என் மலர்
விருதுநகர்
- தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்துள்ளனர்.
- மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-
வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ண குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக சிதம்பர பாரதி (ஆவியூர்), சேகர் (குரண்டி), ஜெகன் (செங்குன்றாபுரம்), அய்யனார் (அதிவீரன் பட்டி), கார்த்திகேயன் (விருதுநகர்), திலீபன் மஞ்சுநாத் (சிவகாசி ரிசர்வ் லைன்).
தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளராக தனுஷ் எம்.குமார் எம்.பி. நியமனம் செய்யப் பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக தங்கம் ரவி கண்ணன் (ஸ்ரீவில்லி புத்தூர்), பாபு (அருப்புக் கோட்டை), பாசறை ஆனந்த் (ராஜபாளையம்), கார்த்திக் (ராஜபாளையம்), கே.கார்த்திக் (வெம்பக்கோட்டை).மேற்கண்ட தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.
- மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
- குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் இதற்காக அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம்.
இங்கு வரும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாட்களுக்குள் சாட்சியம் பெறப்பட்டு வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
நாடு முழுவதும் மாவட்டம் தோறும் போக்சோ கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்சோ கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த ஆண்டு நீதிபதியாக பூரணஜெய் ஆனந்த் பொறுப்பேற்றார். அப்போதிருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் போக்சோ வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகளின் உண்மை தன்மை மூலம் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
- பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்.
- குப்பைகளை எளிதில் சேகரித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மன்றத்தலைவர் தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ஊராட்சி களின் பயன்பாட்டிற்கு பேட்டரியால் இயங்கும் மின்கல வண்டிகளை நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கிராம ஊராட்சி) வழங்கி னார்.
இந்த வாகனங்களுக்காக 70 சதவீத பங்குத்தொகை தூய்மை பாரத இயக்கம் என்ற திட்டத்தின் மூலமாக வும், மீதமுள்ள 30 சதவீத பங்குத்தொகை 15-வது நிதிக்குழு மானியத்திலும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2023-24 நிதியாண்டிற்காக நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள நரிக்குடி, மானூர், புல்வாய்க் கரை, சேதுபுரம், வேளானூரணி, கட்டனூர், வீரசோழன், மினாக்குளம் மற்றும் பூமாலைப்பட்டி உள்பட 14 ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத்தலைவர்களின் விருப்பத்திற்கிணங்க ஊராட்சிகளின் பயன்பாட்டிற்காக சுமார் 17 மின்கல வண்டிகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் நரிக்குடி ஊராட்சிக்கு 2 பேட்டரி வண்டிகளும், அதிகபட்சமாக வீரசோழன் ஊராட்சிக்கு 3 பேட்டரி வண்டிகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் ஊராட்சி களிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று குப்பைகளை எளிதில் சேகரித்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ., உமா சங்கரி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்பட யூனியன் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- ராஜபாளையத்தில் ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
ராஜபாளையம்
ராமசுப்பிரமணிய ராஜா 88-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, அவரது மகன் பி.வி.அபினவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அபினவ வித்யாதீர்த்த பாரதீ பாடசாலையில் அமைந்துள்ள ராமசுப்பிரமணிய ராஜாவின் திருஉருவ சிலைக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் அங்கிருந்து நினைவு ஜோதி ஓட்டத்தை வெங்கட்ராம ராஜா தொடங்கி வைத்தார்.
நினைவு ஜோதியை ராம்கோ டெக்ஸ்டைல் பிரிவு ஊழியர்கள் ஏந்தி வந்தனர். இந்த ஓட்டம் சாரதம்பாள் கோவில் ராமசுப்பிரமணிய ராஜா இல்லமான ராமமந்திரம் வழியாக ராஜபாளையம் மில்ஸ் வந்தடைந்தது. அங்கு நினைவு ஜோதியை வெங்கட் ராமராஜா ஸ்தாபனம் செய்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் டி.எம்.கிருஷ்ணா இசைநிகழ்ச்சியும், நேற்று சஞ்ஜய் சுப்பிரமணியன் இசை நிகழ்ச்சியும் நடந்தன.
