என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட  கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது ஒரு உறுப்பினர் ஆண்டுக்கு   ரூ.330 பிரீமியம் செலுத்தி ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில்   இணைந்து கொள்ளலாம். மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத்தக்கது.   

    காப்பீட்டுக் காலம் ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை  ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கவரேஜ் தானாகவே   புதுப்பிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டு கவரேஜ்   காலத்தின் மே 31 அல்லது அதற்கு முன் அவரவர் வழங்கிய விருப்பத்தின்படி   சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு தவணையில் தானாகப் பற்று  வைக்கப்படும். பிரீமியம் ஆண்டுக்கு ரூ.330 ஆகும். 

    இத்திட்டத்தில் 18 வயது  முதல் 50 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். எந்தவொரு   காரணத்திற்காகவும் காப்பீடு செய்தவர் மரணம் அடைந்தால் இந்தத்   திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வாரிசுதாரர்களுக்கு  வழங்கப்படும். 

    பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது விபத்துக் காப்பீட்டுத்  திட்டமாகும், இது விபத்து மரணம் மற்றும் இயலாமைக்கான காப்பீட்டுத்  திட்டமாகும். காப்பீட்டு காலம் ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை ஒரு  வருடத்திற்கு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு தானாகவே  புதுப்பிக்கப்படும். ஆண்டுக்கு ரூ.12 பிரீமியம் தொகை ஆகும்.  

    இத்திட்டத்தில் வயது - 18 முதல் 70 வயது வரை சேர்ந்து பயன்பெறலாம்.   இத்திட்டத்தின் கீழ் விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம். ஊனமுற்றோருக்கு ரூ.1  லட்சம் வாரிசுதாரர்களுக்கு  வழங்கப்படும். இந்த இரண்டு திட்டத்திற்கான புதுப்பிப்பு காலம் மே மற்றும் ஜூன்   மாதங்களில் தானாக வங்கிகளின் மூலம் புதுப்பிக்கப்படும். எனவே  

    இத்திட்டத்தில் உள்ள பயனாளிகள் இந்த இரண்டு மாதங்களிலும்  தங்கள் வங்கி   கணக்கில் போதுமான இருப்பு தொகையினை வைத்து தொடர்ந்து, இத்திட்டத்தினை   பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும்   இத்திட்டத்தில் இணையாத பொதுமக்கள் உடனடியாக இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்இ வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக மணிகண்டராஜா தேர்வு செய்யப்பட்டார்.
    ராஜபாளையம்

    தி.மு.க. 15-வது கட்சி உட்தேர்தலில் ராஜபாளையம் வடக்கு நகர செயலாளராக எஸ்.ஏ. மணிகண்டராஜா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சரும், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் தேர்தல் ஆணையாளர் சீனிவாசன் முன்னிலையில்  சான்றிதழ் வழங்கப்பட்டது.  அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர். சுப்புராஜ், ராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் நகர அவைத்த லைவராக பிச்சைக்கனி, துணைசெயலாளர்களாக (பொது) முகமது இக்‌ஷாஸ் இப்ராகிம், காளிராஜன், மகளிரணி துணை செயலாளராக (ஆதி)பொன்னுத்தாய், பொருளாளராக செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக இமாம்ஷா,பொன்னுச்சாமி, அர்ச்சனா ஆகியோரும்  வைரமுத்து,முத்துமணி, நாகூர்அலி,மதியழகன், முனியாண்டி, ராணிபாலாதேவி,ஜோசப், ராஜன், பார்த்திபன், பிரகாஷ், பழனிசாமி, கார்த்திக் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்க ளாகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

    விருதுநகர் ஜெயிலில் கைதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் அதே வழக்கில் சிலம்பரசனின் கூட்டாளிகளான இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் சிலம்பரசன் வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்று வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது கூட்டாளிகள் 3 பேரும் தங்களுக்கும் ஜாமீன் பெற்று தருமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சிலம்பரசன் மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேரும் ஜெயிலுக்குள் சிலம்பரசனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை சிறை காவலர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஜெயில் சூப்பிரண்டு தாமரைக்கனி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் இருளாண்டி, வசந்த பாண்டி, இருள் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மாயமாகினர்.
    விருதுநகர்

    தெலுங்கானா மாநில த்தை சேர்ந்தவர் சாயா ரெட்டி. இவரது மகன் பரணிதர ரெட்டி இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரது கடந்த சில வாரங்களாக செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. 

    இதனால் பதட்டமடைந்த சாயா ரெட்டி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கல்லூரி விடுதிக்கு நேரில் வந்து விசாரித்தபோது பரணிதர ரெட்டி கடந்த 3-ம் தேதி விடுதியை காலி செய்து விட்டு சென்றதாக தெரி வித்தனர்.

