என் மலர்
விளையாட்டு
- இந்தியா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- நியூசிலாந்து 5 வெற்றி, 4 தோல்விகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.
இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வென்று 18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா 8-வது முறையாக அரைஇறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று இருந்தது.
அதற்கு நாளைய அரை இறுதியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண் என்பதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
அது நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. அந்த அணி நாக்அவுட் சுற்றில் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரைஇறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.
வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். முதல் 15 ஓவர் பேட்டிங் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்யும்.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம் பெறு வார்கள்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.
விராட் கோலி 594 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 5 அரை சதமும் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் டெண்டுல்கரின் 49 செஞ்சுரி சாதனையை முறியடிப்பார். விராட் கோலி சமீபத்தில்தான் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து இருந்தார்.
ரோகித் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 503 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இது தவிர ஷ்ரோயாஸ் அய்யர் 421 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), லோகேஷ் ராகுல் 347 ரன்னும் (1 சதம், 1 அரை சதம்), சுப்மன் கில் 258 ரன்னும் (3 அரைசதம்) எடுத்து நல்ல நிலையில் உள்ளனர்.
இந்திய அணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்தில் சிறப்பான நிலையில் இருக்கிறது. மிகவும் முக்கியமான அரைஇறுதியில் பந்துவீச்சு நன்றாக அமைய வேண்டும்.
பும்ரா 17 விக்கெட்டும், முகமது சமி, ஜடேஜா தலா 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ், 14 விக்கெட்டும், முகமது சிராஜ் 12 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். சமிக்கு முதல் 4 போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆட்டத்தில்தான் அவர் 16 விக்கெட்டை எடுத்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே விக்கெட் எடுக்கவில்லை.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 2015, 2019 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை இழந்தது. அந்த அணி 9-வது தடவையாக அரைஇறுதியில் விளையாடுகிறது.
நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது 4 போட்டியில் தோற்றது.
இந்தியாவை போலவே நியூசிலாந்தும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (566 ரன், 3 சதம், 2 அரை சதம்), மிச்சேல் (418 ரன் 1 சதம், 2 அரை சதம்), கான்வே (357 ரன்), பிலிப்ஸ் மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
சான்ட்னெர் (16 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்), பெர்குசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- என்னுடைய சிறந்த நண்பரிடம் இருந்து தீபாவளி டிரிம் எனப்பதிவு.
- வாகன் செயலை பாராட்டி கருத்து பதிவிட்டு வரப்படுகிறது.
இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
மைக்கேல் வாகன் மும்பையில் உள்ளார். அவர் மும்பை ஆர்மிஸ்டன் சாலையில் மரத்தடியில் அமர்ந்து முடி வெட்டிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா். வீடியோவுடன் "என்னுடைய சிறந்த நண்பர் தினஜயாலிடமிருந்து தீபாவளி பார்ட்டி டிரிம் மற்றும் தலை மசாஜ்" எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டரில் சேவ் செய்யும் படத்தையும் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய நபரான மைக்கேல் வாகன் மரத்தடியில் அமர்ந்து சாலையோர நபரிடம் முடி வெட்டிய அவரது செயலை பெரும்பாலானோர் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள். அதனுடன் அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
- ஹர்திக் பாண்ட்யா காயத்தால் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்துகிறது.
- நெதர்லாந்துக்கு எதிராக 9 பேர் பந்து வீசினர். விராட் கோலி, ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணி பும்ரா, சிராஜ், முகமது சமி, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா காயத்தால் வெளியேறியதால் 6-வது பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடி வருகிறது. ஒருவேளை இந்த ஐந்து பேர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று பந்து வீச்சாளருக்கு என்ன செய்யும்? என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அடிக்கடி முன்வைப்பது உண்டு.
பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுக்கு மேல் பயன்படுத்தும் அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இல்லை. ஆனால், நெதர்லாந்துக்கு எதிராக விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் பந்து வீசினர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர்.