- விருதுநகரில் நகராட்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் நகராட்சி, அண்ணாமலையம்மாள் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கல்லூரி சாலையில் ரூ.200 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அறிவுத்திறன் பயிற்சி மையம்.
நமக்கு நாமே திட்டம் மூலம் வி.என்.பி.ஆர் நகராட்சி பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் தயாளன் ராஜேஷ் காலனியில் உள்ள பூங்காவினை ரூ.44 லட்சம் மதிப்பிலும், லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை ரூ.40 லட்சம் மதிப்பிலும் மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.
பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பு கட்டடம் அமையவுள்ள இடத்தியும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- விருதுநகர் கலெக்டர் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவி களுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாமினை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை யில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
பின்னர், இம்முகாமின் மூலம் 13 மாணவர்கள் அரசு தொழில்பயிற்சி மையத்திலும், 2 மாணவர்கள் அரசன் கணேசன் தொழில் நுட்ப கல்லூரியிலும், 10 மாணவர்கள் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 4 மாணவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியிலும், 13 மாணவர்கள் ஏ.ஏ.ஏ. பொறி யியல் கல்லூரியிலும், 22 மாணவர்கள் ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் என மொத்தம் 64 மாணவர்க ளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வ தற்கான சேர்க்கை ஆணை களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு உலகின் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக திறன்களை வளர்ப்பதற்கும், பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையும், உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் நமது விருதுநகர் மாவட்டம் 12-ம் வகுப்பில் அதிக தேர்ச்சி விகிதங்கள் பெற்று கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 7226 மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்விக்கு சேர வேண்டும் என்ற நோக்கத் தில் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் முகாம் கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ராஜ பாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி பகுதிகளில் இது வரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 193 மாணவ, மாணவிகளில் 136 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் நடைபெற்றது.
இந்திய அளவில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது. அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்று, தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தர வேண்டும்.
இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தகுதிக்கேற்ப அவர்களின் திறன் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர், அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் நடந்தது.
- மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சுகாதார மேற்பார்வையாளர் பேசினார்.
சிவகாசி
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 26-ந்தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது. விழாவில் விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக விழாவுக்கு தலைமை தாங்கினார். முதல்வர் நந்தகுமார் கலந்து கொண்டார்.
சுகாதார மேற்பார்வை யாளர் வீரபத்திரன் பேசுகையில், மாணவர்கள் மது மற்றும் புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறினார். குட்கா, கஞ்சா போன்ற பொருட்கள் மூளையை பாதித்து உங்களது நினைவை மாற்றுகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
சுகாதாரம் சாரா மேற்பார்வையாளர் பாண்டியன் பேசுகையில், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு தானே பேசிக்கொள்வது. எதைக்கண்டாலும் பயப்படுவது போன்றவை ஏற்படுகிறது. சிறுநீரகம். கல்லீரல் பாதிப்பு போன்ற வையும், இதயம் சார்ந்த பாதிப்பும் ஏற்படுகிறது. முன்னதாக மாணவர்கள் பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவில் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வடமலாபுரம் சுகாதார ஆய்வாளர் விக்ணேஷ் மற்றும் எம்.புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஷேக் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
- திருச்சுழி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் வகுப்புகள் நடக்கின்றன.
- நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் ஆன்மீகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பகவான் ரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
450 பேர் படிக்க வேண்டிய பள்ளி கட்டிடத்தில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இட நெருக்கடி யால் மாணவ-மாணவிகள் பள்ளியை விட்டு வெளியே சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பின்தங்கிய பகுதியான திருச்சுழியில் கல்வி தொடர வந்துள்ள மாணவர்கள் மத்தியில் இட நெருக்கடியால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பள்ளியில் 600 முதல் 700 பேர் வரை படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போதைய கல்வியாண்டில் மேலும் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் படிக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது 60 முதல் 70 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் இட நெருக்கடி ஏற்பட்டு மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலான மாணவர்கள் இருக்கையிலும், இடம் பற்றாக்குறை காரணமாக தரையிலும் அமர்ந்து கல்வி கற்றுக்கொள்வதால் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துகிறது.
