என் மலர்
புதுச்சேரி
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் புதுவையிலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காக வெளியில் வந்தீர்கள் என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மரக்காணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் புதுவையை சுற்றி பார்க்க வந்தாகவும் தெரிவித்தனர்.
இதனை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி கண்டித்தார். மேலும் அவர்களுக்கு தண்னை வழங்கும் விதமாக 21 தோப்பு கரணம் போடும் படி கூறினார்.அந்த வாலிபர்களும் 21 தோப்புகரணம் போட்டனர்.பின்னர் அவர்கள் ஒட்டி வந்த மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் அந்த வாலிபர்கள் தோப்புகரணம் போடும் வீடியோ சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.
புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் உள்பட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு வாணரப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது27) என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து 32 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.2,150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது ஒதியஞ்சாலை போலீசர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகள் செண்பகவள்ளி (வயது 33).
இவர் தனது கணவரை பிரிந்து கடந்த 3 வருடங்களாக தனது மகள் பவானி (8) உடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். பவானி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.
ஜான்சிராணி அந்த பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக செண்பகவள்ளி இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மகள் பவானியுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற செண்பகவள்ளி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கேயும் செண்பவள்ளியும் அவரது மகளையும் காணவில்லை.
இதுகுறித்து ஜான்சிராணி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான, செண்பகவள்ளி மற்றும் அவரது மகள் பவானி ஆகியோரை தேடி வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவை மீறி புதுவை ஆட்டுப்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், ரூ.8 ஆயிரத்து 350 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுதாகர் 25, அரவிந்த 22, ரஜினி 18, பெரியார் நகர் பழனி 33, என்பது தெரியவந்தது.
கைது செய்த 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பணத்தை கலால் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 700 படுக்கையுடன் சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பல்நோக்கு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்நோக்கு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.3 ஆயிரத்து 500 சம்பளமாக வழங்கப்படுகிறது. இவர்களின் பணிக்கு பாதுகாப்பும் இல்லை. இதனால் தங்களால் மருத்துவமனையில் தங்கி பணியாற்ற முடியாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இன்று காலை மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை ஊழியர்களே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
புதுவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஊரடங்கு நேரத்தில் மக்களை யாரும் கும்பலாக கூட்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மக்களை கூட்டும் மளிகை கடைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் லாஸ்பேட்டை நெசவாளர் நகரில் தடை உத்தரவை மீறி அப்பகுதி மக்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. சாமிநாதன் இலவச அரிசி வழங்கினார். இதனை வாங்குவதற்காக மக்கள் முண்டியத்துக்கொண்டு வந்தனர்.
இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. மக்கள் யாரும் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசார் சாமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுவையில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 237 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 211 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொதுமக்களுக்கு காய்கறி விநியோகம் செய்தது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல் அலுவலாக சபாநாயகர் சிவகொழுந்து இரங்கல் குறிப்பு வாசித்தார்.
மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், மற்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய குறிப்புகளை சபாநாயகர் சிவகொழுந்து வாசித்தார். இதனைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் சபை நிகழ்வுகள் தொடர்ந்தது.
வில்லியனூர், மார்ச். 30-
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 39). இவர் வில்லியனூர் அருகே உளவாய்க்காலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அங்குள்ள குடியிருப்பில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவுதல் காரண மாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நேற்று மதியம் உணவு தயாரித்து நண்பர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென துளசிதாஸ் மயங்கி விழுந் தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக துளசிதாசை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே துளசிதாஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திடீர் மாரடைப்பால் துளசிதாஸ் மயங்கி விழுந்து இறந்து போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு உசேன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயங்கி விழுந்து இறந்துபோன துளசிதாசுக்கு ஹீராதேவி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகர் அவ்வை அறப்பணி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு முதலியார் பேட்டை பகுதியில் பழக்கடை வைத்திருக்கும் ராமமூர்த்தி என்பவரிடம் பழங்கள் வாங்கி உள்ளார். அந்த பழங்கள் அழுகி போயிருந்ததால் அதற்கு மாற்றாக வேறு பழங்கள் தறுமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். இதற்கு ராமமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் உள்ளார். இதனை செந்தில்குமார் தடுக்க முயன்ற போது ராமமூர்த்தி அவரது கையை பிடித்து கடித்து உள்ளார். இதில் காயமைந்த செந்தில்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் முதலியார் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
புதுச்சேரியில் 3 மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் இன்று கூடியது. கொரோனா நோய் தொற்று தடுப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைவெளி விட்டு அமர நாற்காலிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. செய்தியாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.
சட்டமன்றத்திற்கு கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கையில் கிருமிநாசினியை தெளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.
சட்டமன்றத்திற்குள் சமூக இடைவெளி விட்டு போடப்பட்ட இருக்கைகளை அதிமுக-பாஜக எம்எல்ஏக்கள் மறுத்து நாற்காலிகளை ஒன்றாக்கி அமர்ந்தனர். புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் வந்த உறுப்பினர்களுக்கு அரசு கொறடா சானிடைசர் தெளித்தார்.
சட்டமன்ற செயலகம் சார்பில் உறுப்பினருக்கு என்95 முகக்கவசம் அளிக்கப்பட்டது. சட்டமன்ற நிகழ்வு துவங்கியதும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவில் இறந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
அடுத்து முதல்வர் நாராயணசாமி பேரவை முன் அரசு ஏடுகளை வைத்து விட்டு ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 2042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அதிமுகவினர் கொரோனாவிற்காக சிறப்பு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார்கள். இது ஏற்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முடிவில், கொரோனா குறித்து முதல்வர் நாராயணசாமி விளக்க அறிக்கை வாசித்தார். அதில் புதுச்சேரியில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கொரோனாவை முற்றிலும் தடுக்க 995 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
மேலும் புதுச்சேரி, காரைக்காலில் 21 வெண்ட்டிலேட்டர்கள் தற்போது உள்ளதாகவும், படுக்கைகளும் தயாராக உள்ளதாகவும், கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் நான்கும், காரைக்காலில் இரண்டும் உள்ளதாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் சமூகக் கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளதாகவும், மீதமுள்ளோரும் கடைபிடிக்கவேண்டும் எனவும், முதலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் கொரோனா நிவாரண நிதியான ரூ.2,000 செலுத்தப்படும் என தெரிவித்தார்.






