என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்று தீர்ந்து விட்டது.

    சிட்னி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.

    நாளைய தினம் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சுற்று ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் இலங்கை- நமிபியா (இந்திய நேரப்படி காலை 9.30 மணி), நெதர்லாந்து-ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) அணிகள் மோதுகின்றன. இதையொட்டி போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் முழுவீச்சில் செய்துள்ளன.

    ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது குறித்து ஐ.சி.சி. உலக கோப்பை போட்டிக்கான தலைமை நிர்வாகி மிட்செல் என்ரைட் நேற்று கூறுகையில் , 'உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியும் ஒன்று. இந்த போட்டிக்காக இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக (90 ஆயிரத்திற்கும் மேல் இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியம்) விற்று தீர்ந்து விட்டது. பின்னர் கூடுதலாக இணைக்கப்பட்ட சொகுசு டிக்கெட்டுகளும் 10 நிமிடத்திற்குள் காலியானது. இதே போல் சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் தொடக்க ஆட்டத்திற்கான (அக்.22-ந்தேதி, சிட்னி) டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது.

    தொடக்க நாளில் நடக்கும் இரு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இன்னும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. இவ்விரு ஆட்டங்களுக்கும் மற்றும் சூப்பர் 12 சுற்றுக்கான வார இறுதி நாட்களிலும் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதை நினைக்கும்போதே உற்சாகம் அளிக்கிறது. அக்டோபர் மாதத்தில் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்புவது அற்புதமானது. இன்னும் கணிசமான டிக்கெட்டுகள் உள்ளன. டிக்கெட் கிடைக்காதவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அத்துடன் டிக்கெட்டுகளின் மறுவிற்பனை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அதிகாரபூர்வ இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்குவது மற்றும் விற்பது பாதுகாப்பானது' என்றார்.

    • டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதில் பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    டி 20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 163 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள் முத்தரப்பு தொடரில் பங்கேற்றன. லீக் சுற்றுகளின் முடிவில் முத்ல் இரு இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 38 பந்தில் 59 ரன்கள் குவித்தார்.

    164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மொகமது நவாஸ் 38 ரன்னும், மொகமது ரிஸ்வான் 34 ரன்னும் எடுத்தனர். ஹைதர் அலி அதிரடியாக ஆடி 31 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடர் கோப்பையை கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது மொகமது நவாசுக்கும், தொடர் நாயகன் விருது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கும் வழங்கப்பட்டது.

    • இந்தியா வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
    • காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பும்ரா விலகினார்.

    8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி வரும் 23-ந்தேதி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

    இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம் பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள ஷமி, இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர்.
    • பாரீசில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

    எகிப்த் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொண்ட 18 வயதான இந்திய வீரர் ருத்ராங்கஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் இத்தாலி வீரர் டானிலோ டென்னிஸ் சொலாஸ்ஸோவை 17-13 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.

    இதன் மூலம் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச் சூடும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

    • கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது.
    • கங்குலிக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.

    முன்னாள் கேப்டன் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கிறார். அவரது பதவி காலம் அடுத்த வாரம் முடிகிறது. கங்குலிக்கு விருப்பம் இருந்த போதிலும் 2-வது முறையாக அவருக்கு பதவி வழங்க மறுக்கப்பட்டது.

    அதே நேரத்தில் ஜெய்ஷா கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் மேலும் 3 ஆண்டு நீடிக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்.

    கங்குலிக்கு பதிலாக ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவராவது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோஜர் பின்னி கிரிக்கெட் வாரிய தலைவராவதை வரவேற்கிறேன். உலக கோப்பையை வென்ற (1983) அணியில் இடம்பெற்ற சக வீரர் அந்த பொறுப்பை ஏற்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அவர் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தார். ரோஜர் பின்னி பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஏற்க எல்லா தகுதியும் இருக்கிறது. அவர் ஒரு உலக கோப்பையை வென்றவர்.

    நேர்மையான அவர் நல்ல குணாதியசங்களை பெற்றவர். மைதானத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக ரோஜர் பின்னியிடம் வலியுறுத்துவோம்.

    கங்குலி 2-வது முறையாக கிரிக்கெட் வாரிய தலைவராக விரும்பினார் என்று தகவல்கள் வெளியானது. அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை.

    இன்றைக்கு நான் எதையாவது செய்கிறேன் என்றால் இன்னும் 3 ஆண்டுக்கு நான் அதையே செய்வேன் என்பது கிடையாது. புதியவர்கள் வருவார்கள், பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு விதத்தில் ஆரோக்கியமானது.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

    • பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரைசதம் விளாசினார்.
    • இதன்மூலம் பாபர் அசாம் விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    இதில், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதம் விளாசினார். இதன்மூலம் அவர் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

    நேற்றைய போட்டியில் பாபர் அசாம் 40 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த ஆசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனை பாபர் அசாம் முறியடித்தார்.

    விராட் கோலி இந்த மைல்கல்லை 261 இன்னிங்சில் எட்டினார். ஆனால் பாபர் அசாம் தற்போது 251 இன்னிங்சில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார்.

    • எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக உள்ளார்.
    • கிரிக்கெட்டில் தனது ரோல் மாடல் எப்போதுமே சச்சின்தான் என உருக்கத்துடன் கூறினார்.

