என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
மத்திய குடிமைப்பொருள் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச உணவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் புதுவை அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். அவருடன் துறை செயலர் ஆலிஸ்வாஸ், சிறப்பு செயலர் வல்லவன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பிரதம மந்திரி கிரிஷ் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் நோக்கம், அத்திட்டம் மூலம் அரிசி, பருப்பு, தானிய வகைகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பொய்யாகுளம் வினோபாநகரை சேர்ந்தவர் உமாராணி (வயது29). இவர் புதுவை சட்டக்கல்லூரி அருகே உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு வீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.
இதற்கிடையே காதலன் வீட்டார் திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று உமாராணி தனது காதலனிடம் கேட்டு உடனடி யாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
இதுதொடர்பாக அவர்களிடையே அப்போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த உமாராணி தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின் விசிறி பைப்பில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் உமாபதி கோரி மேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கும் இனிய தருணம் இது. பழைய ஆண்டிற்கு விடைகொடுத்து புதிய சார்வரி ஆண்டினை வரவேற்க நாம் தயாராக உள்ளோம். கடந்த ஆண்டின் துயரங்களும் நம்மைவிட்டு விடைபெறும் ஆண்டாக இந்த புத்தாண்டு இருக்கும் என நம்புகிறேன். மிகுந்த துயரத்திற்கிடையே பிறக்கும் இந்த புத்தாண்டு நம் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றி துயர்வெல்லும் ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கொரோனாவின் கோர பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு நம் மீண்டும் திரும்புவோம் எனும் நம்பிக்கை விதையினை இந்த புத்தாண்டு விதைக்கிறது. இந்த விதை விருட்சமாக வளர்ந்து புதுச்சேரி புத்தொளி வீசட்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதநேயத்துடன் உதவும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் மாற்றங்கள் மலரட்டும். ஏற்றங்கள் உதிக்கட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பிறக்கட்டும். புதுவை மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாகூர்:
தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் 4 முழு பிராந்தி பாட்டில் மற்றும் பீர் பாட்டில்கள், குவாட்டர் பிராந்தி பாட்டில் இருந்தன.
இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தவளக்குப்பம் சதா நகரை சேர்ந்த பகலவன் (வயது45) என்பதும், இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மது பாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பகலவனை போலீசார் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்கள் கடத்த பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது62). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி கால்வழி ஏற்படும். அதற்காக வலியை மறக்க அரிகிருஷ்ணன் சாராயம் குடிப்பது வழக்கம்.
இதற்கிடையே கொரோனா ரைவஸ் பரவுதல் தடுப்பதற்காக கடந்த சில நாட்களாக புதுவையில் சாராயக்கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு விட்டன.
இந்நிலையில் அரிகிருஷ்ணன் கால்வலியை பொறுத்துக்கொள்ள சாராயம் குடிக்க பல இடங்களில் கேட்டுப்பார்த்தார். ஆனால் எங்கும் சாராயம் விற்கப்படாததால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். மேலும் அவர் வழியாலும் துடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கால்வலி அதிகமானதால் மனவேதனை அடைந்த அரிகிருஷ்ணன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு அவர் வீட்டில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி சரோஜா கொடுத்த புகாரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 14-ந் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மாநில முதல்அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் 90 சதவீதத்தினர் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்களை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பிரதமர் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் வெளியில் கடன் பெறும் தொகை அளவை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை 3 மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் 3 மாதத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த பிரதமர், கோரிக்கைகள் தொடர்பாக ஓரிருநாட்களில் முடிவுகளை தெரிவிப்பதாக கூறினார். கொரோனா பாதிப்புகளை பச்சை, ஆரஞ்சு, சிகப்பு என பிரித்து படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
புதுவை சார்பில் நான் பேச பிரதமரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்திருந்தால் நிவாரணமாக ரூ.300 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.995 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பேன். வருகிற 14-ந் தேதிக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் புதுவையை ஒட்டி தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்கள் உள்ளது. எனவே நாம் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழகத்தில் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். மத்திய அரசும் சில விதிமுறைகளை தருவதாக கூறியுள்ளது. அமைச்சரவை முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
தற்போது விழாக்காலம் என்பதால் விழாக்களை ரத்து செய்து, மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அனைத்து மதத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியின் மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, மாஹேவில் இருவர் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாஹேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒரு பெண் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மற்றொருவரான முதியவர் உயிரிழந்துள்ளார்.
