என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனது வீட்டு முன்பு தொகுதி மக்களை திரட்டிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

    ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவசிய பணி தவிர வேறு பணிக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்களை போலீசார் விரட்டி அடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தனது வீட்டு முன்பு தொகுதி மக்களை திரட்டிய புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது புதுவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுவை காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார். இவர் நெல்லிதோப்பு சவரிபடையாட்சி வீதியில் வசித்து வருகிறார்.

    ஜான்குமார் தனது வீட்டு முன்பு பொதுமக்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கினார். இதனால் அங்கு கூட்டம் கூடியுள்ளது. தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள்.

    மேலும் மக்கள் கூட்டத்தை கூட்டியதால் ஜான்குமார் எம்.எல்.ஏ. மீது இந்திய தண்டனை சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்குகளை உருளையான்பேட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கிரண்பேடி கூறியிருப்பதாவது:-

    சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை மீறுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை உறுதி. 200-க்கும் மேற்பட்டோரை வீட்டு முன் கூட்டி பொருட்களை வினியோகம் செய்தது தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது.

    சட்டத்தை பின்பற்றாமல் அதை மீறும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தி. சட்ட விதிகளை கடைபிடிப்பது சட்டத்தை உருவாக்குபவர்களின் பெரிய பொறுப்பு.

    இவ்வாறு கிரண்பேடி தனது பதிவில் கூறியுள்ளார்.
    ஊரடங்கு தடையை மீறி காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றிய 47 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி காரணமின்றி பல இளைஞர்கள் புதுவை நகரை மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். போலீஸ் எச்சரிக்கை செய்தும் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றதால் 47 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் தடையை மீறி கடைகள் வைத்து காய்கறிகள் விற்ற 5 பேர் மீதும், கோழி இறைச்சி விற்ற ஒருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், புதுச்சேரியில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின்னரும் நிலைமை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவது சிரமம். 

    இந்த நிலையில், புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

    இதேபோல் உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    வில்லியனூர் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    பாகூர் அருகே இருளன்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது53). இவர் கரசூர்-சேதராப்பட்டு மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இவருக்கு திலகவதி என்ற மனைவியும் தனபிரவீன் என்ற மகன் மற்றும் தனபிரியா என்ற மகள் உள்ளனர். தனபிரவீன் பி.டெக். படித்து முடித்து விட்டு சென்னையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பு கருத்து வேறுபாடு காரணமாக புருஷோத்தமனின் மனைவி திலகவதி பிரிந்து சென்று விட்டார். இதனால் புருஷோத்தமன் தனது மகள் தனபிரியா மருத்துவ படிப்புக்காக அய்யங்குட்டிபாளையம் அமைதி நகரில் வாடகை வீட்டில் தனது தாய் மற்றும் மகன்-மகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பெட்ரோல் பங்கில் கணக்கு வழக்குகளை முடித்துகொண்டு புருஷோத்தமன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பத்துகண்ணு வழியாக வந்த போது திடீரென மர்ம நபர்கள் புருஷோத்தமனை வழிமறித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அவர்கள் கத்தியால் புருஷோத்தமனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் புருஷோத்தமன் இறந்து போனார்.

    அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து புருஷோத்தமனை கழுத்தை அறுத்து கொலை செய்த கொலையாளிகள் யார்? குடும்ப தகராறில் கூலிப்படையை ஏவி புருஷோத்தமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா நோய் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் தலா 2000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிவாரணங்களை அறிவித்தார்.

    இதற்கிடையே, புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், மீனவர்கள், கூலிவேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை  நடத்தினார்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    கொரோனா நோய் பரவி வருவதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்குவது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிவாரணங்களை அறிவித்தார்.

    இந்த நிலையில் புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், கூலிவேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு வியாபாரிகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை  நடத்தினார்.

    சட்டசபை 4-வது மாடியில் உள்ள கருத்தரங்கு அறையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.பி.க்.கள் வைத்திலிங்கம், கோகுல கிருஷ்ணன், சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெய மூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், கலெக்டர் அருண், அரசு செயலாளர்கள் அன்பரசு, அசோக்குமார், சுர்பிர்சிங், பிரசாந்த்குமார் பாண்டே,

    டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவ் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருண் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கி கூறினார்.

    இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் ஊரடங்கு உத்தரவு அறிவித்த பிறகும் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் தமிழகம் போல நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    வில்லியனூர் அருகே கணவர் வாங்கிய கடனுக்காக அவமானப்படுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பங்கூர் மகாலட்மி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் மற்றும் ரஞ்சித்குமார் என்ற மகன் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.5 ஆயிரம் பணம் கடன் வாங்கினார். அதில், ரூ.3 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டார். மீதி பணம் ரூ.2 ஆயிரம் கொடுக்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீனாட்சி வயல்வெளியில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தபோது கடன் கொடுத்தவர் மீனாட்சியிடம் உனது கணவர் வாங்கிய பணத்தை நீதான் கொடுக்க வேண்டும் என்று கூறி சவுக்கு கம்பால் மீனாட்சியை தாக்கி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஊர் பெரியவர்களிடம் மீனாட்சி முறையிட்டார். ஆனாலும், பணம் கொடுத்தவர் தனது உறவினருடன் மீண்டும் வந்து பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள் என்று மீனாட்சியை அவர்கள் திட்டியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த மீனாட்சி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (57). கூலித்தொழிலாளி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள அருணாசலத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சம்பவத்தன்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த அருணாசலம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் கைலியால் தூக்குப்போட்டு தொங்கினார்.

