என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார்.
    • ரோகித் சர்மா 31 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன் இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்தார்.

    இன்று நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    • ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை.
    • ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து சாதனை.

    உலகக் கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

    இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 50 ரன்களை கடப்பது இது 8-வது முறையாகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003-ல் 7 முறை அடித்திருந்தது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.

    ஷாகில் அல் ஹசன் 2019-ல் 7 முறையும், ரோகிர் சர்மா மற்றும டேவிட் வார்னர் ஆகியோர் 2019-ல் தலா 6 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    மேலும், 80 ரன்களை தொட்டபோது இந்த தொடரில் 674 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் இதற்கு முன் 2003-ல் 673 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    ஹெய்டன் 2007-ல் 659 ரன்களும், ரோகித் சர்மா 2019-ல் 648 ரன்களும், டேவிட் வார்னர் 2019-ல் 647 ரன்களும் எடுத்துள்ளனர்.

    • 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
    • 14,234 ரன்களுடன் குமார் சங்கக்காரா 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 28 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் 13,705 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ரிக்கி பாண்டிங் 13,704 ரன்கள் எடுத்து இதற்கு முன்னதாக 3-வது இடத்தில் இருந்தார். தற்போது விராட் கோலி அவரை 4-வது இடத்திற்கு தள்ளியுள்ளார். சச்சின் தெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதல் இடத்திலும், 14,234 ரன்களுடன் குமார் சங்கக்காரா 2-வது இடத்தில் உள்ளார். சனத் ஜெயசூர்யா 13,430 ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனை.
    • பலமுறை தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை.

    உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார்.

    விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு (cramps) ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

    இந்த நிலையில், நாளைய அரையிறுதி போட்டி குறித்து கம்மின்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "மேக்ஸ்வெல் விளையாட தயாராக உள்ளார். நேற்று அவருக்கு சற்று வலி இருந்தது. அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என தெரிந்து கொள்ள பலமுறை ஸ்கேன் எடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக அமைந்துள்ளது. நாளை டாஸ் சுண்டும்போது ஆடும் லெவன் அறிவிக்கப்படும்" என்றார்.

    • உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸ்.
    • ஒரே உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 3-வது ஓவரில ஒரு சிக்ஸ் அடித்தார். 4-வது ஓவரிலும் சிக்ஸ் ஒன்று பறக்கவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து 5-வது ஓவரிலும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸ் உலகக் கோப்பையைில் அவரின் 50-வது சிக்ஸ் ஆகும். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 49 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். மேக்ஸ்வெல் 43 சிக்ஸ், டி வில்லியர்ஸ் 37 சிக்ஸ், டேவிட் வார்னர் 37 சிக்ஸ் அடித்துள்ளனர்.

    மேலும் இந்த உலகக் கோப்பையில் இது அவருடைய 27-வது சிக்ஸ் ஆகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    கிறிஸ் கெய்ல் 2015-ல் 26 சிக்ஸ் அடித்துள்ளார். 2019-ல் மோர்கன் 22 சிக்ஸ், 2023-ல் மேக்ஸ்வெல் 22 சிக்ஸ், 2015-ல் டி வில்லியர்ஸ் 21, 2023-ல் டி காக் 21 சிக்ஸ் அடித்துள்ளனர்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
    • நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.
    • 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.

    லாகூர்:

    உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டும் வென்று, 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், உமர் குல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அப்துல் ரசாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ரசாக், யூனிஸ் கான் நல்ல கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு உத்வேகத்தையும், உறுதியையும் வழங்கினார். இப்போது இங்கு இருக்கும் அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசி வருகிறோம்.

    பாகிஸ்தான் வீரர்களில் பெரும் கோடீஸ்வரராக இருப்பவரும் கோலி கிட்ட நெருங்கவே முடியாது.

    உண்மையில் பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்டி விளையாட வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை.

    பக்தியுள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை ஒருவர் திருமணம் செய்தால் அது சாத்தியமில்லை என கிண்டலாக கருத்து தெரிவித்தார்.

    அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது பெயர் அப்துல் ரசாக். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நான் கிரிக்கெட் மற்றும் பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேசும்போது நான் ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் இன்னொரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்பினேன். அதைச் செய்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
    • அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.

    இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா்.

    • உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார்.
    • மொத்தம் 565 ரன்கள் எடுத்துள்ள அவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

    இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.

    23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

    இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களைக் கலந்து ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியதாக செய்திகள் வெளியானது.

    இந்நிலையில், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் பெயரை கலந்து தமது மகனுக்கு பெயர் சூட்டவில்லை என ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

    ரச்சின் பிறந்தபோது என்னுடைய மனைவி தான் இந்தப் பெயரை பரிந்துரைத்தார். அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெயர் நன்றாக, எளிதாக, சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்துதான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.

    ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் அவருக்கு இந்தப் பெயரை சூட்டவில்லை என தெரிவித்தார்.

    • மும்பையில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.

    இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள் மற்றும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால், ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

    உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நாளை நடைபெறுகிறது.
    • வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இன்று மதியம் இந்திய அணி மும்பை வந்தடைந்தது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா முதல் உலக கோப்பையை (1983) வென்றபோது பாதி பேர் பிறக்கவில்லை. அதன்பின், இரண்டாவது உலக கோப்பையை வென்றபோது (2011) பாதி பேர் கிரிக்கெட் விளையாடவில்லை.

    எங்களைப் பொறுத்தவரை தற்போதைய வீரர்களின் மனநிலை, இன்று என்ன நடக்கக்கூடும் என்பதில் மிகவும் அதிகமாக உள்ளது.

    கடந்த உலக கோப்பை அல்லது முதல் உலக கோப்பையை நாங்கள் எப்படி வென்றோம் என்பதைப் பற்றி அவர்கள் பேசுவதை நான் பார்க்கவில்லை.

    தற்போது எவ்வாறு சிறந்து விளங்கலாம், தாங்கள் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பதில் அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் கவனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும். முதல் ஆட்டத்தில் இருந்து, இன்று வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

    கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் நடந்தது கடந்த காலம். இன்றும் நாளையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். 10 ஆண்டுக்கு முன் நடந்தது பற்றியோ அல்லது கடந்த உலக கோப்பை பற்றியோ அதிக விவாதமோ, பேச்சோ இல்லை என்று நினைக்கிறேன்.

    எப்படி விளையாட விரும்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் ஒழுக்கமான அணியாக இருக்கலாம். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள்.

    கடந்த 6-7 ஆண்டுகளில், 2015 முதல் அனைத்து ஐசிசி போட்டிகளிலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் சீராக விளையாடி வருகின்றனர். அவர்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    அனைத்து அணிகளின் பலம் எங்கே இருக்கிறது, பலவீனம் எங்கே இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அங்கு சென்று விளையாட நாங்கள் முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியா தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    • நியூசிலாந்து 5 வெற்றி, 4 தோல்விகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    13-வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.

    இதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை, நெதர்லாந்து, ஆகிய நாடுகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு அரைஇறுதி போட்டி தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் அரைஇறுதி ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வென்று 18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

    லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா 8-வது முறையாக அரைஇறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரைஇறுதியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோற்று இருந்தது.

    அதற்கு நாளைய அரை இறுதியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கடந்த 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண் என்பதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

    அது நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. அந்த அணி நாக்அவுட் சுற்றில் கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி இருந்தது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரைஇறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.

    வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். முதல் 15 ஓவர் பேட்டிங் ஆட்டத்தின் முடிவை நிர்ணயம் செய்யும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம் பெறு வார்கள்.

    பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    விராட் கோலி 594 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 5 அரை சதமும் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் அவர் டெண்டுல்கரின் 49 செஞ்சுரி சாதனையை முறியடிப்பார். விராட் கோலி சமீபத்தில்தான் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து இருந்தார்.

    ரோகித் சர்மா ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 503 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். இது தவிர ஷ்ரோயாஸ் அய்யர் 421 ரன்னும் (1 சதம், 3 அரை சதம்), லோகேஷ் ராகுல் 347 ரன்னும் (1 சதம், 1 அரை சதம்), சுப்மன் கில் 258 ரன்னும் (3 அரைசதம்) எடுத்து நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்திய அணி வேகப்பந்து மற்றும் சுழற்பந்தில் சிறப்பான நிலையில் இருக்கிறது. மிகவும் முக்கியமான அரைஇறுதியில் பந்துவீச்சு நன்றாக அமைய வேண்டும்.

    பும்ரா 17 விக்கெட்டும், முகமது சமி, ஜடேஜா தலா 16 விக்கெட்டும், குல்தீப் யாதவ், 14 விக்கெட்டும், முகமது சிராஜ் 12 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். சமிக்கு முதல் 4 போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆட்டத்தில்தான் அவர் 16 விக்கெட்டை எடுத்துள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக மட்டுமே விக்கெட் எடுக்கவில்லை.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 2015, 2019 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கோப்பையை இழந்தது. அந்த அணி 9-வது தடவையாக அரைஇறுதியில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து அணி லீக் சுற்றில் 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது 4 போட்டியில் தோற்றது.

    இந்தியாவை போலவே நியூசிலாந்தும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா (566 ரன், 3 சதம், 2 அரை சதம்), மிச்சேல் (418 ரன் 1 சதம், 2 அரை சதம்), கான்வே (357 ரன்), பிலிப்ஸ் மற்றும் கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    சான்ட்னெர் (16 விக்கெட்), போல்ட் (13 விக்கெட்), பெர்குசன் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

    இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×