என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு அரசு விரைவு பஸ்  புறப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பஸ்நிலைய பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அந்த பஸ்சின் கண்டக்டரான தென்காசியை சேர்ந்த முத்தையாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    மயக்கம் அடைந்த அவரை உடனடியாக டிரைவர் சுரேந்திரன் பஸ்சை வேகமாக ஓட்டி வந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    மாற்று கண்டக்டர் வரும் வரை அந்த பஸ், ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் அவதிப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்


    ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் பிட்டராக பணியாற்றி வந்தார். 

    கார்த்திக் தினமும் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு கார்த்திக் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். எம்.பி.கே. புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது  திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. 

    இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை அங்கிருந்தவர்கள்  மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். 

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையத்தில் மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் விவேகானந்தர் தெருவை  சேர்ந்தவர் முருகேசன்(வயது 62). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சண்முகத்தாய். இவரும் மில்தொழிலாளி.

    இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில நாட்களாக முருகேசனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியுடன் காணப்பட்ட முருகேசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகேசன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகரில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ. 2 கோடி மோசடி செய்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியை சேர்ந்தவர்கள் மாணிக்க வாசகம் (வயது 55), ஜெய லட்சுமி.

    உறவினர்களான இவர்கள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் இருவருக்கும் திருச்சியை சேர்ந்த சாந்தி, சூர்யா, நாரணம்மாள், பாபு, அறிவுமணி, பால்ராஜ், சாகுல் அமீது, இளங்கோ ஆகிய 8 பேர் அறிமுகமானார்கள்.

    அவர்கள் திருச்சியில் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் எங்கள் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.30 லட்சமாக திருப்பித் தருவோம் என ஆசை வார்த்தை கூறினார்கள்.

    பலமுறை தொடர்ந்து அவர்கள் வற்புறுத்தியதால் நாங்கள் இருவரும் நகை, சொத்து பத்திரங்களை அடகு வைத்து பல்வேறு தவணைகளில் அந்த கும்பலிடம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 48 ஆயிரத்து கொடுத்தோம்.

    பணத்தைப் பெற்றுக் கொண்டு பல மாதங்களாகியும் அவர்கள் சொன்னபடி எங்களுக்கு லாபத்தில் எதுவும் தரவில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த கும்பலிடம் நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டோம். ஆனால் அவர்கள் தரவில்லை.

    அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதையடுத்து நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எங்களிடம் மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட எட்டு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே வாலிபர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரை  சேர்ந்தவர் மாரீஸ்வரன்(வயது 27). இவர் உடல் நலம் பாதித்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் முதலிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள தூத்திப்பாறையை சேர்ந்தவர் ஈஸ்வரி(25). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த இவர் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை ஈஸ்வரி திருமணம் செய்துகொண்டார்.

     முருகனுக்கு இது 3வது திருமணம் ஆகும். இந்தநிலையில் கணவன்&மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த ஈஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விருதுநகரில் வங்கி மேலாளர் வீட்டில் 11 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    விருதுநகர்

    விருதுநகர் முத்துராமலிங்கம் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 28). அதே பகுதியில் உள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் மாசாணி அம்மன்  கோவிலுக்கு சென்றிருந்தார். 

    அங்கு சாமி கும்பிட்டு விட்டு இரவு ராமகிருஷ்ணன் வீடு திரும்பினார். அப்போது வீட்டு செலவுக்காக பீரோவில் இருந்த பணத்தை எடுக்க முற்பட்டபோது அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணம் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    விருதுநகர் அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. சம்பவத்தன்று இரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து மேலாளர் பொன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் யாராவது கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன் என மிரட்டிய அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பங்கேற்றார்.

    அவர் கட்சியினர் மத்தியில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டு கட்சி மாறினால் அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என சண்முகக்கனி பேசி இருப்பது தான்.

    அந்த வீடியோவில், ‘உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் யாராவது கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன். அவர்கள் போஸ்ட்மார்ட்டம் ஜி.ஹெச்சில்தான் நடைபெறும். மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன்’ என சண்முகக்கனி பேசி இருக்கிறார்.

    இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர். இது குறித்து சாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சண்முகக்கனி மீது கொலை மிரட்டல் 506 (1), ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசுவது 505 (1பி), இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியது 153 (ஏ) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 45). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் கடந்த 2011-16-ம் ஆண்டு வரை ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். இவருக்கு கீழான்மலை மாநாடு பகுதியில் சொந்தமாக பேப்பர் மில் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா கருப்பு துணியால் கட்டப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டு சமையற்காரர் ரவி உடனே கோபால்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்திருந்த 2 பேர் கோபால்சாமி வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைவதும், வீட்டுக்குள் செல்ல முடியாததால் தங்கள் கொள்ளை திட்டத்தை கைவிட்டு திரும்புவதும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகாசி அருகே லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை ஆன்-லைன் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சாரதாநகரை சேர்ந்த வைரமுத்து (வயது41), நாரணாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (25), சர்க்கரை வாவா தெருவை சேர்ந்த மணிகண்டன் (31) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.7440-ஐ பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கார்த்திக் என்பவரை தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, மம்சாபுரம், வத்திராயிருப்பு, கொடிக்குளம், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி  ஒவ்வொரு பேரூராட்சிக்கும், நகராட்சிக்கும் தேர்தலை கண்காணிப்பதற்கு பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    அவர்கள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்களை யாரேனும் கொண்டு செல்கிறார்களா? என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் மற்றும் உணவுப்பொருட்கள்&இதர பொருட்கள் கொண்டு செல்பவர்களை நிறுத்தி சோதனை செய்கிறார்கள். 

    வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும், விற்பனை பிரதிநிதிகளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் உணவுப்பொருட்களையோ மற்ற பொருட்களையோ விற்பனை செய்தால் சோதனையில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 
    ராஜபாளையம் மற்றும் விருதுநகரில் பட்டதாரி பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியை  சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மாரீஸ்வரி(வயது 21). இவர் பி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்வதாக அவர் கூறியபோது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்வதாக கூறினர்.  

    இந்தநிலையில் மாரீஸ்வரி திடீரென மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய தகவல் கிடைக்காததால் விருதுநகர் கிழக்கு போலீசில் தாயார் வளர்மதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம் பெரியார் தெருவை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ராஜபாளையம் மங்காபுரத்தை சேர்ந்தவர் காளிராஜ்(27). இவரது மனைவி புவனாவுக்கு கடந்த 21ந் தேதி குழந்தை பிறந்தது. தாய் வீட்டில் இருந்த புவனாவுக்கும், காளிராஜூ-க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

    இந்தநிலையில் காளிராஜ் திடீரென மாயமாகி விட்டா£ர். இது தொடர்பாக அவரது தாயார் முத்தம்மாள் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் வட்டார கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நேற்று முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கொரோனா தொற்று காரணமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. தற்போது தொற்றின் வேகம் குறைந்ததையடுத்து அரசு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்க உத்தரவிட்டிருந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 145 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.

    கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மலர்கொடி கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின் பற்றப்படுகிறதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்கள் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். 

    முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை மேலாண்மைக்குழு தலைவி முத்துச்செல்வி, வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி, தலைமை ஆசிரியை மேரி ஆகியோர் வரவேற்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார், சுப்புலட்சுமி, இடைநிலை ஆசிரியை ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    ×