என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் வந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாகனத்தை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 74 கிலோ புகையிலை பொருட்கள் வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.48 ஆயிரம் ஆகும்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பீட்டர் பால்ராஜ் (வயது 48), மரிய அருள்ராஜ் (37), ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (48), கணேஷ்குமார் (44) என தெரியவந்தது.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியில் வீடுகளில் வெடிபொருட்கள் அனுமதியின்றி வைத்திருப்பதாக போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வெம்பக் கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர்.
இதில் கார்த்திக் (29), கிருபைதாஸ் (24) ஆகியோரது வீடுகளில் இருந்து 50 கிலோ சரவெடிகள் மற்றும் ஆயிரம் வாலா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மாரிகாளை என்பவரது வீட்டில் இருந்து சரவெடி, 5 ஆயிரம் வாலா, உதிரி வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் மாரிகாளை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சல்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில் மாரியப்பன் (50), கனகலட்சுமி ஆகியோர் வீடுகளில் இருந்து அட்டை பெட்டிகளில் பதுக்கப் பட்டிருந்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாரியப்பன் கைது செய்யப் பட்டார். கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மெயின் ரோட்டில் பி.எஸ்.கே. பார்க் அருகே மரக்கடை உள்ளது. இங்கு தொழிலாளியாக வேலை பார்ப்பவர் மாரிமுத்து (வயது 37). அதே பகுதியை சேர்ந்த இவர் இரவில் மரக்கடை முன்பு உறங்குவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்ததும் மாரிமுத்து அங்கேயே படுத்துக் கொண்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த சாலையில் வேகமாக வந்த லாரி திடீரென நிலைதடுமாறி மரக்கடைக்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் புகுந்தது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தான் லாரியின் அடியில் மாரி முத்து நசுங்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதற்கிடையில் லாரி டிரைவர் காமராஜ் பலத்த காயங்களுடன் இருக்கையிலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பது தெரியவந்தது.
தீயணைப்பு படையினர் வெல்டிங் கட்டர் வரவழைத்து லாரியின் பாகங்களை வெட்டி எடுத்த பிறகே அவரை மீட்க முடிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜ் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த காமராஜ் தென்காசியில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் ராஜபாளையம் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரக்கடைக்குள் புகுந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பலியான மாரிமுத்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், வக்கீல் முத்துப்பாண்டி ஆகியோரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மன்னவன், கணேஷ்தாஸ் மற்றும் போலீசார் கடந்த 2 வாரங்களாக விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் மோசடி வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி இன்று ஆஜரானார்.
அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






