என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வங்கியின் சுவற்றில் துளையிடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
    X
    வங்கியின் சுவற்றில் துளையிடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

    அருப்புக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - ரூ.4 கோடி நகை-பணம் தப்பியது

    அருப்புக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி நான்கு வழிச்சாலையில் வாழ்வாங்கி கிராமம் உள்ளது. இங்கு கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். மேலும் நகைகளை அடகு வைத்தும் பொதுமக்கள் கடன் பெற்றுள்ளனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரத்தில் வங்கி உள்ள பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்றிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் வங்கியின் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிய துளையிட்டுள்ளனர்.

    பின்னர் வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல் லாக்கரை உடைக்க முயற்சித்தது. ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த கும்பல் கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே சென்றது. லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நகை, பணம் தப்பியது. இன்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் வங்கி சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்த தகவலின்பேரில் பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×