என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராஜபாளையத்தில் புகையிலை-வெடிபொருட்கள் பறிமுதல்
விருதுநகர்:
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் வந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் வாகனத்தை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 74 கிலோ புகையிலை பொருட்கள் வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.48 ஆயிரம் ஆகும்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பீட்டர் பால்ராஜ் (வயது 48), மரிய அருள்ராஜ் (37), ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (48), கணேஷ்குமார் (44) என தெரியவந்தது.
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியில் வீடுகளில் வெடிபொருட்கள் அனுமதியின்றி வைத்திருப்பதாக போலீசாருக்கு, கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வெம்பக் கோட்டை போலீசார் சம்பவ இடம் சென்று சோதனை நடத்தினர்.
இதில் கார்த்திக் (29), கிருபைதாஸ் (24) ஆகியோரது வீடுகளில் இருந்து 50 கிலோ சரவெடிகள் மற்றும் ஆயிரம் வாலா வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதே போல் மாரிகாளை என்பவரது வீட்டில் இருந்து சரவெடி, 5 ஆயிரம் வாலா, உதிரி வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் மாரிகாளை தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சல்வார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில் மாரியப்பன் (50), கனகலட்சுமி ஆகியோர் வீடுகளில் இருந்து அட்டை பெட்டிகளில் பதுக்கப் பட்டிருந்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாரியப்பன் கைது செய்யப் பட்டார். கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.