    புதுடெல்லி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள டோனிக்குச் சொந்தமான எம்.எஸ்.டோனி குளோபல் ஸ்கூல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுடன் டோனி கலந்துரையாடினார் தோனி. அப்போது ஒருவர், உங்களுடைய கிரிக்கெட் ரோல் மாடல் யார்? எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

    கிரிக்கெட்டில் எனது ரோல் மாடல் எப்போதும் சச்சின் டெண்டுல்கர்தான். உங்களைப் போலவே நானும் சச்சின் விளையாடுவதைப் பார்த்து, எப்போதும் அவரைப் போல விளையாட வேண்டும் என நினைத்தேன். பின்னர்தான் நான் உணர்ந்தேன். என்னால் அவரைப் போல விளையாட முடியாது என்று. என் இதயத்தில் அந்த ஆசை எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன

    • வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள்..
    • நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.

    இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். ஒருபக்கம் ஜெய் ஷாவுக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல் கங்குலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அரசியல் சர்ச்சையாக உருவெடுத்து இருந்தது.

    அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-ன் தலைவர் பதவிக்கான தேர்தலும் விரைவில் வரவுள்ளது. எனவே இந்தியாவின் சார்பில் சவுரவ் கங்குலியை அந்த பதவிக்கான தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்துள்ளதால் அவர் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்காமல் இருந்த சவுரவ் கங்குலி தற்போது இது குறித்து மனம் திறந்துள்ளார்.

    இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிசிசிஐ தலைவர் பதவி குறித்து கங்குலி பரபரப்பாக பேசியதாவது:-

    பிசிசிஐ-யில் நான் நீண்ட காலமாக நிர்வாகியாக இருந்தேன். இனி அதிலிருந்து விலகி வேறு ஒரு புதிய பாதையில் செல்ல இருக்கிறேன். நீங்கள் எப்போதும் வீரராகவும், நிர்வாகியாகவும் இருக்க முடியாது. ஆனால் இரண்டு பணிகளையும் செய்தது நன்றாக இருந்தது.

    வாழ்க்கையில் நான் எதைச் செய்திருந்தாலும், இந்தியாவுக்காக விளையாடியது தான் என்னுடைய சிறந்த நாட்கள். நான் பிசிசிஐயின் தலைவராக இருந்தேன். இனி இதைவிட மேலும் பெரிய விஷயங்களைச் செய்வேன். அதே போல் நீங்கள் ஒரே நாளில் அம்பானியாகவோ அல்லது நரேந்திர மோடியாகவோ மாறிவிட முடியாது.

    அது போன்ற உயரத்திற்கு செல்வதற்கு நீங்கள் வருட கணக்கில் உழைக்க வேண்டும். ராகுல் டிராவிட் ஒரு நாள் அணியில் இருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்ட போது நான் அவருக்கு ஆதரவாக நின்றேன். விளையாட்டை பொறுத்தவரை நான் அடித்த ரன்களையும் கடந்து , பலர் மற்ற விஷயங்களையும் நினைவில் கொள்கிறார்கள். உங்கள் அணியினருக்காக நீங்கள் ஒரு தலைவராக என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இலங்கை அணி அபாரமான பீல்டிங் செயதது.
    • டி20 போட்டிகளில் இந்திய அணியின் தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் 16 அணிகள் போட்டி போட காத்திருக்கின்றன.

    இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற உறுதியான நம்பிக்கை பெரும்பாலான இந்திய ரசிகர்களிடம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது ஆரம்பத்திலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார் போன்றவர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசுபவர்களாக இருப்பதுடன் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர்.எனவே இத்தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறை சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

    இந்நிலையில் பேட்டிங், பவுலிங் என்பதைத் தாண்டி உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:-

    இந்த அணியுடன் கடந்த 6 -7 வருடங்களாக நான் இருந்துள்ளேன். முதலில் பயிற்சியாளராக இருந்த நான் தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ளது. 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவ், 5-வது இடத்தில் ஹர்டிக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட், 6-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் இருப்பது பேட்டிங் துறையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    இந்திய அணியின் அர்தீப்சிங் கேட்ச் மிஸ் செய்த காட்சி
    இந்திய அணியின் அர்தீப்சிங் கேட்ச் மிஸ் செய்த காட்சி

    ஆனால் பீல்டிங் துறையில் இப்போதில் இருந்தே இந்தியா கடுமையான பயிற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாக பீல்டிங் துறையில் இந்திய அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெனில் அதில் மிச்சப்படுத்தும் 15- 20 ரன்கள் வெற்றியில் உங்களை காப்பாற்றும். இல்லையேல் ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் பேட்டிங் செய்யும் போது எக்ஸ்ட்ராவாக 15 - 20 ரன்கள் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

    இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்சின் அற்புதமான பீல்டிங்
    இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்சின் அற்புதமான பீல்டிங்

    மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் மாயாஜால பீல்டிங் செய்கின்றன. குறிப்பாக சமீபத்திய ஆசிய கோப்பையில் இலங்கை பீல்டிங் துறையில் என்ன செய்தது என்பதை பாருங்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அபாரமான பீல்டிங் செய்ததன் காரணமாகவே குறைந்த அளவிலான வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்தனர்

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்தலைவாஸ் முதல் போட்டியில், குஜராத்திடம் டிரா செய்தது.
    • இன்று 3 போட்டிகள் நடக்கிறது.

    புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூரு, புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 3 போட்டிகள் நடக்கிறது.

    இரவு 7.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-யு மும்பா மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் முதல் போட்டியில், குஜராத்திடம் டிரா செய்த நிலையில் 2-வது ஆட்டத்தில் அரியானாவிடம் தோல்வி அடைந்தது.

    இன்று வெற்றிக்கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இரவு 8.30 மணிக்கு அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், 9.30 மணிக்கு குஜராத் -புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

    ×