என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ராகுல் தாக்கப்பட்டதை கண்டித்து புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார்.

    இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்காகாந்தி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட களேபரத்தில் ராகுல்காந்தி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கீழே விழுந்தார். போலீசார் அவரை கைது செய்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் வைரலாக பரவியது. இதனையடுத்து காங்கிரசார் பல்வேறு மாநிலங்களில் ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த உத்தரபிரதேச போலீசாரை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவையிலும் இளைஞர் காங்கிரஸ், மகிளா, மாணவர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இன்று மாநில காங்கிரஸ் சார்பில் புதுவை அண்ணா சிலை அருகே ராகுல்காந்தியை தாக்கி, அவரை கைது செய்ததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    இதன்படி இன்று காலை 9 மணியளவில் அண்ணா சிலை அருகே காங்கிரசார் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

    போராட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலகண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, வட்டார, அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசையும், உத்தரபிரதேச பா.ஜனதா அரசையும் கண்டித்து பேசினர். இன்று மாலை 5 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் முடிவடைகிறது.

    புதுச்சேரியில் இன்று முதல் மதுபார்கள் திறக்க கலெக்டர் அருண், கலால் துறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி உள்ளார். நள்ளிரவில் அனுமதி வழங்கப்பட்டதால் ஒரேநேரத்தில் அனைத்து பார்களும் திறக்கப்படவில்லை.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கு பரவ தொடங்கிய மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் மார்ச் 22-ந் தேதி மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 24-ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், புதுவையில் 23-ந் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலானது.

    பொது போக்குவரத்து, மதுகடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், விடுதிகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதன்பின் மத்திய அரசு மே மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளித்து வருகிறது.

    3 மாதத்திற்கு பிறகு மே மாத இறுதியில் 25-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. முதல் 3 மாதத்திற்கு வரி விதிக்கப்பட்டது.

    இந்த வரி விதிப்பால் புதுவையில் மதுபானங்கள் விலை தமிழகத்திற்கு இணையாக உயர்ந்தது. மதுபானங்கள் விலை உயர்வு, பார்கள் திறக்காதது, பொது போக்குவரத்து ரத்து ஆகியவற்றால் மது அருந்த புதுவைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

    கடந்த ஆகஸ்டு மாதம் மேலும் 3 மாதத்திற்கு மது பானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 5-ம் கட்டமாக தற்போது ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்களை 50 சதவீத இருக்கை வசதியுடன் திறக்கலாம். பள்ளி, கல்லூரிகளை படிப்படியாக திறக்கலாம் என புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் மதுபார்கள் திறக்க கலெக்டர் அருண், கலால் துறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், நள்ளிரவில் அனுமதி வழங்கப்பட்டதால் ஒரேநேரத்தில் அனைத்து பார்களும் திறக்கப்படவில்லை.

    மதுபார்களை சுத்தப்படுத்தும் பணி, சமூக இடைவெளியின்படி இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகளில் மது பார் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மதுபார்கள் இன்று திறக்கப்பட்டது.

    மேலும் நாளை காந்தி ஜெயந்தி என்பதால் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும். பொது போக்குவரத்துக்கு தடை, மதுபான விலை உயர்வு நீடிப்பதால் கடந்த காலத்தைபோல மது பிரியர்கள் புதுவைக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    புதுச்சேரி உழவர்கரை நகராட்சி இந்திராநகர் தொகுதி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் (வயது 53). என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர். காமராஜர் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இவர் தினமும் காலையில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள போக்குவரத்து முனையத்திற்கு சென்று அங்கு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

    இதேபோல் நேற்று காலை அங்கு சென்ற சுந்தர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது.

    இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுந்தர் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதன்பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

    இது குறித்து தகவலறிந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சுந்தரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை வழிமறித்து வெட்டிக் கொலை செய்த ஆசாமிகள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சுந்தர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கொலை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இதில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுந்தர் கொலை சம்பத்தை அரங்கேற்றியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நடைபயிற்சிக்கு சென்று இருந்தபோது சுந்தர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக் கோரி தட்டாஞ்சாவடி நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது சுப்பையா திருமண மண்டபம் அருகே திண்டிவனம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களில் சிலர் திடீரென அந்த வழியாக வந்த அரசு சாலை போக்குவரத்து கழக பஸ் மீது கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அந்த பகுதியில் கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான சுந்தர் கொலையை தொடர்ந்து மறியல், கல் வீசி பஸ் கண்ணாடி உடைப்பு என அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தின.
    புதுவை அரசுக்கு  கெட்ட பெயர் ஏற்படுத்தும் எண்ணத்தில் கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதி, சுதேசி பஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் விருப்ப ஓய்வு மூலம் வெளியே செல்லலாம் என அறிவித்திருந்தோம். இதற்கான கோப்பை கவர்னருக்கு அனுப்பியிருந்தோம். ஆனால், கவர்னர் இதை கண்டுகொள்ளாமல் பஞ்சாலைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

    சுதேசி, பாரதி மில்லை பொறுத்தவரை 200 தொழிலாளர்கள் உள்ளனர். 2 மாத ஊதியம் வழங்க ரூ.1 கோடி 40 லட்சம் வழங்க கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் கவர்னர் பஞ்சாலைகளை மூட உத்தரவிட்டு துறைக்கு கோப்பு அனுப்பி உள்ளார்.

    சம்பளம் வழங்கவே நாங்கள் கோப்பு அனுப்பினோமே தவிர மூடுவதற்கு இல்லை. கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளை மிரட்டி மில்களை மூட செய்துள்ளார். தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தி.மு.க.- காங்கிரஸ் ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிதர வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்னர் கிரண்பேடி பஞ்சாலை மூடுவிழாவை நடத்தி வருகிறார். மூடுவிழா நடத்துவதற்கு கவர்னர் தேவையா?அதுதான் அவர் வேலையா?

    இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வெகு விரைவில் இல்லை. கிரண்பேடியின் அராஜகத்தின் உச்சகட்டம் இது. கவர்னராக செயல் படாமல், மக்களுக்கு விரோதமான செயலில் ஈடுபட்டு வருகிறார். சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கினால் அதை தடுப்ப தற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

    இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தால் எங்களது அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஏனென்றால் மத்தியில் வேறு ஆட்சி உள்ளது. பா.ஜ.க.வின் இரட்டைவேடம் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு தெரி யும்.

    புதுவை மாநிலத்தில் அரசை செயல்படாமல் விட கவர்னர் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் நல்ல பெயருடன் வெளியே செல்வார்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தாண்டு பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக தனியாக தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நடப்பு கல்வியாண்டு முதல் (2020-2021) ‘நீட்’ தேர்வு முறையே பின்பற்றப்படும்.

    ஆனாலும் ஜிப்மர் நிறுவனத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில் அனைத்து இட ஒதுக்கீடு மற்றும் இருப்பிட தகுதிகளுக்கான வாய்ப்புகளும் பாதுகாக்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 2 மையங்களுக்கும் இது பொருந்தும். இது சார்ந்த அனைத்து அதிகாரப்பூர்வமான தகவல்களும் எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவ படிப்பின் அனுமதி தேர்வுக்கான ‘புரோஸ்பெக்டஸ்’ எனப்படும் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரின் அதிகாரபூர்வ இணையதளமான www.jipmer.edu.in-லும் தெரிந்து கொள்ளலாம்.

    கொரோனா காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஜிப்மரில் பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் அனைவரும் அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் தபால் வழியாக அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், கடற்கரை இரவு 9 மணி வரை திறந்து இருக்கும் என்றும் மாவட்ட கலெக்டர் அருண் அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நள்ளிரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை பள்ளிகளுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி 10, 12 ஆகிய வகுப்புகள் 5-ந்தேதி முதலும், 9, 11-ம் வகுப்புகள் 12-ந்தேதி முதலும் தொடங்கும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கப்படும்.

    விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் நீச்சல் குளங்கள், பூங்காக்களை 15-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கலாம்.

    கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் 100 நபர்கள் வரை கல்வி, விளையாட்டு, பொழுதுப்போக்கு, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

    ஓட்டல்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். இரவு 10 மணி வரை பார்சல் மூலமாக விற்பனை செய்துகொள்ளலாம். புதுச்சேரி கடற்கரை இரவு 9 மணி வரை மக்கள் நடைபயிற்சிக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபான கடைகள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்தை மத்திய மந்திரி நிதின் கட்காரி காணொலி காட்சி மூலம் வருகிற 7-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவை-விழுப்புரம் இடையே அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் மூடப்படும் போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். இதையடுத்து அங்கு பாலம் கட்ட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து அரும்பார்த்தபுரம் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே பாலம் கட்ட கடந்த 2011-ம் ஆண்டு ரெயில்வே துறை மந்திரியாக இருந்த மல்லிகார்ஜூன கார்கே அடிக்கல் நாட்டினார். ரூ.30 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நிதி பற்றாக்குறை மற்றும் இணைப்பு பகுதிக்கான நிலத்தை கையகப்படுத்துவதில் இழுபறி நீடித்ததால் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன்பின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்றது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழா காண பாலம் காத்திருக்கிறது.

    இந்த பாலத்தை திறந்து வைப்பது குறித்து மத்திய அரசிடம், புதுவை அரசு அனுமதி கேட்டது. தற்போது இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) இதற்கான திறப்பு விழா நடக்கிறது. காணொலி காட்சி மூலம் பாலத்தை மத்திய மந்திரி நிதின்கட்காரி திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த பாலம் திறக்கப்பட்டதும் புதுவை-விழுப்புரம் இடையே பயணநேரம் 30 நிமிடம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
    மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    பாகூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரதிஷ் (வயது 28), தொழிலாளி. இவருக்கும் சேலியமேடு பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பிரதிஷிடம் கோபித்துக்கொண்டு கடந்த 1½ ஆண்டுக்கு முன் நந்தினி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் பிரதிஷ் மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இது குறித்து பிரதிஷின் தாயார் கோமளா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருக்கனூர் ஜவுளிக்கடையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த தையல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்தவர் கந்தன் (வயது 55), தையல் தொழிலாளி. இவர் திருக்கனூர் கடைவீதியில் தமிழக பகுதியான சித்தலம்பட்டில் தையல் கடை வைத்துள்ளார். திருக்கனூரில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் துணி வாங்க வந்தார். அப்போது அந்த கடைக்கு 12 வயது சிறுமியும் அவரது தாயாரும் வந்திருந்தனர். கடையில் இருந்த கந்தன் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்தார். பின்னர் அவர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
    தமிழகத்தை போல் புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் நாளை (1-ந் தேதி) முதல் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டு இருந்தது.

    அதன்படி புதுவையிலும் வருகிற 5-ந் தேதி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 12-ந் தேதியன்று 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    புதுவையை பொறுத்த வரை கல்வி தொடர்பான அனைத்து வி‌ஷயங்களிலும் தமிழகத்தையே பின்பற்றுகிறது. எனவே, பள்ளிகள் திறக்கும் தேதி புதுவையிலும் மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதுவை மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதா? தள்ளி வைப்பதா? என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன்பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,544 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இன்று காலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 80 ஆயிரத்து 472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவிடம் சிக்கியவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்து 25 ஆயிரத்து 674 ஆக உயர்ந்தது.
     
    கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த கொரோனா பலி எண்ணிக்கை 1,179 ஆகும். இதன்மூலம் மொத்த பலி  எண்ணிக்கையும் 97,497 ஆக அதிகரித்து இருக்கிறது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 40 ஆயிரத்து 471 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 51 லட்சத்து 87 ஆயிரத்து 826 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,544 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.
    வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம், ராஜீவ் காந்தி சதுக்கம், வில்லியனூர், திருக்கனூர், பாகூர், தவளக்குப்பம், மதகடிப்பட்டு ஆகிய 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டது. இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மற்ற இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறப்படவில்லை. இதில் பங்கேற்றவர்கள் மீது பேரிடர் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்தந்த பகுதி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    அதன் படி கோரிமேடு போலீசில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார் (காங்கிரஸ்), வெங்கடேசன் (தி.மு.க.) உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் 145 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் திருபுவனை போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 75 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    ×