புதுவை ஒதியம்பட்டை சேர்ந்தவர் டெல்லிகணேஷ் (வயது23). இவர் புதுவை கடற்கரை சாலையில் உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மதியம் இவர் பணியில் இருந்த போது 40 வயது மதிக்கத்தக்க குப்பை பொறுக்கும் தொழிலாளி ஒருவர் தான் கொண்டு வந்த சாக்குமூட்டையை அங்குள்ள பாறாங்கல்லில் வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் மடமடவென கடலில் இறங்கினார்.
இதனை பார்த்து விட்ட டெல்லிகணேஷ் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து கடலின் ஆழமான பகுதிக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவர் மாயமானார்.
இதுகுறித்து டெல்லி கணேஷ் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் கடலில் இறங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலன் இல்லை. இந்த நபர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தலைமை செயலகம் எதிரே கடலில் குதித்து தற்கொலை செய்த தொழிலாளி பிணம் கரை ஒதுங்கியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கரை ஒதுங்கிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அருகில் உள்ள மீனவர்களின் உதவியை நாடினர். ஆனால் மீனவர்கள் யாரும் இதற்கு ஒத்துழைக்கவில்லை.
இதையடுத்து போலீசாரே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி யார்?-எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 2 பேர், இதில் ஒருவரின் மனைவி, திருவண்டார் கோவிலை சேர்ந்த ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது. இவர்கள் 4 பேரும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாகியை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே வெளிநாடு சென்று திரும்பிய மூதாட்டி சிகிச்சையில் உடல்நலன் சீராகி வீடு திரும்பினார். புதுவையில் சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லாவிட்டாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பரிசோதனைக்கு அனுப்பியதில் மூலக்குளம் அன்னை தெரசா நகரை சேர்ந்த ஒருவருக்கும், திருவண்டார் கோவிலை சேர்ந்த 57 வயது எண்ணெய் வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள். இதனை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உறுதி செய்துள்ளார்.
இதனிடையே மூலக்குளம் பகுதிக்கு மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு ராகுல்அலுவால் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். தொற்று ஏற்பட்டு நபர் வசிக்கும் பகுதிகள் தடுப்புகள் ஏற்படுத்தி தனிமைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
மேலும் 2 பேருக்கு கொரோனா பரவி இருப்பதால் புதுவையில் நோய் தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று மாலை முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் ரோந்து பணி சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு பூட்டி கிடந்த பெட்டி கடை அருகே 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு நின்று கண்காணித்தனர்.
அப்போது பெட்டிக்கடையில் இருந்து 2 பேர் தடை செய்யப்பட்ட போதை பொருளை சிறுவர்களுக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெட்டிக்கடை உரிமையாளர் அருள் (வயது45) மற்றும் அவரது நண்பர் தர்மன் (42) என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 164 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை பணம் 1425 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சென்ற சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாராயம் மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதுவை மற்றும் தமிழக பகுதியான விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தடையின்றி சாராய விற்பனை நடந்தது. இங்கு பிடிப்பட்ட நபர்கள் திருபுவனையில் வாங்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது
கலால் துறை ஆணையர் தயாளன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த வாரம் திருபுவனை, ஆண்டியார்பாளையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிரபல சாராய வியாபாரி ராஜா வீட்டில் கள்ள சாராயத் தொழிற்சாலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து சாராய கேன்கள், சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் திடீரென அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.






