என் மலர்tooltip icon

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் வாழ்வாங்கி கிராமம் உள்ளது. இங்கு கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். மேலும் நகைகளை அடகு வைத்தும் பொதுமக்கள் கடன் பெற்றுள்ளனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரத்தில் வங்கி உள்ள பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்றிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிய துளையிட்டுள்ளனர்.

    பின்னர் வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல் லாக்கரை உடைக்க முயற்சித்தது. ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கும்பல் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே சென்றது. லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. இன்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்த தகவலின்பேரில் பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் கடத்தி சென்ற கணவரை உயிருடன் மீட்டு தாருங்கள் என அதிமுக பெண் வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி 29வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக முதனூர் தெருவை சேர்ந்த ராதிகா (வயது36) என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது கணவர் ராஜேந்திரன் கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ராதிகாவின் கணவர் ராஜேந்திரன் முக்கிய பிரமுகரை சந்தித்து விட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது மைவி மற்றும் கட்சியினர் ராஜேந்திரனை பல இடங்களில் தேடினர். ஆனால் பலன் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து ராதிகா தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில், நான் 29-வது வார்டில் போட்டியிடுகிறேன். எனது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணராஜா எனது வேட்புமனுவை திரும்ப பெற சொல்லி மிரட்டி வந்தார். இந்த நிலையில் எனது கணவரை காணவில்லை. நான் எனது வேட்புமனுவை திரும்ப பெற மறுத்துவிட்டதால் என்னை பயமுறுத்துவதற்காக எனது கணவர் ராஜேந்திரனை தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணராஜாவும், அவரது கூட்டாளிகளும் கடத்தி சென்றுள்னர். எனவே எனது கணவரை உயிருடன் மீட்டு தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

    பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்ட சங்கிலி கருப்பசாமி மீது சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்தது. கடந்த 21-ந்தேதி வலி அதிகமானதால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி மாணவியிடம் விசாரித்தனர். முதலில் சரியாக பதில் கூறாத அவர் பின்னர் தனது நிலையை கூறினார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவி 10-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு செல்லும் வழியில் சங்கிலி கருப்பசாமி என்ற வாலிபர் பழக்கமாகி உள்ளார். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்வதாக சங்கிலி கருப்பசாமி ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார். இதில்தான் மாணவி கர்ப்பமாகி உள்ளார்.

    இதுகுறித்து சங்கிலி கருப்பசாமி மீது பாலியல் பலாத்கார புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதற்கிடையில் மாணவிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பிரசவத்திற்கான வலி என தெரியவந்தது. அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் 108 ஆம்புலன்சு மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    பாலையம்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் நாகலாபுரம் அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தை சேர்ந்தவர் மல்லிச்சாமி (வயது 35). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    பந்தல்குடி போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் தனது மனைவி மீனா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மல்லிச்சாமி மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் தகராறு நடந்ததாக தெரிகிறது.

    இதனால் மல்லிச்சாமி நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு போலீஸ்காரரின் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த வீட்டில் அவர் மட்டும் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த வீட்டில் போலீஸ்காரர் மல்லிச்சாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மல்லிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மல்லிச்சாமி எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி முதல்-அமைச்சர் ஆனவர் மு.க.ஸ்டாலின் என சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    விருதுநகர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார். அவர் இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    அவர் இன்று சிவகாசி, நெல்லை, தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தற்போது தான் மாநகராட்சியாகி முதல் தேர்தலை சந்திக்கிறது. சிவகாசியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விருதுநகருக்கு வந்தார்.

    அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு சிவகாசிக்கு சென்றார். பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.

    அதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிவகாசி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் அமைந்துள்ள தி.மு.க. ஆட்சி இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக செய்ததாக தெரியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தான் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாம் உருவாக்கிய திட்டங்களுக்கு தான் அவர் அடிக்கல் நாட்டுகிறார். வேறு எதையும் இதுவரை தி.மு.க. அரசு செய்யவில்லை.

    விருதுநகர் மாவட்டத்திற்கு தி.மு.க. அரசு என்ன திட்டங்களை செய்துள்ளது என்பதை யாராவது கூற முடியுமா? மு.க.ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது படத்துடன் பத்திரிகைகளில் செய்தியாக முதல் நாள் வருகிறது. மறுநாள் நடைபயணம் சென்றார் என செய்தி வருகிறது.

