என் மலர்tooltip icon

    விருதுநகர்

    கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கண்டியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லாயி (வயது 80). இவர் அவரது உறவினரான பழனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கறம்பக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அம்புக்கோவில் சாலையில் சென்ற போது நாய் குறுக்கே செல்லவே, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி செல்லாயி, பழனிசாமி ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் செல்லாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மகேந்திரன் கறம்பக்குடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இளம்பெண்ணை சித்ரவதை செய்வதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    மதுரை மாவட்டம், மேலூர் காந்திஜி பூங்கா தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் சீமா (வயது 29), என்ஜினீயர். இவருக்கும், விருதுநகர் முத்துச்சாமி தெருவைச் சேர்ந்த அஜய் சுதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது 42 பவுன் நகைகள், ரூ.1 ½ லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்கு வைர மோதிரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் கணவர் வீட்டார் சித்ரவதை செய்ததாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், சீமா புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கணவர் அஜய் சுதர்சன், அவரது பெற்றோர் சக்திவேல்-ஞானசக்தி மற்றும் சகோதரி லட்சுமி நாராயணி ஆகியோர் அடிக்கடி சித்ரவதை செய்ததாகவும், நகைகளை வாங்கி வைத்துக் கொண்டு தன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவிட்டதின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் அஜய் சுதர்சன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நெல்லை அருகே பஸ் மோதியதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லை:

    கங்கைகொண்டான் நான்கு வழி சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் விபத்தில் பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25.4.2014 அன்று அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாழவந்தான் கோவில் அருகே இருசக்கரவாகனத்தில் வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள தொட்டியங்குளம் ெரயில்வே பாலத்தின் கீழ் பதுக்கிய 9 மூடைகளில் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரணை செய்ததில் அருப்புக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகியோரிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து சந்திரன், ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ரேஷன் கடை விற்பனையாளர் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய இருவருக்கும் தலா 3 வருட ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    புளியரை சோதனைச்சாவடியில் தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    செங்கோட்டை:

    தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வாகனங்களில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்தனர்.

    இதில் கேரள மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 66), முருகன் (58), விருதுநகர் மாவட்டம் வையாபுரியைச் சேர்ந்த மற்றொரு முருகன் (52) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    தொடர்மழையில் இருந்து பயிர்களை காப்பாற்றுவது எப்படி என்பது பற்றி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
    தாயில்பட்டி:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் பருவமழை மற்றும் சூறை காற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும், கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வெம்பக்கோட்டை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் குணசீலி அறிவுரை வழங்கி உள்ளார்.

    வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 42 ஹெக்டர் பரப்பளவில் வாழை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழைமரம் சூறைக்காற்றில் இருந்து சேதம் அடையாமல் இருக்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் முட்டுக் கொடுப்பதன் மூலம் காற்றிலிருந்து வாழைமரத்தை பாதுகாக்க முடியும்.

    வாழை மரங்களின் கீழ்மட்ட கிளைகளை அகற்ற வேண்டும். வாழையில் 75 சதவீதத்திற்கும் மேல் காய்கள் முதிர்ந்து இருந்தால் அவற்றை அறுவடை செய்வதன் மூலம் மகசூல் இழப்பை தடுக்கலாம்.

    மாமரங்களில் காவாத்து செய்து சுமையை குறைப்பதன் மூலம் மரங்கள் சேதமடைவதை தவிர்க்கலாம். மா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை போன்ற சிறிய செடிகளை காற்றினால் பாதிக்காத வகையில் தாங்கு குச்சிகளை கட்டவேண்டும்.

    தொடர்மழை விவசாயிகளின் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி காய்கறிகளை வீணாவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். தக்காளி செடிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும்.

