என் மலர்
விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது.
- இந்த விபத்தில் பெண் காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் புளியமரத்தில் மோதியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
திருச்சியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விருதுநகரைச் சேர்ந்த டிரைவர் முனியசாமி ஓட்டி வந்தார். இதில் 43 பேர் பயணம் செய்தனர்.
மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி அருகே வரும் போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இந்த விபத்தில் பெண் காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டனர். விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
- தேரையும் தேர் வரும் பாதையையும் ஒருமுறை மட்டுமல்லாமல் 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர், என்னிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் மேகநாதரெட்டி, ஆகியோர்கள் முன்னிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வுசெய்தார்.
கோவில் திருமுக்குளம் சீரமைப்பு பணிகள், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கையகபடுத்துதல் மற்றும் கோவில் நிர்வாக பணிகள் தொடர்பாக சடகோபராமானுஜ ஜீயர் மற்றும் கோவில் நிர்வாகிகள், பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மாதே அள்ளியில் நடைபெற்ற கோவில் தேரோட்டத்தின்போது எதிர்பாராமல் விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்து என்பது உண்மையிலே மிகப் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெறும் இந்த விபத்துக்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தேரையும் தேர் வரும் பாதையையும் ஒருமுறை மட்டுமல்லாமல் 2, 3 முறை ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். இனிமேல் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் இருக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுவோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஒரு சில மடாதிபதிகளை தவிர்த்து அனைத்து மடாதிபதிகளையும் குறை சொல்ல முடியாது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர், என்னிடம் பல கோரிக்கைகளை வைத்துள்ளார். அதற்கு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற சுமுகமான சூழ்நிலைகளை கடைபிடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஜீயர்கள், மடாதிபதிகள் ஆகியோருக்கு கோவில்களில் உரிய மரியாதை கிடைக்கிறது. வரும் காலங்களிலும் அதனை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தை பொறுத்தவரை அதனை சீரமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.98 லட்சம் டெண்டரும் விடப்பட்டுள்ளது. அதனை கோவில் நிதியிலிருந்து செய்வதா? அறநிலையத்துறை ஆணையாளர் நிதியிலிருந்து செய்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. ஜீயர் விரும்புகிறபடி அதனை சீரமைத்து, புனரமைத்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லூரி தாளாளர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தாளாளராக டாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48)என்பவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவி, சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. மேலும் கல்லூரி விடுதி செயல்படாததால் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி மூடப்பட்டதால் தங்கள் படிப்பு பாதிக்கப்படக்கூடாது. கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேறு கல்லூரிகளில் இடம் இருந்தால் எங்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய கலெக்டர் மேகநாத ரெட்டி, விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு வருவாய் துறை மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்போது பள்ளி தாளாளர் ,வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
- மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு சில மாதங்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.
கடந்த மே மாதம் 14-ந் தேதி தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுைற முடிந்து இன்று (13-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மேலும் மாணவ-மாணவிகள் அமரும் பெஞ்சுகள் மற்றும் டெஸ்க் பழுது பார்க்கும் பணியும் நடைபெற்றது.
இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.
இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகள் புத்தகபையை சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாணவர்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு பள்ளிகளில் வாழை மற்றும் பலூன் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
நுழைவாயிலில் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் நுழைந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ஆசிரியைகள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர். மாணவ-மாணவிகளும் மகிழ்ச்சியுடன் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 996 அரசு பள்ளிகள், 493 அரசு உதவி ெபறும் பள்ளிகள், 253 தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 1,742பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக வந்தனர்.
மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வழங்கப்பட்டது. பல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளை வரவேற்க தோரணங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் “நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்” உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சி நடந்தது.
- குழந்தையை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் "நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்" உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான சாதனை முயற்சி நடந்தது. இதில் கலெக்டர் மேகநாதரெட்டி-தீபிகா தம்பதியரின் 3 வயது மகள் மீரா அரவிந்தா 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து உலக சாதனை படைத்தார்.
இந்த குழந்தையை சாதனையாளராக உருவாக்கிய குரு செல்வராணி குமார் கவுரவிக்கப்பட்டார். இந்த சாதனை புரிந்ததற்காக மற்றும் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தற்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மீரா அரவிந்தாவுக்கு "நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" தென் இந்தியா இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர்கள் வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் மேகநாதரெட்டி, "நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ்" தென் இந்தியா இயக்குநர் திலீபன், மாநில இயக்குனர் ஜெயக்குமார், நடுவர்கள் பசுபதி, நவீன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கருப்பு-சிவப்பு இருந்தால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
- நாம் சுயமரியாதையோடு இருக்கிறோம் என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம் என்றார்.
அருப்புக்கோட்டை
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசும்போது, சாதிப்பாகுபாடு இல்லாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என அனைவரையும் சமமாக வாழ வழிகாட்டியவர் தான் தந்தை பெரியார். கருப்பு, சிவப்பு இருந்தால்தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். நாம் சுயமரியாதையோடு இருக்கிறோம் என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம் என்றார்.