    உடனடியாக அருணாசலத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அருணாசலம் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உப்பளம் நேதாஜி நகரில் நோய் கொடுமை அதிகமானதால் வீட்டில் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து விட்டு கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    உப்பளம் நேதாஜி நகர் ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். பெயிண்டர். இவரது மகள் சோபியா மேரி. (வயது 20). இவர் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். சோபியா மேரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவருக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபியா மேரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டில் பெற்றோர் இருந்த நிலையில் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து விட்டு வீட்டின் அறையை உட்புறமாக பூட்டிக் கொண்ட சோபியா மேரி மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

    வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர்.

    அப்போது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சோபியா மேரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சோபியாமேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று நேற்றுமுன்தினம் (22-ந்தேதி) நாடுதழுவிய சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மாலை ஐந்து மணிக்கு மேல் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் ஒன்று கூடினர்.

    இதனால் பெரும்பாலான மாநிலங்கள் தங்களது மாநில எல்லைகளை மூடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் ஒரு நபர் கோரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று மாலையில் இருந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

    அதேவேளையில் அத்தியாவசிய பொருட்களுக்காக மெடிக்கல், மளிகைக்கடை, பால் விற்பனையகம் போன்றவை திறந்திருக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் கோரோனா தொற்று ஆபத்தை அறியாமல் ஊடரங்கு உத்தரவை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலின் நிலை 2-ம் கட்டத்தில் உள்ளது, சமூக பரவல் என்ற 3-ம் கட்டத்திற்கு உயர்ந்தால் மிகப்பெரிய சோதனையை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் ஊடரங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் சாவாலானதாக இருக்கும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    அகாடமியில் 30 வீரர்கள் தங்கும் அளவில் உள்ள வளாகத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்க தயாராக இருக்கிறோம் என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
    இந்தி்யாவில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின்பேரின் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வரும் இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதுச்சேரியில் சிகிச்சை அளிக்க போதுமான இட வசதி இல்லை என்றால் எங்கள் அகாடமியில் உள்ள 30 பேர் தங்கும் அளவிற்கு உள்ள வளாகத்தை சிகிச்சை பெறுவதற்காக வழங்க தயாராக இருக்கிறோம் என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது,

    ‘‘புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான அகாடமி துதிபேட்டில் உள்ளது. இந்த அகாடமியின் உள்ளே இரண்டு அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் தங்கும் அளவில் சமையல் மற்றும் சாப்பாடு அறை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள வளாகம் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தியுள்ளோம்.

    கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களில் 30 பேருக்கு இங்கு வைத்து மருத்துவம் பார்க்க முடியும். லட்சுமி மெடிக்கல் காலெஜ் உடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்”என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
    புதுவை யூனியன் பிரதேச எல்லைக்குள் வருகிற 31-ந் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுவை அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக புதுவை யூனியன் பிரதேச எல்லைக்குள் வருகிற 31-ந் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அமலானது. இதனையடுத்து புதுவையின் 4 எல்லைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன. போலீசார் வாகனங்களை வரவிடாமல் பேரிகார்டு அமைத்து தடுத்தனர்.

    கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியகோவில், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் வெளிமாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

    இந்த வாகனங்களில் வந்த பயணிகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாம்களில் சோதனைக்கு பிறகு புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    இருப்பினும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள் கொண்டு வந்த லாரிகள் உரிய ஆவணங்களை காட்டினால் மட்டும் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டன.

    புதுவையை பொருத்த வரை வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களும், புதுவை வழியாக செல்லும் வெளிமாநில பஸ்களுமே அதிகமாக இயக்கப்படுகிறது. இதனால் புதுவை பஸ் நிலையத்தில் வெளிமாநில பஸ்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    அவசர தேவைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்வோர் பஸ்கள் இல்லாததால் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்து இருந்தனர். சிலர் எல்லை பகுதிக்கு சென்று அங்கிருந்து இயக்கப்படும் பஸ்கள் மூலம் சென்றனர். இருப்பினும் புதுவையின் எல்லை பகுதிக்குள் ஓடும் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனிடையே நேற்று இரவு 9 மணியளவில் மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் புதுவையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவின்படி மக்கள் அதிக அளவில் கூடக்கூடாது.

    இதனால் பிரதான சாலைகளில் மக்கள் அதிக அளவில் கூடாமல் போலீசார் தடுத்தனர். அதே நேரத்தில் கடைகளை திறக்க போலீசார் எந்தவித தடையும் விதிக்கவில்லை.

    மக்கள் அதிக அளவில் கூடும் வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அங்கு கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசின் உத்தரவுகளை பின்பற்றும் படியும் வலியுறுத்தினர்.

    வில்லியனூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட நகராட்சி துப்புரவு ஊழியர் பலியானார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே வி.மணவெளி பாரதிதாசன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது39). புதுவை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    கணேசுக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. அளவுக்கு அதிகமாக இவர் மதுகுடித்து வந்ததால் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவர் மதுஅடிமை மையத்தில் ஆலோசனைபெற்று சிலகாலம் மதுஅருந்தாமல் இருந்து வந்தார். பின்னர் அவ்வப்போது கணேஷ் மதுகுடித்து வந்தார். மதுகுடிக்கும் நாட்களில் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்படும். அப்போது அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டுவெளியே சென்ற கணேஷ் அதன்பிறகு மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சாப்பிட்டு விட்டு கணேஷ் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளுக்கு பதிலாக அதிக மாத்திரைகளை சாப்பிட்டார்.

    நேற்று காலை வெகுநேரமாகியும் படுக்கையில் இருந்து கணேஷ் எழுந்திரிக்காமல் மயங்கி கிடந்தார். உடனே கணேசை அவரது மனைவி ரஞ்சனி மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கணேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×