என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • குழந்தை இல்லாததால் கணவர்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (50). இவரது கணவர் பாலசுப்பிரமணியன். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகளான செல்லகனிக்கு சாத்தூர் சுப்பிரெட்டியபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சென்னையில் மளிகை கடை நடத்தி வந்தனர்.

    குழந்தை இல்லாததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முனீஸ்வரன், வத்திராயிருப்பில் உள்ள மாமனார் வீட்டில் செல்லக்கனியை விட்டுச் சென்றார்.

    இந்த நிலையில் சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முனீஸ்வரன் மனுதாக்கல் செய்தார். இதை அறிந்த செல்லக்கனி நேற்று காலை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லக்கனி இறந்தார். இதுகுறித்து செல்லகனியின் தாய் அமுதா கொடுத்த பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றச்சாட்டினார்.
    • விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்‌.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே சின்னப்ப ரெட்டியப்பட்டியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை மாணிக்கம் தாகூர் எம்.பி. திறந்து வைத்தார்‌ அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை நாடா ளுமன்றத்தேர்தலை முன்னிறுத்தி மேற்கொ ள்ளப்படவில்லை. நாடு முழுவதும் மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தியே பாதயாத்திரை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை போல் அனைத்து பதவிகளும் நியமன பதவிகளாக இருக்கக் கூடாது என்பதே காங்கிரசின் அடிப்படை நோக்கமாகும்.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உண்மையில் இந்த திட்டத்திற்கு ஜப்பான் பிரதமர் தான் அடிக்கல் நாட்டிருக்க வேண்டும்.

    இமாச்சல பிரதேசத்தில் 2015-ம் ஆண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி திட்டம் அறிவிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த பணிகள் முடிந்து அதனை தற்போது அவர் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டப்பட்டு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஜப்பான் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்ட போது நிதி மதிப்பீடு மாறும் போது அதை அனுமதிக்க காலதாமதம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, நலவாய் பாண்டியன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுருநாதன் ஆகிய உடன் இருந்தனர்.

    • சிவகாசியில் ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • துரை வைகோ இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசியில் நடைபெற்ற ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்ட மன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமை தாங்கினார். சிவகாசி நகரச் செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ராஜேஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிவகாசி மற்றும் திருத்தங்கல்லை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இயக்கத்தில் வெளிவந்துள்ள வைகோ ஆவண திரைப்படம் வருகிற 10-ந் தேதி சிவகாசி கணேஷ் தியேட்டரில் திரையிட உள்ள நிலையில் நிர்வாகிகளும் பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் முடிவு செய்யப்பட்டது.

    • விருதுநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
    • இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்றக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசியதாவது:-

    1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்களை பாதுகாப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பொதுப்பணி துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைக்க வேண்டும்.

    பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் TNSMART - மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

    மழை, வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இடி, மின்னல் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை "DAMIN" மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    மின்தடை, சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் வயர்கள் தொடர்பான புகார்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • மாணவர்கள் சமூக பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும் என விழாவில் துணை வேந்தர் அறிவுறுத்தினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஆ.பா.செல்வராசன் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெ.குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று கூறும் வகையில், இந்தியா அனைத்து வளங்களையும் பெற்ற நாடு.நாம் அனைவரும் இந்தியர் என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

    கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் தடுப்பூசிகளை தயாரித்து நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாட்டு மக்களுக்கும் வழங்கி உதவிய நாடு இந்தியா ஆகும். தமிழ்நாட்டில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கான இலக்கினை நிர்ணயம் செய்து பயணிக்க வேண்டும். பிறருக்கு உதவி புரியும் அளவிற்கு தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்றலை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்களின் சமூக பொறுப்பு உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    உங்களை நீங்கள் நம்பும் போது தான் உலகம் உங்களை நம்பும். எந்த செயலையும் நம்பிக்கையோடும், துணிச்சலோடும், நேர்மை யோடும் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் இளங்கலை மாணவர்கள் 957 பேரும், முதுகலை மாணவர்கள் 164 பேரும் என மொத்தம் 1,121 பேர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • கொலையான காளீஸ்வரிக்கும், அவரது கணவர் பாப்பையனுக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் காளீஸ்வரியை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்லங் கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பையன். இவரது மனைவி காளீஸ்வரி (வயது40). இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய் கரையடி அருகே உள்ள செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சேத்தூர் புறக்காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காளீஸ்வரியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையான காளீஸ்வரிக்கும், அவரது கணவர் பாப்பையனுக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காளீஸ்வரி போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும் தெரிகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    • லாரி மோதி பா.ஜ.க. பிரமுகர் பலியானார்.
    • மதுரை நோக்கி காரில் சென்றபோது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.



    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் கதிரேசப்பாண்டியன். இவர் பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். நேற்று கதிரேசபாண்டியனும், அவரது மனைவியும் மதுரை நோக்கி காரில் சென்றனர். காரை கதிரேசபாண்டியன் ஓட்டி சென்றார். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்றபோது தேனியில் இருந்து ராஜ பாளையம் நோக்கி வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதியது.

    இதில் கதிரேசப் பாண்டியன், அவரது மனைவி ராமலட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் கதிரேசபாண்டியன் இறந்துவிட்டார். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண ஆசை காட்டி இளம்பெண் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்த மாரீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி புதுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மாரீஸ்வரன் (வயது20). இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி உள்ளார். இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மாரீஸ்வரன் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்த மாரீஸ்வரன் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரனை கைது செய்தனர்.

    • விருதுநகர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சொத்து பிரச்சினையால் விபரீதம் ஆனது.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது22). இவருக்கும், சந்தியா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டுவில் சவுந்தரபாண்டிக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இதனை திருப்பி தருமாறு சூரியபிரகாஷ் தந்தையிடம் கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சூரியபிரகாஷ் கீழஉப்பிலிகுண்டுவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
    • கட்டனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள கட்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகணேசன் (வயது 33) கட்டிட தொழிலாளி.இவருக்கு திருமணமாகி கஸ்வின் (5) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று அருகில் உள்ள பொட்டல்பச்சேரி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது.

    இதனை கண்டு களிப்பதற்காக முத்துகணேசன் தனது 5 வயது மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். திருவிழாவை பார்த்து விட்டு இருவரும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது கட்டனூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முத்துகணேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கட்டனூரை சேர்ந்த அஜித்குமார், முத்துகணேசன், கஸ்வின் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    தந்தை-மகன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக கட்டனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும், கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியும் இணைந்து "உலக இருதய தினத்தை" முன்னிட்டு இருதய நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவன துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார். டீன் சேவியர் செல்வ சுரேஷ் , கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

    ராஜபாளையம் சாய் இருதய மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணர் ராஜாராம் தலைமை விருந்தினராகவும், கிருஷ்ணன்கோவில் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் கவுரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தம் முதல் குன்னூர் ஆரம்ப சுகாதார மையம் வரை பேரணி நடந்தது. இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தன் செய்திருந்தார்.

    • அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கர்ப்பிணி பெண்களை அவரது தாய், தந்தையர், மாமியார் கணவர் 10 மாத காலம் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

    அதன் பின்னர் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர் மற்றும் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விருந்து வழங்கப்பட்டது.

    கர்ப்பிணி பெண்கள், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ×