என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் கொரோனா பரிசோதனைக்கு மேலும் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரானா அறிகுறியுடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    அவசர எண் 104க்கு நேற்று 65 அழைப்புகள் வந்தது இதில் 11 பேர் மனநல மருத்துவர், ஆலோசகரிடம் ஆலோசனை பெற்றனர் இதுவரை 1942 அழைப்புகள் வந்துள்ளன.

    இவ்வாறு கலெக்டர் அருண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    வறுமைக் கோட்டுக்கு கீழ் வரும் புதுவை மக்களுக்கு கொரோனா நிவாரணமாக இலவச அரிசி வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசு நிவாரணங்களை வழங்கி வருகிறது. இதனடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு இலவச அரிசியை வழங்குகிறது.

    கொரோனா நிவாரணமாக ஏழைகளுக்கு வழங்க புதுவைக்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அரிசி இந்திய உணவு கழகத்தில் கையிருப்பில் தற்போது உள்ளது.

    இதன்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் வரும் புதுவை மக்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான கோப்பில் கவர்னர் கிரண்பேடி கோப்பு அரிசிக்கு பதிலாக பணமாக வங்கி கணக்கில் சேர்க்க கூறியதாக தெரிகிறது.

    மேலும் இதுவரை அந்த கோப்பிற்கு அனுமதியும் வழங்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருதாவது:-

    கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் பாதிக்கப்பட்ட புதுவை மக்களுக்கான அரிசியை தடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது இது தவறானது.

    நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணத்தை நேரடியாக மாற்றுமாறு இந்திய அரசிடம் கோரினேன்.

    இதனால் மக்கள் தேவைப்படும் போது அரிசி, மளிகை பொருட்களை நேரடியாக வாங்க முடியும். இருப்பினும் இந்திய அரசானது ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்டவற்றை நேரிடையாக விநியோகிக்க கோரியது. அதையடுத்து நிர்வாகமானது வெளிப்படையான முறையில் விநியோகிக்கவும், சமூக தொலைவை பராமரிப்பது தொடங்கி குறைந்த பணியாளர்களை கொண்டு தர திட்டமிடுகிறது.

    இதுதொடர்பான பணியில் தலைமை செயலாளர், குடிமை பொருள் வழங்கல் துறை செயலர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அதை புதுவை அரசு இறுதி செய்தவுடன் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு கிரண்பேடி பதிவில் கூறினார்.
    ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1306 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இதுவரை 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 நபர்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அவசர அழைப்பு எண் 104-க்கு இதுவரை 1898 அழைப்புகள் பெறப்பட்டுள்ளது.

    ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1306 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 218 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையற்ற காரணங்களுக்காக சாலையில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் 526 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், திருக்கனூர், திருபுவனை, காட்டேரிக்குப்பம், முத்தியால்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே வராமல் மருத்துவ உதவிக்கு 104, ஊரடங்கு புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1070 மற்றும் 1077, மளிகை மற்றும் காய்கறிகள் வீடுதேடி வழங்குவதற்கு 2253345 மற்றும் 2251691 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் இவ்வாறு கலெக்டர் அருண் அறிக்கையில் கூறியுள்ளார்.
    நல்லவாடு கிராமத்தில் பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். மீன்பிடி தொழிலாளி. இவரது இரண்டாவது மகன் குணசெல்வன் (வயது18). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கொரோனாவால் புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் குணசெல்வன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளான்.

    பின்னர் வீடு திரும்பிய போது அவரது பெற்றோர் குணசெல்வனை கண்டித்துள்ளனர். இதனால் மனவருத்தத்தில் இருந்த குணசெல்வன் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டின் பின்பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது திடீரென அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கினான்.

    இதனையறிந்த மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து தூக்கிலிருந்து அவனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குணசெல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த 21 நபர்களுக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம், திருவண்டார்கோவிலை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது.

    இதனையடுத்து புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் அரியாங்குப்பம், திருபுவனை போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரை பணியில் இருந்து விடுவித்து அவர்களின் வீடுகளில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனா தொற்று பரவிய மண்டலத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் அபாயம் உள்ளது.

    எனவே கீழ்கண்ட போலீசார் அனைவரும் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அனைவரும் தங்கள் வீடுகளில் கட்டுப்பாட்டுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த நாட்கள் அனைத்தும் பணி நாட்களாகவே கருதப்படும்.

    ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் தொகை வழங்கப்படும். பணியிலிருந்து விடுவிக்கப்படும் காவலர்கள் விபரம்:-

    தெற்கு பகுதி இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அறிவுசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் பெரியண்ணசாமி, ஜெகதீஷ், சுரேஷ், பாலமுருகன், தமிழ், வரதராஜன், முருகன், சரவணன், மேற்கு பகுதி பாண்டியன், தனஞ்செயம், சுபாஷ், ரங்கராஜ், விஜயன், சர்வேசன், பன்னீர்செல்வம், கார்த்திகேயன், சத்தியராஜ், பெருமாள் என மொத்தம் 21 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவை முழுக்க 3 ஆயிரத்து 25 பேர் தனிமை படுத்தி கண்காணிப்பில் உள்ளனர் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர்  நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியோரில் 6 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. இதேபோல் காரைக்காலில் டெல்லி சென்று திரும்பிய 7 பேருக்கும் பாதிப்பு இல்லை. 