கூட்டத்தில் பொரு ளாதார நிபுணரும், மாநில திட்டக்குழு துணைத்தலைவருமான ஜெயரஞ்சன், திராவிட இயக்க செயற்பாட்டாளரும், திரைப்பட எழுத்தாளருமான டான் அசோக் , திராவிட இயக்க வரலாற்றையும் அரசின் சாதனைகளையும் எடுத்துக்கூறி சிறப்புரை யாற்றினர்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கவி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை அமைப்பாளர் பாலச்சந்தர், சூரியநாராயணன், ரவி கண்ணன், ஆனந்த், நகர இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமானுஜம், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கமணி ஆகியோர் நன்றி கூறினர். கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரணமாக உயிர் பிழைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர் ஈரக்கஞ்சையன், கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (வயது 30) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மது பழக்கத்தை நிறுத்துமாறு முத்துமாரி பலமுறை கணவரிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.
2 மாதத்துக்கு முன்பு இந்தப் பிரச்சினையில் கணவரை மிரட்டுவதற்காக முத்துமாரி பிளீச்சிங் பவுடரை கலந்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி தீவிர சிகிச்சை பலன் காரண மாக உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் மனைவி தற்கொலைக்கு முயன்றும் ஈரக்கஞ்சையன் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மது குடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 9-ந் தேதி கணவன்- மனைவி இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த தின்னரை எடுத்து முத்துமாரி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள ஆத்திக்குளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் ராஜமுருகன் (38). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த ராஜமுருகன் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி
திருத்தங்கல் அண்ணா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற சப்பானி (வயது 18). இவர் சம்பவத்தன்று குறிச்சி குளம் கண்மாய் பகுதியில் நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன், சுரேஷ் லிங்கம், பிரவீன்குமார், பாலாஜி, கார்த்திக் ஆகிய 5 பேர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை அரிவாளால் வெட்டினர்.
இதனை தடுக்க வந்த நண்பர்களையும் அந்த கும்பல் தாக்கியது. இதுதொடர்பாக திருத்தங்கல் போலீசில் புகார் செய்யபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை அரிவாளால் வெட்டிய நாகராஜன், சுரேஷ் லிங்கம், பிரவீன்குமார், பாலாஜி ஆகிய 4 பேரை கைது செய்தனர் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள அச்சங் குளத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் (24). விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் ஒட்டப்பட்டிருந்த புதிய பாரதம் கட்சியின் போஸ்டரை கிழித்து தாக கூறப்படுகிறது. இதனை அக்கட்சியை சேர்ந்த பவர் சிங், ஸ்டாலின், பீட்டர் பாண்டியன் ஆகியோர் கண்டித்துள்ளனர் அப்போது மூணு பேரு தன்னை தாக்கியதாக மதன்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரியாபட்டி அரசு ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளையடித்து சென்றனர்.
- நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 42). இவர் அருகில் உள்ள சாலை மறைகுளம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டைப் பூட்டி விட்டு பாண்டியராஜன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான வத்திராயிருப்புருக்கு சென்று விட்டார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 9 பவுன் 4 கிராம் நகையை திருடி கொண்டு தப்பினர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பாண்டியராஜன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருடு போயிருந்தது. இது குறித்து அவர் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
- குழந்தைவேலன் காவடியுடன் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குழந்தை வேலன் காவடி எடுத்து சிறுவர்-சிறுமியர்கள் வழிபாடு செய்தனர்.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நகரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நடைபயணமாக சென்று வழிபாடு நடத்தினர்.
முன்னதாக சிவகாசி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால் குடத்துடன், காவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் நடைபயணம் சென்ற பக்தர்கள் முருகன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், நாராயணசாமி கோவில், திருத்தங்கல் முருகன்கோவில் வரை சென்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தினர்.
நிகழ்ச்சியினை வழிநடத்திய ஆறுமுக சுவாமிக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
- தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொ.மு.ச நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிவகாசி
தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் மு.சண்முகம் எம்.பி. மற்றும் பேரவையின் பொருளாளர் நடராஜன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின் தொ.மு.ச. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட போக்குவரத்து துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.
பொதுவாகவே விடுப்பு எடுக்காமல் நீண்டகாலம் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களின் மீது இதுவரை கடுமையான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய அமைச்சர் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து வேலைக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அதுபோலவே போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு விரயம் செய்துவிட்டனர். தொழிலாளர்களின் பாதுகாவலனாக எப்போதுமே திகழ்கின்ற தி.மு.க. அரசு தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் விரைவாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்கள் தி.மு.க.வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக தொ.மு.ச. நிர்வாகிகளுடன் இணைந்து அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைதெற்கு தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48) சில மாதத்துக்கு முன்பு அதே கல்லூரியை சேர்ந்த மாணவியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்களிடையே பரவியது. இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் நேற்று கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி வாசலில் அமர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்ட கல்லூரி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.