    இந்நிலையில் சாயா ரெட்டி செல்போனுக்கு மகன் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும், தேட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் மகன் மாயம் குறித்து சாயா ரெட்டி கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (25). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த 7 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்துடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அவரது தந்தை முத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று காதல னுடன் மதுரைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அந்தப்பெண் சென்றார். ஆனால் அவர் காதலனுடன் செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள மேல சின்னையா புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி‌. இவரது மகள் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து வச்சகாரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதால் அரசு பஸ்களை நிறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில ஈடுபட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள பேய்க்குளம் சென்று விட்டு விருதுநகர் நோக்கி ஒரு டவுன் பஸ் இன்று காலை 7.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சில் இடம் இல்லாமல் படிக்கட்டு வரை நின்று கொண்டிருந்தனர்.

    சில கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர். இந்த பஸ்சை ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கண்டக்டர் முத்துராஜா படிக்கட்டில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்து மாணவர்களை உள்ளே வரும்படி கண்டிப்புடன் கூறி உள்ளார்.

    ஆனால் பஸ்சில் இடம் இல்லாமல் எப்படி உள்ளே வர முடியும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே அந்த பஸ் 8.30 மணி அளவில் , விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் சிலர் தகராறு செய்தனர்.

    இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர், டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட மற்றொரு அரசு பஸ் டிரைவரான பெரிய கருப்பன் என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

    அப்போது கல்லூரி மாணவர்கள் அவரையும் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து 2 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் மாணவர்களை திருப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. காலை நேரம் என்பதால் பஸ் நிலையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

    அவர்களின் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர் மோதிக்கொண்டால் விருதுநகர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டரை கல்லூரி மாணவர்கள் தாக்கிய தகவல் மற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து விருதுநகர் பஸ் நிலையம் மற்றும் நகரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை மாணவர்கள் தாக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதன் காரணமாக விருதுநகரில் சுமார் ஒரு மணி நேரம் அரசு பஸ்கள் இயக்ககப்படவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ சுலோசனா, தென்றல், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இருந்தபோதிலும் அவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்களில் செல்ல முடியாமல் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விருதுநகர் பஸ் நிலையத்தில் வெகுநேரம் காத்து நின்றனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். அதன் பின்னரே பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    மேலும் தாக்குதலில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் 4 மாணவர்களும் உன்னிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களில் 2 மாணவர்கள் விருதுநகரில் உள்ள கல்லூரியிலும், 2 மாணவர்கள் சிவகாசியில் உள்ள கல்லூரியிலும் படித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.

    மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி அரசு பஸ் டிரைவர்கள் ஜெயராமன், பெரியகருப்பன், கண்டக்டர் முத்துராஜா ஆகிய 3 பேரும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் கூறும்போது, எங்களை அவதூறாக பேசியதால் தாக்கினோம் என்று தெரிவித்துள்ளனர். இதன்பின்னர் டி.எஸ்.பி. அர்ச்சனா விருதுநகர் பஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

    வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாம்....சித்திரை மாத வளர்பிறை பிரதோஷமும்... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகளும்...
    எல்லை மறுசீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவுத்துறையில் விருதுநகர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட சார்   பதிவகங்கள் வருவாய் வட்டங்களின் அடிப்படை எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக  பொதுமக்களிடையே கருத்துக்கேட்புக் கூட்டம் கலெக்டர் மேகநா தரெட்டி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சார்பதிவகங்கள் எல்லை மறு சீரமைப்பு தொடர்பாக   விவாதிக்கப்பட்டது.  ேற்படி விவாதத்தில், மல்லாங்கிணறு பேரூராட்சியில்  புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட வேண்டும என பொதுமக்களால்  கோரிக்கை மனு அளிக்க ப்பட்டது. 

    மேலும் குன்னூர் சார்பதிவகம்,  வத்திரா யிருப்பு தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுடன் செயல்பட வேண்டுமென   பொது மக்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவகத்தில் உள்ள கொங்கலாபுரம் கிராமம், சிவகாசி சார்பதிவகத்துடன் இணைப்பது குறித்து பொதுமக்களால் கருத்து   தெரிவிக்கப்பட்டது. 

    இந்த கிராமம் சிவகாசி சார்பதிவகத்துடன் இணைக்கப்படுவது  குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்ப டுவதாக  கலெக்டர் தெரிவித்தார். 

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன்,  துணைப்பதிவுத்துறை தலைவர்ஜெகதீசன் (மதுரை),  மாவட்ட பதிவாளர்  (நிர்வாகம்)  சசிகலா (விருதுநகர்), விருதுநகர் பதிவு  மாவட்ட அனைத்து  சார்பதிவாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.


    மதுரை மாவட்டத்தில் தென்னங்கன்று நர்சரி பண்ணை அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மேலூர்

    மேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இளமுருகன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. 