    புதுவை முழுக்க 3 ஆயிரத்து 25 பேர் வீட்டுக்காவலில் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தோர், டெல்லி சென்று வந்தோரை தொடர்பு கொண்டோரும் இதில் அடங்குவர். காரைக்கால், ஏனாம், மாகி பிராந்தியங்களில்  கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. புதுவையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    அனைத்து ரேசன் அட்டைத்தாரர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளோடு கலந்து பேசி மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கடன்  வழங்க வலியுறுத்தியுள்ளோம். வங்கிகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கான வட்டி 7 சதவீதத்தில் 3 சதவீத வட்டியை மாநில அரசு ஏற்கும். இதனை நகர் பகுதி சுயஉதவி குழுக்களுக்கும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

    விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 4 கோடி செலவாகும். கொரோனா சிகிச்சைக்கு முக்கிய தேவையான வெண்டி லேட்டர், உடைகவசங்கள், மானிட்டர்கள், முககவசம் கிடைக்காததால் அதை தயாரிக்கும் தொழிற்சாலை களுக்கு அரசு நிலத்தில் சலுகையும், முதலீட்டு மானியம் 30 சதவீதம் வரிசலுகை, உற்பத்தி மானியம் தரப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
    புதுவையில் கொரோனா தடுப்பு பணி ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக அமைச்சர்கள் தலைமையில் அரசு அதிகாரிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய கமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உப்பளம் தொகுதியில் மீன்வளத்துறை இயக்குனர் முனுசாமி, கூட்டுறவு துறை துணை பதிவாளர் சாரங்கபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை துணை இயக்குனர் நாகலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் மக்களின் நலனுக்காக செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் மற்றும் அடிப்படை தேவைகள், மருத்துவ உதவிகள் சம்பந்தமாக உப்பளம் தொகுதிக்குட்பட்ட உடையார் தோட்டம், ராசு உடையார் தோட்டம் ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் அன்பழகன் எம்.எல்.ஏ. வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கினார்.

    இதையடுத்து அவர் கூறுகையில் சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, வருவாய்துறை, உள்ளிட்ட கொரோனா சேவை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 3 மாத கால சம்பளத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    வில்லியனூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் வில்லியனூர் மெயின்ரோடு வெற்றி வேல் நகரை சேர்ந்தவர் ஏழமலை (வயது 54). இவர் வில்லியனுர் செம்பியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் சோப் கம்பெனியல் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு துலுக்காணத்தம்மாள் என்ற மனைவியும் 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் ஏழுமலை வேலைக்கு சென்றார். கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென  மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்பவர்கள் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு ஏழுமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஏழுமலையின் மனைவி துலுக்கானத்தம்மாள் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரில் எனது கணவரின் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஏழுமலையை யாராவது அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டெல்லி மாநாட்டிற்கு புதுவையில் இருந்து அதிக அளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி  வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு புதுவையில் இருந்து அதிக அளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற தவறான தகவலை பரப்புபவர்கள் குறித்து சைபர் கிரைம் மூலமாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.

    யார் இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பபடும். தவறான கருத்துக்களை தேவையில்லாமல் பரப்பி புதுவை மாநிலத்தில் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்.

    பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றிய போது கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். வருகிற 14-ந் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை படிப்படியாக திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசுகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் அதுபோன்று ஜி.எஸ்.டி. மானியம் உள்ளிட்டவைகளை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு நாராயணசாமி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
    கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஹெலிகாம்(டிரோன்) கேமரா மூலமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுவை பெரிய மார்க்கெட் மூடப்பட்டது. இங்கு செயல்பட்ட கடைகள் பல்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்கப்படுகிறது. நேருவீதியில் பழ வியாபாரம் நடக்கிறது.

    தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் காய்கறி விற்பனை நடக்கிறது. இதேபோல நவீன மீன் அங்காடி, அஜீஸ்நகர், செஞ்சி திடல், காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி ஆகியவற்றில் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை சரிவர கடைபிடிப்பதில்லை. கடை வியாபாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை. இதனையடுத்து கடைகளின் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதுவை பேருந்து நிலையத்தில் இயங்கும் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொது மக்கள் அதிகளவில் வந்தனர். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களை போலீசார் எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை.

    கிழக்கு எஸ்.பி மாறன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து ஹெலிகாம்(டிரோன்) கேமரா மூலமாக அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் அடிப்படையில் சமூக இடை வெளியை பின்பற்றாக பொதுமக்கள், காய்கறி வியாபாரிகள் மீது வழக்கப் பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து தவறு செய்யும் கடை வியாபாரிகளுக்கு கடை நடத்த அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து எஸ்.பி மாறன் கூறும்போது, மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடை வெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். ஆனால் வியாபாரிகளும், பொது மக்களும் தொடர்ந்து அலட்சியமாக செயல் படுகின்றனர். அவர்களை ஹெலிகாம் மூலம் கண்காணித்து வீடியோ பதிவு செய்து வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
    போலி மதுபாட்டிகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுபான கடைகள் உள்பட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு வாணரபேட்டை நேதாஜி நகர் பகுதியில் போலி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது27) என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 32 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும். மேலும் அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.2,150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஓதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது ஒதியஞ்சாலை போலீசர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    காலாப்பட்டு சிறையில் போதிய உணவு வழங்கப்படவில்லை என கூறி சிறைக்கைதிகள் விடிய விடிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று அபாயம் காரணமாக காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து 4 பெண் கைதிகள் உள்பட்ட 68 சிறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் ஜாமீனில் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் காரணமாக சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என கூறி சிறைக்கைதிகள் நேற்று காலை திடீர் என உணவுகளைப் பெற மறுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

    விசாரணைக் கைதியுடன் தண்டனை கைதிகளும் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளிடம் சிறை நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. இருப்பினும் கைதிகள் இரவு உணவை புறக்கணித்து தொடர்ந்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை சிறை அதிகாரிகள் மீண்டும் கைதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    ×