட்டியில் 5 நாட்களில் மொத்தம் 14 விக்கெட்டுகளே விழுந்தன. 1,187 ரன்கள் குவிக்கப்பட்டது.
பாகிஸ்தான்- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி கராச்சியில் தொடங்குகிறது.
ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாசை குஜராத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது.
அகமதாபாத்:
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் 28-ந் தேதி மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் குஜராத் அணியில் உள்ள இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார். தொடர்ச்சியாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் விளையாடி வருவதால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாகவும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் கூறி அவர் விலகுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாசை குஜராத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது. அவர் 20 ஓவர் போட்டிக்கேற்ற சிறந்த வீரராக கருதப்படுகிறது. அவரை ஒப்பந்தம் செய்ய கிரிக்கெட் வாரிய ஒப்புதலுக்காக குஜராத் அணி காத்திருக்கிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 32-ல் நியூசிலாந்தும், 20-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன.
ஹாமில்டன்:
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (வியாழக்கிழமை) ஹாமில்டனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வதம் செய்தது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் மந்தனா, சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
பந்து வீச்சில் ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜூலன் கோஸ்வாமி, சினே ராணா அசத்தினார்கள். அந்த வெற்றி உத்வேகத்தை தொடர இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூர் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவின் சவாலை முறியடிக்க நியூசிலாந்து அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இதுவரை 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 32-ல் நியூசிலாந்தும், 20-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேம்பல்லே ஆட்ட வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணி களமிறங்கி ஆடியது.
50 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பர் எஸ் கேம்பல்லே 66 ரன்கள் குவித்தார். நேசன் 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக டாமி பியூமண்ட் 46 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாமிலியா கானல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 66 ரன்கள் எடுத்த எஸ் கேம்பல்லே ஆட்ட வீராங்கனை விருதை தட்டிச்சென்றார்.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன்கள் வித்தியாத்தில் நியூசிலாந்தை வீத்தி த்ரில் வெற்றி பெற்றது. இரண்டும் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியே வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூர் அணி கேப்டன் 12-ந் தேதி அறிவிப்பு
ஜெர்மனி டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், கூடுதலாக ரூ.19 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
உலக டென்னிஸ் தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) கடந்த மாதம் மெக்சிகோவில் நடந்த அகபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடிய போது சர்ச்சையில் சிக்கினார். இரட்டையர் பிரிவில் பிரேசிலின் மார்செலோ மெலோவுடன் இணைந்து ஆடிய அவர் முதலாவது சுற்றில் லாயிட் கிளாஸ்பூல் (இங்கிலாந்து)- ஹெலியாவாரா (பின்லாந்து) இணையிடம் போராடி தோல்வியை தழுவினார்.
இந்த ஆட்டத்தின் போது சில புள்ளிகளை நடுவர் எதிர் ஜோடிக்கு வழங்கிய போது ஆட்சேபித்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இறுதியில் நடுவரை அச்சுறுத்தும் விதமாக அவர் அமர்ந்திருந்த சேர் மீது 4 முறை டென்னிஸ் பேட்டால் ஆவேசமாக ஓங்கி அடித்தார். அவரது செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் அந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இது குறித்து ஆண்கள் டென்னிஸ் சம்மேளனம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் 24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், கூடுதலாக ரூ.19 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓராண்டு காலம் அவரது நடத்தை தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் அவர் ஏதாவது தவறு செய்தால் கடும் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-7 என்ற நேர்செட்டில் பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
முல்கேம் அன்டெர் ரூ:
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 13-21, 21-7 என்ற நேர்செட்டில் பிரான்சின் பிரைஸ் லிவெர்டெஸ்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-8, 21-7 என்ற நேர்செட்டில் பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். பூசனுக்கு எதிராக சிந்து பெற்ற 15-வது வெற்றி இதுவாகும்.