    அதன் பிறகு சைக்கிள் ஓட்டுகிறார். உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சி செய்கிறார். இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு உங்களை முதல்-அமைச்சர் ஆக்கினார்கள். இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்?.

    கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி முதல்-அமைச்சர் ஆனவர் மு.க.ஸ்டாலின். இப்படி செய்தவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்?. நிச்சயம் செய்ய மாட்டார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை தந்துள்ளோம். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியினர் கொள்ளை அடிப்பதில்தான் குறியாக உள்ளனர். இதற்கு உதாரணமாக பொங்கல் பரிசு தொகுப்பை கூறலாம். அதில் பெரும் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

    ஏழை-எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் அம்மா. அவரது வழியில் நான் முதல்-அமைச்சராக இருந்தபோதும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

    தரமான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கினோம். கொரோனா காலத்திலும் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 கொடுத்தோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார்.

    ரூ.5 ஆயிரம் கொடுத்தால் என்ன? என்றார். ஆனால் இன்றைய தினம் அவர் ஆட்சியில் இருக்கும்போது 100 ரூபாயாவது கொடுத்துள்ளாரா?. நீங்கள் (மு.க.ஸ்டாலின்) சொன்ன மாதிரி ரூ.5 ஆயிரம் கொடுத்திருந்தால் மக்கள் சந்தோசமாக பொங்கல் கொண்டாடி இருப்பார்கள். ஆனால் தற்போது துன்பப்பட்டே பொங்கல் கொண்டாடினர்.

    தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் 15 அல்லது 17 பொருட்கள் மட்டுமே வழங்கி உள்ளனர். அதுவும் தரமானதாக இல்லை. எடை சரியாக இல்லை.

    பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட பச்சரிசி உள்ளிட்ட பொருட்களில் தரம் இல்லை, கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருக்கிறது. பொங்கல் வைப்பதற்காக கொடுத்த வெல்லத்தை ஒரு பெண்மணி எடுத்து காட்டுறாங்க... அந்த வெல்லம் பயன்படுத்த முடியாத வகையில் ஒழுகி ஓடுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    இப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பு கொடுத்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

    மக்களுடைய வயிற்றில் அடித்த கட்சி தி.மு.க. கட்சி. இதற்கு தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்ட அந்த புளியே சாட்சி. புளியில் பல்லி இருக்குது என்று சொல்லி இதனை ஒருவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியை வைத்து அவர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்குப்பதிவு செய்தனர். அதனால் அவருடைய மகன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

    கொடுக்கப்பட்ட பொருள் தரமற்ற பொருள் என்று சுட்டிக்காட்ட ஜனநாயக நாட்டிலே ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவரது கருத்தை தெரிவித்தார்.

    அந்த கருத்தை தெரிவித்தன் காரணமாக அவர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்கு போட்டு ஒரு உயிரை பலி வாங்கிய அரசாங்கம்தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம். ஒரு சர்வாதிகார அரசாங்கமாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்திடுவேன் என மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். ஆனால் அதனை ரத்து செய்தாரா? குடும்ப தலைவிக்கு ரூ.1000, சிலிண்டர் மானியம் ரூ.100, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என வாக்குறுதிகளை தி.மு.க. வழங்கியது. ஆனால் அந்த வாக்குறுதிகள் இப்போது என்ன ஆனது. தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அவர்களிடம் தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. அதன் பின்னர் கட்சியை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். அந்த வழக்குகளை தைரியமாக சந்திப்போம். தி.மு.க. எத்தனை வழக்கு போட்டாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேண்டும் என்றே பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். வேலை வாங்கி தருவதாக பணத்தை யாரோ ஒருவர் கொடுத்ததாக கூறி ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கை பதிவு செய்கின்றனர். கட்சி நிர்வாகிகளை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணி செய்யாமல் இருக்க வழக்கு போடுகிறார்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மக்கள் பணிகளை தொடருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நாம் ஆட்சி காலத்தில் செய்ததை மக்களிடம் சொன்னாலேபோதும் அவர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.

    சென்னை குடியரசுதின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நாளை விருதுநகருக்கு வருகிறது.
    விருதுநகர்

    விடுதலை போரில்  தமி ழகம் என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் கடந்த மாதம் 26ந் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. 