எல்லோரையும் பந்து வீச வைத்தது ஏன்? என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இதுதொடர்பாக கூறுகையில் ''இது போன்ற சில விசயங்களை செய்து பார்க்க வேண்டும் என எங்கள் மனதில் இருந்தது. இதுபோன்ற வாய்ப்புகளை அணியில் உருவாக்க விரும்பினோம். தற்போது எங்கள் அணி 9 பேர் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் நாங்கள் சில விசயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் வைடு யார்க்கர்கள் வீசினார்கள். இது தேவையில்லை. என்றாலும் அவர்கள் செய்து பார்த்தார்கள்'' என்றார்.
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ரோகித் சர்மா சுமார் ஏழு வருடங்கள் கழித்து பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியில் விளையாடும் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளை கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்) 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
அதில் இந்திய அணி கேப்டனும், அதிரடி வீரருமான ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேவேளையில் விராட் கோலி, பும்ரா, முகமது சமி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.
இவர்களுடன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவிந்த்ரா, எய்டன் மார்கிராம், மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், ஆடம் ஜம்பா, தில்சன் மதுஷங்கா ஆகியோர் இடம பிடித்துள்ளனர்.
- பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.
- இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக மோர்கல் இணைந்தார்.
இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் லீக் போட்டியுடனே வெளியேறியது. இங்கிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறாத நிலையில் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு.
- அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்துள்ளது ஐ.சி.சி.
இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள், இறுதிப் போட்டி நடைபெற இருக்கின்றன.
இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் 4 வெற்றிகளை பெற்றது.
குறிப்பாக இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தன. 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றிபெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெறாத முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியதும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டின் அரசு கலைப்பதாக அறிவித்தது.
மேலும், இலங்கைக்கு உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த கேப்டன் அர்ஜுன ரணதுங்காவை இடைக்கால தலைவராக நியமித்தது.
கிரிக்கெட் வாரியம் விவகாரத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை இலங்கை அணியால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.
இந்த நிலையில் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ஜெய் ஷா குறித்து அர்ஜுன ரணதுங்கா கூறுகையில் ''இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு இடையிலான தொடர்பால், அவர்கள் (பிசிசிஐ) இலங்கை கிரிக்கெட் போர்டை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
இலங்கை கிரிக்கெட்டை ஜெய் ஷா நடத்தி வருகிறார். இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது. ஏனென்றால், ஜெய் ஷாவிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு நபர் இந்தியாவில் இருந்து இலங்கை கிரிக்கெட்டை வழிநடத்தி வருகிறார். அவரது தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்தவராக உள்ளார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.
- முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த ஆட்டத்தை பார்க்கும் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கை பார்த்த மாதிரி உள்ளதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

உலக கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவைப் போல் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். நாம் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் மற்றும் பாபர் அசாம் பற்றி பேசுகிறோம். ஆனால் இவர் வித்தியாசமானவர். அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்குகிறார்.
இன்சமாம் உல் ஹக் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் நேரம் இருக்கும். அதேபோன்று ரோகித் சர்மாவிற்கும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடும்போது கூடுதலான நேரம் கிடைக்கிறது. அவரது கை மற்றும் கண்களின் பார்வையும் வெகு சிறப்பாக இருப்பதால் அவரால் எளிதாக வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாட முடிகிறது. அவர் இப்படி ஆட்டத்தின் துவக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவிப்பதால் பின்னால் வரும் வீரர்களுக்கும் ஆட்டம் சாதகமாக இருக்கிறது.
எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது. ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருக்கும்போது எதிரணியில் இருக்கும் பவுலர்களுக்கு நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 503 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதால் அணிக்கும் நல்ல ஸ்கோர் கிடைக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 307 ரன்களை ரோகித் சர்மா அடித்து அசத்தியுள்ளார்.
- கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 6 விக்கெட் இருந்தது.