    மதுரை மாவட்டத்தில் தென்னங்கன்று நர்சரி பண்ணைகள் அரசு அமைக்க வில்லை. இதனால் மதுரை மாவட்ட விவசாயிகள் வெளி மாவட்டங்களில் உள்ள தமிழக அரசின் தென்னங்கன்று நர்சரி பண்ணைகளுக்கு செல்கின்றனர். 

    அந்தந்த மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களின் பட்டா, சிட்டா, அடங்கல் ஆவணங்களுக்கு மட்டுமே தென்னங்கன்றுகளை வழங்குவதாக கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். 

    இதனால் தனியாரிடம் தென்னங்கன்றுகளை வாங்கி அவை சரிவர வளர்ச்சி அடையாமல் மதுரை மாவட்ட விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.
     
    பல்வேறு மாவட்ட ங்களில் தென்னை நர்சரி பண்ணைகள் அமைத்து ள்ளது போன்று மதுரை மாவட்டத்திலும் தமிழ்க அரசு அமைக்க வேண்டும்.

     கரும்பு ஆலைகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதி மற்றும் மில்லில் ஏற்படும் குறைகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    நெல் கொள்முதல் மையங்களில் இன்னும் பல விவசாயிகளுக்கு நிதி வரவு வைக்கப்படாமல் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு உள்ளது. இதனை விசாரணை கமிஷன் அமைத்து உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

    மேலூர் தாலுகாவில் பல்வேறு கண்மாய் மற்றும் நீர்வழிப்பாதைகள் தனியார்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும், ஆறுகளில் மணல் திருடுவதை தடுக்க வேண்டும் விவசாய பாசன கிணற்று மின்மோட்டார்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் பாதிப்படைவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
    விருதுநகரில் தொழிலாளி-இளம்பெண் மர்மமான முறையில் இறந்தனர்.
    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள அல்லம் பட்டியைச் சேர்ந்தவர் வேடராஜன் (வயது 31). இவர் வில்லிபத்திரியில் உள்ள எண்ணெய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையில் இருந்தபோது வேடராஜன் திடீரென மயங்கி விழுந்தார். 

    உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  வேடராஜன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாரதி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் செல்வி (30). இவருக்கு சம்பவத்தன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    அப்போது மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.

     இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்திராயிருப்பு பகுதியில் எந்திரத்தின் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரமாகமாக நடைபெற்று வருகின்றன.
    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

    தற்போது கோடைகால சாகுபடி செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் நன்கு விளைந்து  அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைகால நெல் அறுவடையை விவசா யிகள்  மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். 

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. 

    சமீபத்தில் பெய்த தொடர்  மழையின் காரணமாக நீர் நிலைகளிலும், அணை பகுதிகளிலும், கண்மாய்களில்  போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் தொடர்ச்சியாக இந்தாண்டு கோடை கால விவசாய பணிகள் தடையின்றி நடைபெற்றது.  தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனர்.
    அ.தி.மு.க. நிர்வாகி மீது பாலியல் தொல்லை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மனைவி கவிதா (வயது 28).

    இவர் மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மம்சாபுரம் அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அய்யனார் கடந்த சில மாதங்களாக என்னை பின் தொடர்ந்து வந்து பாலியல் தொந்தரவு செய்து வருகிறார். தனது பேச்சை கேட்டு நடக்குமாறு மிரட்டுகிறார். ஆனால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததோடு மறுத்துவிட்டேன்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அய்யனாரின் மனைவி ஜோதியும், தனது கணவர் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுமாறும் இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறு பரப்பி விடுவேன் என மிரட்டினார். எனவே மேற்கண்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளர் அய்யனார், அவரது மனைவி ஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க. நிர்வாகி மீது பாலியல் தொல்லை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகரில் மாணவிகள், இளம்பெண்கள் மாயம் குறித்து போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் மாயமாவது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு நாளில் பெண்கள் மாயம் குறித்து குறைந்தது 10 வழக்குகளாவது பதிவாகி வருகின்றன. நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 3 பெண்கள் மாயம் குறித்து புகார்கள் வந்துள்ளன. அதன்விபரம் வருமாறு:-

    சிவகாசி புதுத்தெருவைச்சேர்ந்த  மாணவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்த மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை.

    இதேபோல் சாத்தூர் இருக்கன்குடி சேர்ந்த மாணவி விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவரும் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த 2 சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    சிவகாசி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அந்த பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்த பெண்ணும் மாயமானார்‌. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கி ன்போது செல்போன் மூலமாக மாணவ, மாணவி களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. இதன் காரணமாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செ ல்போன் அத்தியாவசியமாக தேவைப்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்தனர். 

    ஆனால் அந்த செல்போன் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி அதன் மூலம் முகம் தெரியாத நபர்களுடன் பழகி காதல் வலையில் சிக்கி இளம் பெண்களும், கல்லூரி மாணவிகள் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

    விருதுநகரில் தொடர்ந்து பள்ளி கல்லூரி  மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மாயமானது தொடர்பாக போலீசார் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×