    காய்கறிகள் மற்றும் மலர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிரைக்கோ டெர்மா, விரிடி மற்றும் சூடோமோனாஸ் முதலான உயிரிபூஞ்சான கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் வேர் அழுகல் நோயிலிருந்து பாதிப்பை குறைக்க முடியும். இவ்வாறு தொடர் மழை மற்றும் சூறாவளி காற்று எதிர்கொள்ள விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற இழப்பைத் தடுக்கமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாடு முழுவதும் 5,100 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள் கடலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், சென்னை மணலிக்கு 3 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    வீட்டை மூழ்கடித்த வெள்ளம்


    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் தஞ்சை, கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீச்சல் தெரிந்த 19,547 பேர், மரம் அறுக்கத்தெரிந்த 15,912 பேர், பாம்பு பிடிப்பவர்கள் 3,117 பேர், கால்நடை பாதுகாப்பிற்கு 19,535 பேர் என சுமார் 1.05 லட்சம் தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மட்டும் மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். கடலில் மீன்பிடிக்க சென்ற 33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன. ஏரிகளில் பகல் நேரத்தில் மட்டுமே தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், ஆணையர் நாகராஜன், மேலாண்மை இயக்குனர், சுப்பையன் உடன் இருந்தனர்.


    சிவகாசியில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வகணேஷ் (வயது 21). இவருக்கும், வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் வத்திராயிருப்புக்கு சென்ற செல்வகணேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் எரிச்சநத்தம் -விருதுநகர் சாலையில் கோட்டையம்மன் கோவில் அருகே செல்வகணேஷ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கருகி கிடந்தது.

    எம்.புதுப்பட்டி போலீசார், செல்வகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வத்திராயிருப்பைச் சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    செட்டிபாளையத்தில் மணல் கடத்திய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
    செட்டிபாளையம்:

    கோவை மாவட்டம் செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் மற்றும் போலீசார் ராஜசேகர், கார்த்திக் ஆகியோர் பெரியகுயிலி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்து லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த லாரியில் முறையான எந்த ஆவணங்களும் இல்லாமல், சட்ட விரோதமாக கிராவல் மண்ணை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரியகுயிலி பிரிவை சேர்ந்த விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி பறிமுதல் செய்து விஜய் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புழுகாண்டி மகன் மகேஸ்வரன் (வயது 27). வேன் டிரைவர்.

    இவர் இன்று அந்த பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கண்மாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இதனை அறியாமல் கண்மாய்க்குள் இறங்கிய மகேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கி உள்ளார்.

    இதனை கண்டவர்கள் கண்மாய்க்குள் இறங்கி மகேஸ்வரனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கண்மாயில் இறங்கி தேடி மகேஸ்வரன் உடலை மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பலியான மகேஸ்வரனுக்கு மாரீஸ்வரி (24) என்ற மனைவியும், மகாலட்சுமி (5), திவ்யா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
    பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.
    நம்முடைய வாழ்க்கையில் போராட்டமான தருணங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், அதில் இருந்து வெளிவர நம்பிக்கையே நமக்கு உறுதுணையாக இருக்கிறது. அதுவும் கடவுள் மீது நம்முடைய நம்பிக்கையை வைத்து, அவரோடு இணைந்து அந்த போராட்டத்தை எதிர்கொள்ளும்போது, எளிதாக அதில் இருந்து விடுபடவும் முடிகிறது. ஆனால் பல தருணங்களில் நாம் இறைவனை விடுத்து, நம்முடைய சுய பலத்தினையே சார்ந்து இருப்பதால் தோல்வியை சந்திக்கிறோம். அப்படி சுயபலத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரை பற்றி இங்கு காண்போம்.

    இயேசு கிறிஸ்துவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் சீமோன் என்று அழைக்கப்பட்ட பேதுருவும் ஒருவர். பாஸ்கா விருந்தின்போது இயேசு பேதுருவிடம் “சீமோனே.. இதோ கோதுமையைப் போல் உங்களைப் புடைக்க, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார்.

    இயேசு கூறியதை கேட்டதும் பேதுரு “ஆண்டவரே, உம்மோடு சிறையிடப்படுவதற்கும், ஏன்.. சாவதற்கும் கூட நான் ஆயத்தமாய் உள்ளேன்” என்று உறுதிபட கூறினார்.

    ஆனால் இயேசு அவரிடம், “பேதுருவே, இன்றிரவு, ‘என்னைத் தெரியாது’ என மும்முறை நீ மறுதலிக்கு முன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

    இயேசுவை கைது செய்து தலைமை குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, பேதுருவும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அங்கிருந்த பணிபெண் ஒருவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு “இவனும் அவனோடு இருந்தவன்” என்றார்.

    பேதுருவோ, “அம்மா, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், “உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்” என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, “நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது” என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கினார்; “இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

    இயேசுவுக்கு மோசேவும், எலியாவும் காட்சி கொடுத்து பேசியபோது, தொழுகைக் கூடத் தலைவரின் மகளை உயிர்ப்பித்த நிகழ்வின் போது என பல முக்கியமான தருணங்களில் பேதுரு இயேசுவுடன் இருந்தார். இயேசு கடல் மீது நடந்தபோது, அவரிடம் தானும் அவ்வாறு கடல்மீது நடக்க ஆணையிடும் என்று கேட்டுகொண்டு பேதுருவும் கடல் மீது நடந்தார். அதுமட்டுமன்றி, விவிலியத்தில் பார்க்கும்போது பல இடங்களில் இயேசு பேதுருவிடம் கேள்விகளை கேட்டு பதிலை பெறுகிறார். அதேபோல் இயேசுவிடம் பேதுரு தன்னுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கமும் பெறுகிறார். இவ்வாறு பல தருணங்களில் இயேசுவின் வாழ்வில் முக்கியமான ஒருவராய் பேதுரு திகழ்ந்தார்.

    எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு பேதுருவிடம், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா’’ என்றார். இதன் மூலம் திருச்சபை வளர்ச்சியில் பேதுருவின் பங்களிப்பு முக்கியமானது என்பதை இயேசு முன்னறிவித்தார்.

    அப்படிபட்டவர் இயேசுவை மும்முறை மறுதலிக்க காரணம், இயேசு கூறிய எச்சரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு, பேதுரு தன் மீது வைத்திருந்த சுய நம்பிக்கையே காரணமாகும். இன்றும் நம்மில் பலர் இறைவன் கூறும் வார்த்தையையும், எச்சரிப்பையும் விடுத்து நம்மையே நாம் அதிகமாய் நம்பிக் கொண்டிருப்பதால்தான் வழி தவறி போகிறோம். தடுமாறி விழுகிறோம். ஆனால் பேதுருவை பார்க்கும் போது அவர் தவறினாலும், அதற்காக மனம் வருந்தினார். மனம் மாறினார்.

    “நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்று இயேசு கூறியதற்கு ஏற்ப, இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு பல இடங்களில் இறைவனுக்கு சாட்சியாய் நின்று, பலரும் கிறிஸ்துவை பின்பற்ற காரணமாய் விளங்கினார். அவரை போன்று நாமும் நம்முடைய தவறை உணர்ந்தவர்களாய், அதற்காய் மனம் வருந்தி இனிவரும் காலங்களில் இறைவனுக்கு சாட்சியான வாழ்க்கையை வாழ்வோம்.
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த அக்டோபர் முதல் நவம்பர் வரை 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
    விருதுநகர்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் இதன் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனாவுக்கு உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா உயிர்பலி எதுவும் நிகழவில்லை.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரை உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்தப்பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த அக்டோபர் முதல் நவம்பர் வரை 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 693 பேர் பலியாகி உள்ளனர்.

    இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. மழைக்காலம் தொடங்கி விட்டது.

    எனவே நோய் பாதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட தொல்லைகள் வருவது சகஜம் தான். இருந்தபோதிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் நோயை முளையிலேயே கிள்ளி எறிய முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

    ×