- கேட்ச் மூலம் 4 விக்கெட், போல்டு மூலம் இரண்டு விக்கெட் கைப்பற்றினார் பந்து வீச்சாளர்.
ஆஸ்திரேலியாவில் 3-வது டிவிசன் போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
காரேத் மோர்கன் மாவட்ட கிரிக்கெட் கிளப் அணியான முட்கீரபா நெராங்காவின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சர்பர்ஸ் பாரடைஸ் அணிக்கெதிராக விளையாடினார்.
முதலில் விளையாடிய முட்கீரபா நெராங்கா 177 ரன்கள் எடுத்தது. பின்னர் சர்பர்ஸ் பாரடைஸ் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 40 ஓவர்கள் கொண்ட போட்டியில் பாரடைஸ் அணி 39 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது. கடைசி ஓவரை காரேத் மோர்கன் வீசினார். யாரும் எதிர்பாராத வகையில் ஆறு பந்துகளிலும் விக்கெட் வீழ்த்தினார். இதனால் சர்பர்ஸ் பாரடைஸ் அணி 174 ரன்களில் ஆல்-அவுட் ஆகி தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் ஒரே ஓவரில் அனைத்து பந்துகளிலும் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை காரேத் மோர்கன் படைத்துள்ளார். இதில் முதல் நான்கு விக்கெட்டுகளையும் கேட்ச் மூலமாகவும், கடைசி இரண்டு விகெ்கெட்டுகளை போல்டு மூலமாகவும் வீழ்த்தினார்.
தொழில்முறை கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் நீல் வாக்னர் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். வங்காளதேசம வீரர் அல்-அமின் ஹொசைன், இந்தியாவின் அமிமன்யூ மிதுன் ஆகியோரும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
- கவாஸ்கர், டெண்டுல்கர், கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பெருமையை பெற்றுள்ளனர்.
- இவருடன் டயானா எடுல்ஜி, அரவிந்த டி சில்வா ஆகியோரும் பட்டியலில் இணைந்து உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், ஐசிசி அவர்கள் பெயர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கும். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், வீருாங்கனை டயனா எடுல்ஜி, இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா ஆகியோர் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களுடன் இந்த பட்டியலில் 112 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பெடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள சேவாக், இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார். சேவாக் 103 டெஸ்ட், 251 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 23 சதங்களும், ஒருநாள் போட்டியில் 15 சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 219 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 8586 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8273 ரன்களும் அடித்துள்ளார்.
- தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி.
- நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி 9-வது வெற்றியை பெற்றது. இதையொட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' பதிவில் கூறி இருப்பதாவது:-
தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இதேபோல அரை இறுதியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பீல்டிங் பயிற்சியாளர் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறார்.
- சிறந்த பீல்டருக்கு ஜடேஜா, கேஎல் ராகுல், சூர்யகுமார் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பீல்டிங் பயிற்சியாளர் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறார்.
அதன்படி நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டருக்கான விருதுக்கு 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். அதில் ஜடேஜா, கேஎல் ராகுல், சூர்யகுமார் ஆகியோர் இருந்தனர்.

இந்த விருதை மைதான ஊழியர்கள் மூலம் அறிவித்தார். அவர்கள் சூர்யா என்ற பெயர் பலகையை வைத்து வித்தியாசமாக தெரிவித்தனர். இந்த விருதை பெற்ற சூர்யகுமார் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
Finally ? SKY won Best fielder medal????
— Roman (@SkyXRohit1) November 13, 2023
What a Vibe in Dressing Room??#RohitSharma #SuryakumarYadav #TunnelCollapsed #INDvNED गोवर्धन पूजा #BadhteChalo
AQI 999 #DelhiPollution #शुभ_दीपावली #Hyderabadpic.twitter.com/gn9bYmcYNC
- தீபாவளி பண்டிகையை ரிஷப் பண்ட், மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.
- ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் டோனி குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.
டோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று கொடுத்துள்ளார். ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த கார் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட், டோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.