மேலும் போதிய இட வசதி இல்லாமல் இட நெருக்கடியால் பள்ளியின் வெளியே உள்ள சாலையின் நடுவே காலை பிரார்த்தனையில் பள்ளி மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விளையாட்டு மைதானம், ஆய்வக வசதியும் இல்லாமல் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் இங்கு அரசு பள்ளியில் போதிய இடம் வசதியில்லாத காரணத்தினால் மாணவர்கள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
ஆகவே திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகரில் காதல் ஜோடிகள் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் ரோசல் பட்டி முத்தால் நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது43). இவரது மகன் விசால் (18). இவர் பாலவநத்ததில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முருகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் முதல்வர் மாணவர் மற்றும் மாணவியை அழைத்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் மாணவி ஏழாயிரம் பண்ணையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது மாணவரும் அங்கு சென்றுள்ளார்.
இது கல்லூரி முதல்வருக்கு தெரியவந்தது. அவர் இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை வரவழைத்து மாணவியை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் வெளியூருக்கு வேலைக்கு செல்வ தாக கூறி சென்ற விசால் பின்னர் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த முருகேஸ்வரி மாணவியின் ஊருக்கு சென்று விசாரித்தார். அப்போது மாணவியும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் முருகேஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.எஸ்.காலனியை சேர்ந்தவர் நாகலட்சுமி (42). இவரது மகள் கார்த்திகா(19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மாசிநாயக்கன்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் என்பவருடன் பழகி வந்தார். இதனை தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் கார்த்திகாவின் 19-வது பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடினர். பின்னர் கல்லூரிக்கு சென்ற கார்த்திகா வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்த எழிலரசன் வீட்டிற்கு சென்று உறவினர்கள் விசாரித்தனர். அப்போது எழிலரசனை காணவில்லை என்றும் தேடி கொண்டிருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார்.
- குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 23). இவர் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பிரபாகரன் (26) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கணவர் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ. 10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தினார். இதற்கு அவரது பெற்றோர் மாரிமுத்து-மாரியம்மாள், உறவினர்கள் கிருபாராணி, சுரேஷ் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.
இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் 2020-ம் ஆண்டு புகார் செய்தேன். போலீசார் சமூக நலத்துறை மூலம் எங்களை சமரசம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அந்த புகாரை நான் வாபஸ் பெற்றேன்.
இதற்கிடையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த பிரபாகரன் மீண்டும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். மேலும் விவாகரத்து கேட்டு தேனி கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். ஆனால் அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதுகுறித்து மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் அளித்தேன். அவர்கள் விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறையிடம் கவுன்சிலிங் செல்ல நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பிரபாகரன் தொடர்ந்து இந்த விவகாரத்தில் என்னை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்தியதாக பிரபாகரன் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
- சாத்தூர் அருகே அட்டை கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமான அட்டை கம்பெனி பெத்துரெட்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் கழிவு பேப்பர்களை சேகரிக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ வேகமாக பரவத்தொடங்கியது. அங்கிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டைஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
- 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களுக்கு மதத்தைச் சார்ந்த பொருளா தாரத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டி ருக்கும் தொழிலை விரிவு படுத்தியும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக்கடன், கல்விக்கடன், கறவை மாட்டு கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2023- 2024-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் வருகிற 10-ந் தேதி அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11-ந்தேதி காரியாபட்டி வட்டாட் சியர் அலுவலகத்திலும், 12-ந்தேதி அருப்புக்கோட்டை வட்டாட் சியர் அலுவலகத்திலும், 13-ந்தேதி திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
இதேபோல் 17-ந்தேதி ராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்திலும், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட் டாட்சியர் அலுவலகத்தி லும், 19-ந்தேதி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தி லும், 20-ந்தேதி வெம்பக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21-ந்தேதி அன்று வத்ராப் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.






