search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாம் கேமரா
    X
    ஹெலிகாம் கேமரா

    கொரோனா தொற்று பரவலை தடுக்க ஹெலிகாம் கேமரா மூலம் மார்க்கெட் கண்காணிப்பு

    கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் ஹெலிகாம்(டிரோன்) கேமரா மூலமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுவை பெரிய மார்க்கெட் மூடப்பட்டது. இங்கு செயல்பட்ட கடைகள் பல்வேறு இடங்களுக்கு பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்கப்படுகிறது. நேருவீதியில் பழ வியாபாரம் நடக்கிறது.

    தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியில் காய்கறி விற்பனை நடக்கிறது. இதேபோல நவீன மீன் அங்காடி, அஜீஸ்நகர், செஞ்சி திடல், காலாப்பட்டு அரசு பெண்கள் பள்ளி ஆகியவற்றில் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை சரிவர கடைபிடிப்பதில்லை. கடை வியாபாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை. இதனையடுத்து கடைகளின் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் புதுவை பேருந்து நிலையத்தில் இயங்கும் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க பொது மக்கள் அதிகளவில் வந்தனர். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களை போலீசார் எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை.

    கிழக்கு எஸ்.பி மாறன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து ஹெலிகாம்(டிரோன்) கேமரா மூலமாக அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் அடிப்படையில் சமூக இடை வெளியை பின்பற்றாக பொதுமக்கள், காய்கறி வியாபாரிகள் மீது வழக்கப் பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்தனர். தொடர்ந்து தவறு செய்யும் கடை வியாபாரிகளுக்கு கடை நடத்த அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து எஸ்.பி மாறன் கூறும்போது, மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடை வெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். ஆனால் வியாபாரிகளும், பொது மக்களும் தொடர்ந்து அலட்சியமாக செயல் படுகின்றனர். அவர்களை ஹெலிகாம் மூலம் கண்காணித்து வீடியோ பதிவு செய்து வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
    Next Story
    ×