    இந்த ஊர்திகளை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களுக்கும்  பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீரமங்கை வேலுநாச்சியார்  அலங்கார ஊர்தி நாளை(7ந்தேதி) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளது.

    இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தின் வேலூர் கோட்டையில் 1806ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர்புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை  மீட்ட வீரமங்கை வேலுநாச்சியா, வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுத  கிடங்கினை அழித்து தன்னுயிரை தியாகம் செய்த வீராங்கனை குயிலி, பரங்கியரின் ஆதிக்கத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்ததோடு, ஆங்கிலேயர் களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய் போரிட்டு தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலை போராட்ட மாவீரர் வீரபாண்டிய  கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம்.

    அன்னிய படைகளை தனியாக சென்று அழித்த நெற்கட்டும் செவலை பிறப்பிடமாக கொண்ட ஒண்டிவீரன்,  இந்திய விடுதலை வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு”  என்று முதன் முதலாக   வீரமுழக்கமிட்ட நெற்கட்டும்செவல் மாவீரன்  பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துகோன்.

    வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட  நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. அலங்கார ஊர்திகளை கொரோனா தடுப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும்.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.



    பட்டாசு தொழிலை பாதுகாக்க பிரதமர் தலையிட வேண்டும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    விருதுநகர்

    குட்டிஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. 

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு தொழில் சிவகாசியில் நலிவடைந்துள்ளது. 

    இங்கு தயாரிக்கும் பட்டாசுகளில் 35 சதவீதம் சரவெடிகள் தான். ஆனால் பொட்டாசியம் நைட்ரேட் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கக்கூடாது என விதி வகுக்கப்பட்டதால் தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

    இந்த நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில்,  வருவாய்த்துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களாக சிவகாசியில் 20 சதவீத பட்டாசு உற்பத்தியே நடக்கிறது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாதநிலை உள்ளது. எனவே இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 
    சிவகாசியில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி செய்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காத்த நாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவர் பாலாஜி நகரை சேர்ந்த ஜீவராஜிடம் 2011ம் ஆண்டு பிளாட் வாங்கினார்.

    இந்த நிலையில் அதே இடத்தை காளியப்பன் என்ற காணியப்பன், அவரது மகன்கள் வீரபெரு மாள், மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சோலையம்மாள் என்பவருக்கு 2016ம் ஆண்டு பவர் கொடுத்துள்ளனர். இதற்கிடையில் 2020ம் ஆண்டு காளியப்பன் இறந்து விட்டார்.

    இந்தநிலையில்  2021ம்  ஆண்டு சோலையம்மாள் மதுரையை சேர்ந்த குரு நாதனுக்கு இடத்தை விற் றுள்ளார். அப்போது காளியப்பன் உயிரோடு இருப்பதாக விருதுநகரை சேர்ந்த டாக்டர் கருணாகரன் என்பவரிடம் சான்றிதழ் வாங்கி சமர்ப்பித்துள்ளனர்.

    இதுகுறித்து தெரியவந் ததும் சிவகாசி கோர்ட்டில் ராஜாராம் வழக்கு தொடர்ந் தார். கோர்ட்டு உத்தர வின்பேரில் சிவகாசி டவுன்  போலீசார்  சோலையம் மாள், குருநாதன், வீரபெருமாள், மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகிய 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள காலனி வீடுகளில் சுமார் 10 குடும்பங்களுக்கு மேல்,  சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் இல்லாத நிலையில் வசித்து வந்தனர்.

     பலமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மனு செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக் டருக்கு  உத்தரவு பிறப்பித்து உடனடியாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டது. 

    மின் வாரிய அதிகாரிகள் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து துரிதமாக பணியாற்றி பாதைகளும் அமைத்து மின் கம்பங்களும் அமைத்து வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கினர். 

    இன்னும் நான்கு வீடுகளுக்கு மட்டும் சரியான பாதை இல்லாமலும் மின் கம்பங்கள் நடுவதற்கு இடமில்லாத நிலையில் விரைவில் ஆவன செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இருளில் வாழ்ந்து வந்த அந்த கிராமமக்கள்  மின்சாரம் வழங்க வழிவகுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதற்கு விரைவாக செயல்பட்ட தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
    20 பேர் மட்டும் தேர்தல் பிரசாரத்தில் வீடு வீடாக சென்று பங்கேற்கலாம், உள்ளரங்கு பொதுக்கூட்டத்தில் 50 சதவீதம் பேருக்கு மிகாமல் நடத்தலாம் என்று விருதுநகர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய கொரோனா பரவலை கருத்தில் கொண்டு  அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு அனுமதியும், தடையும் விதித்து வழி காட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால்  வெளியிடப்பட்டுள்ளது.
     
    சாலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பாதயாத்திரை, சைக்கிள், மோட்டார் சைக் கிள்கள் ஊர்வலம் ஆகியவை இந்த மாதம் 11ந்தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற் கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர் அறிவுரை வழங்கும்.

    அரசியல் கட்சிகளின் ஊர்வலம் குறிப்பிட்ட வேட்பாளர்கள் அல்லது  தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் இந்த மாதம் 11&ந்தேதி வரை அனுமதிக்கப்படமாட்டாது. பின்னர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற் கேற்றவாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கும். எனினும் பிரசாரத்தின்போது மேற்கொள்ளப்படும் பேரணிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் முன் அனுமதி பெற்று கொரோனா தடுப்பு விதி முறைகளை பின்பற்றி மேற்கொள்ளலாம்.

    மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரால்  தேர்ந்தெடுக்கப்படும் திறந்தவெளி மைதானங் களில்  அதிகபட்சம் ஆயிரம் பேர் பங்கேற்பாளர்கள் அல்லது மைதானத்தின் கொள்ளளவிற்கு 50 சதவீதத் திற்கு மிகாமல், இதில் எது குறைவோ அதற்கு அனுமதி பெற்று திறந்தவெளி பொதுக்கூட்டம் நடத்தலாம்.

    சுகாதாரத்துறை  துணை இயக்குநரிடம் சான்று பெற்று அதிகபட்சம் 500 பேர்  பங்கேற்பாளர்கள் அரங்கின் கொள்ளளவிற்கேற்ப 50 சதவீதத்துக்கு மிகாமல் உள் ளரங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். பாதுகாப்பு பணியா ளர்களை தவிர்த்து 20 பங்கேற்பாளர்களுக்கு மிகாமல் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளலாம். மேலும் கடந்த டிசம்பர் 10ந்தேதி  மற்றும் ஜனவரி 25ந்தேதி வெளியிடப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாடகைக்கு எடுத்த கார்களை அடகு வைத்து மோசடி செய்த தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    சிவகாசி மாரனேரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவருக்கு சொந்தமான காரை செந்தில்குமார் என்பவர் வாடகைக்கு எடுத்துச் சென்றார். ஆனால் 1 மாதமாகியும் காரை அவர் திருப்பி கொடுக்கவில்லை.
     
    மேலும் கார்த்திக்கின் நண்பர் அய்யனார், கருப்பசாமி ஆகியோரது கார்களையும் செந்தில்குமார் வாடகைக்கு எடுத்துள்ளார். 

    அந்த கார்களையும் திருப்பித்தராததால் கார்த்திக் உள்பட 3 பேரிடமும் விசாரித்தபோது விருதுநகர் தீயணைப்பு துறை வீரர் திருப்பதியிடம் கார்கள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி கேட்டபோது செந்தில்குமார் அந்த கார்களை அடகு வைத்து பணம் பெற்றிருப்பதாக கூறினார். மேலும் கார்களை தரும்படி கேட்டபோது செந்தில்குமார், திருப்பதி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக சிவகாசி கிழக்கு போலீசில் கார்த்திக் புகார் செய்தார். 

    புகாரின் பேரில் செந்தில்குமார், திருப்பதி, அவரது தம்பி டேக்கா பாண்டி, தீயணைப்பு வீரர் திருப்பதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கட்சி மாறினால் வெட்டுவேன் என மிரட்டிய சாத்தூர் அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பங்கேற்றார்.

    அந்த கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் அவர் பேசும்போது, ‘உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் யாராவது கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன்’ என்று கூறி இருக்கிறார்.

    அவர் பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சாத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகி சண்முகக்கனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர் மீது கொலை மிரட்டல் 506(1), ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசுவது 505 (1பி), இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியது 153 (ஏ) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள சண்முகக்கனியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சண்முகக்கனி வீட்டின் மாடிக்கு வேகமாக சென்றுள்ளார்.

    அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கால் முறிந்தது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அங்கிருந்து மீட்டு கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ×