என் மலர்tooltip icon

    விருதுநகர்

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காக்களூர் சிட்கோ, ஆஞ்சநேயபுரம், நரசிங்கபுரம், திருவள்ளூர் நகரம், ஜெ.என்.ரோடு, நேதாஜி சாலை, வீ.எம்.நகர், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பூண்டி, மெய்யூர், குஞ்சலம் பென்னலூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    பணமோசடி செய்ததாக அளிக்கப்பட்ட 2 புகார்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே..டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை ேசர்ந்தவர் ரவீந்திரன் (வயது49). இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். தாயில்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மாரியப்பன்.

    இந்தநிலையில் ரவீந்திரன் தனது சகோதரி மகன் ஆனந்த் என்பவருக்கு வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். இதையடுத்து வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் விஜயநல்லதம்பி மூலமாக ஆவின் கிளை மேலாளர் வேலை வாங்க வாய்ப்பு உள்ளதாக மாரியப்பன் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விஜயநல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு சென்று, ஆனந்த்திற்கு வேலை வாங்கி தரும்படி ராஜேந்திரபாலாஜியிடம் பேசி முடித்து விட்டதாக கூறி ரூ.30 லட்சத்தை பல தவணைகளாக பெற்றதாக கூறப்படுகிறது. வேலை வாங்கி தராத நிலையில் ரவீந்திரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.30 லட்சத்தை ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்து விட்டதாகவும், அவர் திருப்பி தந்தால்தான் தர முடியும் என்றும் விஜயநல்லதம்பி கூறியதாக தெரிகிறது.

    இதனைத்ெதாடர்ந்து ரவீந்திரன், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசார் விஜயநல்லதம்பி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே விஜயநல்லதம்பி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகாரில் சத்துணவு, ஆவின், கூட்டுறவு, பஞ்சாயத்து ஆகிய துறைகளில் பல்வேறு நபர்களுக்கு வேலை வாங்கி தர கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துபாண்டி ஆகியோரிடம் பல தவணைகளாக ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்ததாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வருைகயையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும், மேலும் பல்வேறு பணிகளை செய்யவும் ராஜேந்திரபாலாஜி கூறியதின் பேரில் ரூ. 1½ கோடி செலவு செய்துள்ளேன். ஆனால், வேலை வாங்கி தராமலும், திருப்பி தருவதாக கூறிய பணத்தை திருப்பி தராமலும் மொத்தம் ரூ.3 கோடி வரை ஏமாற்றிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரின் பேரில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திடீர் சாலை மறியல் நடந்தது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் ஆரிப்நகர் பகுதியில் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஆரிப்நகர் எதிரே உள்ள பெரிய ஏரி நிரம்பி அருகில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

    இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் நகராட்சியில் பலமுறை கால்வாய்களை தூர்வார கோரியும், மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    பாதிக்கப்பட்ட பலர் மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், எனக் கூறி திருப்பத்தூர்-வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் நகர போலீஸ் நிலையம் எதிரில் மாநில செயற்குழு உறுப்பினர் சானவுல்லா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் நகராட்சியை கண்டித்தும், மாவட்ட கலெக்டரை காணவில்லை என்றும் கோஷம் எழுப்பினர். பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசார் நேரில் வந்து சமரசம் செய்தும் யாரும் கேட்கவில்லை.

    மாவட்ட கலெக்டர் உடனடியாக நேரில் வந்து அப்பகுதிைய ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரியும் தொடர்ந்து கோஷம் எழுப்பி அங்கிருந்து செல்ல மறுத்தனர்.

    உடனடியாக நகராட்சி ஆணையாளர் எகராஜ் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது, அவரிடம் பேச மறுத்து மாவட்ட கலெக்டர் அல்லது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வரவேண்டும் என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

    தகவல் அறிந்ததும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் நேரில் வந்து உடனடியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பகுதிகளையும், கால்வாய்களையும் தூர்வார உத்தரவிட்டதன் பேரில் சாலை மறியிலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சாலை மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    விருதுநகர் அருகே தொழிலாளி வீட்டு வாசலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    நெல்லை டவுன் ஜவகர்லால் தெருவைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 42). ஜே.சி.பி. டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணியில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்காக முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டுவில் கனக ராஜ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்.

    சம்பவத்தன்று முத்து கிருஷ்ணன் தனது வீட்டு வாசலில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது வீட்டின் கதவுகளும் திறந்திருந்தது. இதைப்பார்த்து வீட்டு உரிமையாளர் கனகராஜ் அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மதன் குமார் சூலக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முத்துகிருஷ்ணன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடல் அதிரடி தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. புதிய ஐபோன் 13 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து பழைய ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விலை பண்டிகை காலக்கட்டத்தின் போது அதிரடியாக குறைக்கப்பட்டன. 

    அதிக விலை காரணமாக ஐபோன் 13 மாடலை வாங்க பெரும்பாலானோர் ஆர்வம் செலுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில், புதிய ஐபோன் 13 வாங்க சரியான நேரம் வந்துள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் ரூ. 24 ஆயிரம் வரை குறைந்த விலையில் கிடைக்கிறது.

     ஐபோன் 13

    ஆப்பிள் விற்பனையாளரான ஐஸ்டோர் இந்தியா ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு அசத்தல் கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 6 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மாத தவணையில் ஐபோனை வாங்குவோருக்கும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பழைய ஐபோன்களை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும். அந்த வகையில் ஐபோன் 13 மாடலை கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை சேர்த்து ரூ. 55,900 விலையில் வாங்கிடலாம்.
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தண்டவாள ரெயில் பாதையில் ஆண் உடல் ஒன்று கிடைப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு சென்ற போலீசார் தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் பிணமாக கிடந்தவர் சாத்தூர் அருகே உள்ள சடையம்பட்டி சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் மாரீஸ்வரன் (வயது30) வேன் டிரைவர் என்பது தெரிய வந்தது.

    நேற்று முன்தினம் இவரது தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் மாரீஸ்வரன் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் திருமணம் முடிந்த வீட்டில் இறப்பு நிகழ்ச்சி நடந்தது அவர்களது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    சென்னை புறநகர் பகுதியான திருவேற்காட்டில் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியிலிருந்து 100 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் வீடுகள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்தும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நகராட்சி கமி‌ஷனர் வசந்தி தலைமையில் நகராட்சி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மேற்பார்வையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள நீரில் ஆயில் பால் போடப்பட்டது.

    இதன் மூலம் கொசு முட்டை, கொசு உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    சிவகாசியில் நடந்த வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியது. அங்கு வேலை பார்த்த 2 பெண்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
    சிவகாசி :

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீட்டை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு பிடித்திருந்தார். தரைக்கு கீழே ஒரு தளமும், தரைக்கு மேல் 2 மாடிகளும் என 3 அடுக்குகளை கொண்ட இந்த வீட்டில், பட்டாசு மூலப்பொருளான ரசாயனம் சேர்க்கும் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த வீட்டில் பட்டாசுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் வேல்முருகன் (வயது 37), மனோஜ்குமார் (27), கார்த்தீசுவரி (33), ஹமிதா (55) ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 3 அடுக்குகளும் அப்படியே நொறுங்கி, தரைமட்டத்துக்கு மேல் வெறும் இடிபாடுகளாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறிய வண்ணமாக இருந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர்.

    ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் நெருங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பணியில் இருந்த கார்த்தீசுவரி, ஹமிதா ஆகிய 2 பெண்களையும் காணவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மீட்பு பணியை துரிதப்படுத்த உதவினர். இந்த விபத்திற்கு பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததுதான் காரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மாயமான பெண்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. எனவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். எந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை முற்றிலுமாக அகற்றிய பின்னரே உயிரிழப்பு ஏதும் இருக்கிறதா? என தெரியவரும். இந்த வெடிவிபத்து சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.
    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.

    இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வந்ததாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டதாலும், பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், பொதுமக்கள் பயனடைய வசதியாக வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மேலும் 2 சிறப்பு முகாம்களை நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தளவாய்புரம்:

    சேத்தூர் அருகே 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணை உள்ளது. இந்த அணை சுமார் 36 கன அடி கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்த தொடர் மழையினால் இந்த அணை நிரம்பி வழிகிறது.

    இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டால் தேவதானம், சேத்தூர், சுந்தரராஜபுரம், சொக்கநாதன்புத்தூர், புத்தூர், இளந்திரை கொண்டான், முகவூர், கொல்லங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும்.

    இதனால் இப்பகுதி உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    தொடர்மழையின் காரணமாக தேவதானம் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு விரைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணையை பாசனத்திற்காக திறந்து வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய வேண்டும் என சூர்யாவுக்கு அரசியல் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் ‘ஜெய் பீம்’. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு பிரபலங்கள், இப்படத்தை பார்த்து பாராட்டினர். 

    சமீபத்தில் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சூர்யாவுக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு பதில் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “வணக்கம். தங்களின் வாழ்த்து கடிதம் கிடைக்கப்பெற்றேன். ‘ஜெய்பீம்’ திரைப்படம் குறித்த உளப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றிகள். ஏழை எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கம்யூனிஸ்ட் இயக்கமும், அந்த தத்துவத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களும் எப்போதும் துணை நிற்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். 

    இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான பங்களிப்பை இயன்றவரையில் திரைப்படத்தில் முதன்மைப் படுத்தியிருக்கிறோம். நீதிபதி கே.சந்துரு மற்றும் நேர்மையான காவல்துறை உயரதிகாரி பெருமாள்சாமி ஆகியோரின் பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறோம்.

    பாலகிருஷ்ணன், சூர்யா
    பாலகிருஷ்ணன், சூர்யா

    மேலும் மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 

    அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில், அவர்களின் பெயரில் 'பத்து இலட்சம்' ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும், அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்திற்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம்.

    மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்கு உதவுவது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு. 

    ஆகவேதான் 'ஜெய் பீம்' திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்தோம். மக்களின் மீதான தங்கள் இயக்கத்தின் அக்கறை மிகுந்த செயல்பாடுகளுக்கு மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய மக்கள் களப்பணி தொடர மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,352 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,745 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
    ×