என் மலர்
புதுச்சேரி
புதுவை மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் மார்ச் 23-ந்தேதி உத்தரவின் படியும், கடந்த மார்ச் 26-ந்தேதி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் படியும் அனைத்து பாடத்தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் விதமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை அணுகலாம். அடுத்த கட்ட அறிவிப்பு தற்போதைய இக்கட்டான சூழ்நிலை முடிவுக்கு வந்ததும் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகம், பால் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் கடைகளை மட்டும் திறந்து விற்பனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.
இதிலும் தற்போது மளிகை, காய்கறி, பழம் உள்ளிட்ட கடைகளை மதியம் ஒரு மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுவையில் உள்ள மது, சாராய கடைகள் மூடப்பட்டு கிடக்கிறது. இருப்பினும் மதுபாட்டில்கள் கூடுதல் விலையில் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஒரு மதுபாட்டில் 2 மடங்கு வரை கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது.
வழக்கமாக தேர்தல் காலத்தில் மட்டுமே மதுக் கடைகளுக்கும், மது குடோன்களுக்கும் சீல் வைக்கப்படும். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் 2 வாரமாகியும் மது கடைக ளுக்கு சீல் வைக்கப்படாமல் இருந்தது. ஆனால் தொடர் புகார் காரணமாக மது கடைகள், குடோன்களுக்கு சீல் வைக்கும் பணியை கலால்துறை தொடங்கியுள்ளது. நகர பகுதிகளில் கடைகளை தேடிச்சென்று கலால்துறையினர் சீல் வைத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழகம், புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளும் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
திருபுவனை அருகே உள்ள தமிழக பகுதியான பள்ளி நேலியனூர்-கடலூர் சாலை புதுச்சேரி எல்லை மற்றும் கிராமப்புற சாலையாக உள்ளது. இந்த சாலையில் தற்போது சிலர் தங்களது வாகனங்களில் ஊர் சுற்றி வருகிறார்கள். தடையை மீறி சிலர் மது பாட்டில்கள் கடத்துவது, மீன், இறைச்சி எடுத்துச் செல்வது என சென்று வருகிறார்கள்.
மேலும் இந்த பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாக்கம்-கூட்டுரோடு வழியாக கடலூருக்கு அதிகப்படியாக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதை தடுக்க திருபுவனை போலீசார் முள்வேலி அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதி வழியாக பொதுமக்கள் செல்வது அபாயகரமானதாகும். இதனால் அவர்களை தடுக்கும் போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். மேலும் கிராமப்புற தெருக்கள் வழியாக புகுந்து வரும் வாகனங்கள், பொதுமக்களை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லுமாறு போலீசார் வலியுறுத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு பிரதமரின் உத்தரவுப்படி வழங்க தேவையான அரிசியும், பருப்பும் மத்திய அரசின் உணவு கிடங்கில் உள்ளது. ஆனால், வழக்கம் போல் கவர்னருடன் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு மக்களுடைய அத்தியாவசிய தேவையை நிறைவு செய்யாமல் விளையாடி வருகின்றனர்.
மலிவு விளம்பர அரசியலை ஆளும் அரசும், கவர்னரும் செய்து கொண்டிருப்பது உணவுப் பொருட்களை பதுக்குவதற்கு சமமான செயலாகும். மஞ்சள் கார்டுகளில் சுமார் ஒரு லட்சம் கார்டுதாரர்கள் ஏழ்மையானவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ள அதே அளவில் அரிசியும், பருப்பும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்க வேண்டும். இல்லையெனில், தனி ஒரு மனிதனாக சட்டசபை வளாகத்தில் போராடத் தயங்க மாட்டேன்.
மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து உணவு பொருட்களை லழங்க வேண்டும். ரேஷன் கடைகள் அமைந்துள்ள இடங்கள் குறுகலாக இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள். மைதானங்களை அரசு பயன்படுத்த வேண்டும். வீடுதேடி சென்று வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
மேலும், மளிகை பொருட்கள் விலையை தாறுமாறாக உயர்த்தி விற்பனை செய்வதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இது சம்பந்தமாக தனக்கு இருக்கும் அதிகாரத்தை இவ்வேளையில் உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுவை அருகே ஆரோவில்லை அடுத்து இடையன்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் அப்பகுதியில் மரவாடி நடத்தி வருகிறார்.
இவருக்கு மேகநாதன், செங்கேணி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு பொதுவான இடத்தில் உள்ள முந்திரி தோப்பில் முந்திரி கொட்டை பொறுக்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து ஆரோவில் போலீசார் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இனிமேல் இதுபோன்ற தகராறு செய்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு இருவரையும் எச்சரித்தபோது அவர்கள் போலீசாரை திட்டி மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதன், செங்கேணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் புதுவையில் சுய உதவி குழுக்கள் முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி வீட்டிலேயே சுலபமாக முககவசம் தயாரிப்பது எப்படி? என்பது தொடர்பாக செய்முறை விளக்கம் அளித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மக்கள் முக கவசம் தயாரித்து அணிந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பேடி பதிவிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
புதுச்சேரி:
டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அரியாங்குப்பம், திருவண்டார் கோவில் பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 4 நாட்களாக புதுவை மாநிலத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை
இந்த நிலையில் மாகி பிராந்தியத்தை சேர்ந்த 71 வயது முதியவர் கொரானா அறிகுறியுடன் கண்ணூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் இதுவரை 4 பேர் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால், மாகி, ஏனாமில் கொரோனா பாதிப்பு இல்லை. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இன்று (செவ்வாய்கிழமை) முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். பகல் 1 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்காது. மருந்து கடைகள் மட்டும் திறந்திருக்கும்.
கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும். நிவாரண நிதிக்கு சுமார் ரூ.5 கோடியை அரசு ஊழியர்களும், பொது மக்களும் கொடுத்துள்ளனர்.தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள், காப்பீடு நிறுவனங்கள், தாராளமாக கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவி செய்திட வேண்டும்.
மத்திய அரசின் பேரிடர் மீட்பு துறை பல மாநிலங்களுக்கு நிதி வழங்கியுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இதுவரை மாநிலத்துக்குத் தேவையான நிதி வழங்க வில்லை.
இடைக்காலமாக ரூ. 300 கோடி மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், கொரோனா நிதியாக ரூ.995 கோடியும் வழங்க வேண்டும்.பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும், நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் இதுவரை பதில் வரவில்லை.
புதுவை மாநில மக்களுக்கு, மாநில நிதியிலிருந்து ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கினோம். மத்திய அரசு, மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை இதுவரை வழங்கவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரியில் புதுவையின் பங்கான சுமார் ரூ.400 கோடி கொடுக்கவில்லை. மானியம் கொடுக்கப்படவில்லை. மத்திய அரசு, நமது மாநிலத் துக்கு ஒதுக்கிய பட்ஜெட் தொகையையும் வரவில்லை.
மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிதியுத வியை மாநில அரசின் மூலம் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசு பல உத்தரவுகளை பிறப்பித்தாலும், அதை நிறைவேற்றுவதற்கு தேவை யான கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவ சமாக நிதியுதவி செய்ய வில்லை. வியாபார நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் வரவில்லை.
ஆனால் மாநில அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக புதுவைக்கு ரூ. 995 கோடியை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். பிரதமர் அதற்கு செவி சாய்ப்பார் என நம்புகிறேன்.
இனி வரும் காலம் இக்கட்டான காலம். இச்சமயத்தில் மாநில அரசு அனைத்து சுமைகளையும் ஏற்க முடியாது. மத்திய அரசு துணைக்கு வர வேண்டும்.
சீன நாட்டில் ஒரு மாவட்டத்துக்கு 3 பில்லியன் டாலர் செலவழித்து மக்களை காப்பாற்றினார்கள். பிரதமர் ஒதுக்கியுள்ள ரூ. 1.75 லட்சம் கோடி போதாது. மத்திய அரசு அறிவிப்பை மட்டும் கொடுத்தால் மட்டும் போதாது. நடைமுறையில் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும்.
இனிவரும் காலம் சோதனையான காலகட்டம். கொரோனா பாதிப்பவர் களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’’
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கை அமல்படுத்தும் தீவிர பணியில் உள்ள போலீசார் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் இருந்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மோட்டார் சைக்கிள்களுக்கும், ஜீப்களுக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோல், டீசல் வழங்க முன் வந்தது.
கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு 200 லிட்டர் டீசல், 200 லிட்டர் பெட்ரோல் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் முள்ளோடையில் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வழங்கலுக்கான ரசீதை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா, இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, தனசேகரன், சப்இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, இந்தியன் ஆயில் நிறுவன புதுச்சேரி கிளை விற்பனை அதிகாரி வனலரசு, பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் இருந்தனர்.
அப்போது, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அலுவால், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் போன்று மற்ற நிறுவனங்களும் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
பின்னர் எல்லைப்பகுதியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அப்பகுதியில் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், மருத்துவ குழுவினருக்கு அவர் இரவு உணவு வழங்கி அவர்களுடன் உணவறிந்தினார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட பதிவு வருமாறு:-
கொரோனா வைரஸால் நாடு முன் எப்போதும் எதிர்பார்க்காத நெருக்கடியை எதிர்கொள்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகளவில் உருவாகிய அழிவைக் கட்டுப்படுத்த போராடுகிறது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலில் பல வளர்ந்த பணக்கார நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா திறமையான தலைமையில் கீழ் வெல்கிறது. குறிப்பாக பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா உறுதியுடன் ஒன்றிணைந்துள்ளது உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தியர்கள் தங்கள் தலைவரான பிரதமர் மோடியை எவ்வளவு நம்புகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. கொரோனா காரணமாக நாடு அதிக பொருளாதார செலவில் உள்ளது. இது ஏழைகளை அதிகம் பாதிக்கிறது. துன்பங்களை உடன் தணிக்க பல நிவாரண நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இது ஒரு ஆரம்பம் என்பதை நாம் அறிவோம்.
இந்த நிதியாண்டுக்கான எனது ஊதியத்தில் 30 சதவிதத்தை தானாக முன்வந்து குறைக்க ஒப்புக்கொள்கிறேன். எனது சிறிய பங்களிப்பை தருவதை கடமையாக உணர்கிறேன். இந்த சிறிய பங்களிப்புக்கு தங்கள் ஆசிர்வாதங்களை கோருகிறேன்
இவ்வாறு கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தலா 5 கிலோ இலவச அரிசியை வீடுகள் தோறும் சென்று அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கி வருகிறார்.
தொகுதிக்குட்பட்ட ஆட்டுபட்டியில் 5 கிலோ இலவச அரிசி வழங்கும் பணியை தொடங்கினார். தொடர்ந்து ரோடியர் பேட் பகுதியிலும் வழங்கினார்.
இதனையடுத்து தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் வீடுவீடாக சென்று நேரடியாக இலவச அரிசியை அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்க உள்ளார்.






