என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் இருந்து தமிழகம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் புதுவை பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது
    X
    புதுவையில் இருந்து தமிழகம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் புதுவை பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது

    புதுவையில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை - எல்லைகளுக்கு சீல்

    புதுவை யூனியன் பிரதேச எல்லைக்குள் வருகிற 31-ந் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுவை அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக புதுவை யூனியன் பிரதேச எல்லைக்குள் வருகிற 31-ந் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை இன்று (திங்கட்கிழமை) காலை முதல் அமலானது. இதனையடுத்து புதுவையின் 4 எல்லைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன. போலீசார் வாகனங்களை வரவிடாமல் பேரிகார்டு அமைத்து தடுத்தனர்.

    கோரிமேடு, மதகடிப்பட்டு, கன்னியகோவில், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் வெளிமாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

    இந்த வாகனங்களில் வந்த பயணிகள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாம்களில் சோதனைக்கு பிறகு புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    இருப்பினும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவு பொருட்கள் கொண்டு வந்த லாரிகள் உரிய ஆவணங்களை காட்டினால் மட்டும் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டன.

    புதுவையை பொருத்த வரை வெளிமாநிலங்களில் இருந்து வரும் பஸ்களும், புதுவை வழியாக செல்லும் வெளிமாநில பஸ்களுமே அதிகமாக இயக்கப்படுகிறது. இதனால் புதுவை பஸ் நிலையத்தில் வெளிமாநில பஸ்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    அவசர தேவைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்வோர் பஸ்கள் இல்லாததால் பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்து இருந்தனர். சிலர் எல்லை பகுதிக்கு சென்று அங்கிருந்து இயக்கப்படும் பஸ்கள் மூலம் சென்றனர். இருப்பினும் புதுவையின் எல்லை பகுதிக்குள் ஓடும் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதனிடையே நேற்று இரவு 9 மணியளவில் மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் புதுவையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவின்படி மக்கள் அதிக அளவில் கூடக்கூடாது.

    இதனால் பிரதான சாலைகளில் மக்கள் அதிக அளவில் கூடாமல் போலீசார் தடுத்தனர். அதே நேரத்தில் கடைகளை திறக்க போலீசார் எந்தவித தடையும் விதிக்கவில்லை.

    மக்கள் அதிக அளவில் கூடும் வாய்ப்புள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அங்கு கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரசின் உத்தரவுகளை பின்பற்றும் படியும் வலியுறுத்தினர்.

    Next Story
    ×