இந்தியா-ஜெர்மனி பெண்கள் அணிகள் இடையிலான இரண்டு லீக் ஆட்டங்கள் திட்டமிட்டபடி புவனேஸ்வரில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்:
9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான இரண்டு லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஜெர்மனி அணியின் வீரர்கள் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜெர்மனி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான இந்த இரண்டு ஆட்டமும் தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியை நடத்துவதற்கான மாற்று தேதியை முடிவு செய்யும் பணியை இந்தியா மற்றும் ஜெர்மனி ஆக்கி சம்மேளனங்கள் இணைந்து செய்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதே சமயம் இந்தியா-ஜெர்மனி பெண்கள் அணிகள் இடையிலான இரண்டு லீக் ஆட்டங்கள் திட்டமிட்டபடி புவனேஸ்வரில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பெண்கள் அணி நேற்று இந்தியா வந்தடைந்தது.
அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக எனது தந்தையின் அறிவுரையின்படி சிறு வயதில் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசவும் பழகினேன் என அஸ்வின் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கபில்தேவை (434 விக்கெட்) பின்னுக்கு தள்ளிய தமிழக சுழற்பந்து வீச்சாளர் 35 வயதான அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
28 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் (431 விக்கெட்) சாதனையை கபில்தேவ் முறியடித்த போது நான் எனது தந்தையுடன் சேர்ந்து பார்த்து உற்சாகம் அடைந்தேன். கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கையை தாண்டுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஏனெனில் நான் 8 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது பேட்ஸ்மேனாக வேண்டும் என்றே விரும்பினேன்.
1994-ம் ஆண்டில், பேட்டிங் தான் எனது பிரதான ஆசையாக இருந்தது. அச்சமயம் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கபில்தேவ் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அடுத்த கபில்தேவாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக எனது தந்தையின் அறிவுரையின்படி சிறு வயதில் பேட்டிங் மட்டுமின்றி மிதவேகமாக பந்து வீசவும் பழகினேன். காலப்போக்கில் நான் ஆப்-ஸ்பின்னராக மாறிய பிறகு, இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி விட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியில் கால்பதிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்த சாதனையை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு அஸ்வின் கூறினார்.
சமீபத்தில் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு புகழாரம் சூட்டிய அஸ்வின், ‘உலக கிரிக்கெட் அரங்கில் சுழற்பந்து வீச்சை முன்னெடுத்து சென்றவர் வார்னே தான். கிரிக்கெட் உலகில் சுழற்பந்து வீச்சிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற நிலையை கொண்டு வந்தவர். மைக்கேட்டிங்குக்கு அவர் வீசிய பந்து குறித்து எல்லோரும் பேசுவார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை 2005-ம் ஆண்டில் ஆஷஸ் தொடரில் ஆன்ட்ரூ ஸ்டிராசுக்கு அவர் வீசிய பந்து வீச்சு என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த தொடரில் கிட்டத்தட்ட தனிநபராக அணியை மீட்டெடுக்க போராடினார். பழகுவதற்கு இனிமையான ஜாலியான ஒரு மனிதர் வார்னே’ என்றார்.
இதையும் படியுங்கள்...அஸ்வின் 500 விக்கெட் எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை - கபில்தேவ்
வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் பென் போக்ஸ், பேர்ஸ்டோவ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தது.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் அசத்தலாக பந்து வீசினர்.
இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
அலெக்ஸ் லீஸ் 4 ரன், கிராலே 8 ரன், கேப்டன் ஜோ ரூட் 13 ரன், லாரன்ஸ் 20 ரன்னில் அவுட்டாகினர். 48 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இங்கிலாந்து.
அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவுக்கு பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பேர்ஸ்டோவ் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். பென் ஸ்டோக்ஸ் 36 ரன்னும், பென் போக்ஸ் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 86 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 109 ரன்னுடனும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், சீல்ஸ், ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் நவ்மான் அலி 6 விக்கெட் வீழ்த்தினார்.
ராவல்பிண்டி:
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அசார் அலி 185 ரன்னிலும், இமாம் உல் ஹக் 157 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 459 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வார்னர் 68 ரன், உஸ்மான் கவாஜா 97 ரன், லபுஸ்சனே 90 ரன், ஸ்மித் 78 ரன்னில் அவுட்டாகினர்.
பாகிஸ்தான் அணி சார்பில் நவ்மான் அலி 6 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 17 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடி சதமடித்து அசத்தியதுடன், விக்கெட் விழாமலும் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 136 ரன்னும், இமாம் உல் ஹக் 111 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதனால் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு இன்னிங்சிலும் சதமடித்து அசத்திய இமாம் உல் ஹக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.






