என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வேளாண் விளைபொருட்கள் கிட்டங்கியை தரமானதாக கட்டி முடிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
    • விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப்பணிகளின் ஆய்வு கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் ஆகிய வட்டாரங்களில் விருதுநகர் மாவட்ட திட்டப்பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டப் பணிகளின் ஆய்வு கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    இந்த திட்டத்தின் மூலம் வேளாண் பொறியியல் துறையினரால் கட்டப்படும் தடுப்பணைகள்நல்ல நிலையிலும், தரமானதாகவும், விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய வகையி லும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள இடங்களை தேர்வு செய்து கட்டப்பட வேண்டும்.

    கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் நீர்மட்ட அளவு மேலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பயன்களை நேரில் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளாண்மை துறையினரால் இந்த திட்டத்தின் மூலம் ராஜபாளையம் வடக்கு தேவதானத்தில் கட்டப்பட இருக்கும் வேளாண் விளை பொருட்களின் கிட்டங்கி கட்டுமான பணிகளை விரைவாக தொடங்கி, தரமானதாக கட்டி முடித்து, விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், இணை இயக்குநர் (வேளாண்மை) உத்தண்டராமன், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் நாராயணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கோவில் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அருப்புக்கோட்டை- மதுரை ரோடு ராமலிங்கா நகரில் உள்ள பெட்டி கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 808 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.

    புகையிலை பாக்கெட்டுகளை சப்ளை செய்த சீனி என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் பாலவனத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது தெற்கு பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பவர் புகையிலை பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • விருதுநகரில் காப்பகத்திலிருந்து வீடு திரும்பிய சிறுமி மீண்டும் மாயமானார்.
    • இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த மைனர் பெண் சம்பவத்தன்று திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரியாபட்டியை சேர்ந்த முனியசாமி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் துரித நடவடிக்கை எடுத்து அந்த சிறுமியை மீட்டு முனியசாமியை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி விருதுநகரில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த சிறுமி வீட்டுக்கு திரும்பினார். சம்பவத்தன்று காரியா பட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இது குறித்து திருச்சுழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் ஊர், ஊராக சென்று பலகாரம் தயார் செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோட்டுக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற செந்தில்குமார் பின்னர் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இது குறித்து அவரது மனைவி முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேத்தூரில் ரூ. 26 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் உபகரணங்கள் திருடு போயின.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    சென்னையை சேர்ந்தவர் முத்து வெங்கடகிருஷ்ணன் (வயது 52). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவரது நிறுவனம் சார்பில் 2009-ம் ஆண்டு ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள முகவூர் ரோட்டில் செல்போன் டவர் நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அந்த டவர் செயல்பாடின்றி இருந்தது.

    இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் செல்போன் டவரில் இருந்த விலையுயர்ந்த பேட்டரிகள், மின் சாதனங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது. இதன் மதிப்பு ரூ. 26 லட்சத்து 8 ஆயிரம் ஆகும். இதுகுறித்து வெங்கடகிருஷ்ணன் சேத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
    • கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவதானம் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத் தோப்பு பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இது தமிழக அரசின் மலராகும்.

    பார்ப்போருக்கு ரம்மிய மாக காட்சி அளிக்கும் இந்த மலர்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.

    இதற்கு கார்த்திகைப்பூ என்றும், கண்வழிப்பூ என்றும் பெயர்கள் உண்டு. இது மிகுந்த மருத்துவ குணமுடையது. அரிய வகையான இந்த செடியின் மலர்கள், கிழங்கு, வேர் போன்றவை சித்த மருத்து வத்தில் முக்கியமாக இடம் வகிக்கிறது.

    தேனி மாவட்டம் போடி, பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பகுதிக்கு வந்து சித்த மருத்துவத்திற்காக செங்காந்தள் மலர்களின் வேர்களை பறித்து கிழங்கை எடுத்துவிட்டு செடிகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.

    இதன் காரணமாக கார்த்திகை மாத தொடக்கத்திலேயே பூத்துக் குலுங்கும் இத்தகைய மலர்கள் சித்த மருத்துவ சேகரிப்பாளர்களால் அழியும் நிலை ஏற்படுகிறது.

    இத்தகைய அரிய வகை மலர்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு வேளாண்மை துறை மற்றும் இதர துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்கிய 2 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • தையல் எந்திரங்களை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுசெய்த உடனடி தீர்வாக 2 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நகர-வட்டார தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியில் 3 நகர தலைவர்கள், 10 வட்டார தலைவர்கள் பதிவிகள் உள்ளது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த புதிய தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையினால் அங்கீகரி க்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நகர, வட்டார காங்கிரஸ் தலைவர்களை மாவட்ட தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    இதில் ராஜபாளையம் நகரத் தலைவராக சங்கர் கணேஷ், சாத்தூர் நகர தலைவராக அய்யப்பன், ஸ்ரீவில்லி புத்தூர் நகர தலைவராக வன்னியராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல் ராஜ பாளையம் மேற்கு வட்டார தலைவராக கணேசன், ராஜபாளையம் கிழக்கு வட்டார தலைவராக கோபால கிருஷ்ணன், வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார தலைவராக கணேசன் வெம்பக்கோட்டை வடக்கு தலைவராக செல்வக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவராக பவுல்ராஜ், சாத்தூர் மேற்கு வட்டார தலைவராக கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு வட்டார தலைவராக பாலகுருநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு வட்டார தலைவராக முருகராஜ், வத்ராயிருப்பு மேற்கு வட்டார தலைவராக லட்சுமணன், வத்ராயிருப்பு கிழக்கு வட்டார தலைவராக சுப்பிரமணியன் ஆகியோர் அறிவிக்கபட்டுள்ளனர்.

    இந்த புதிய நகர வட்டார தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தலைவர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்திர காளியம்மன் கோவில் உள்ளது.
    • கோபுரத்தை சுற்றி தீ கொளுந்து விட்டு எரிந்ததால் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் பிரசித்தி பெற்ற பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று கோவில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சீர்வரிசைகள் கொண்டு சென்றனர். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட தீப்பொறி ராஜகோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்து தீ பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர்கள் விவேகானந்தன், அழகுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    கோபுரத்தை சுற்றி தீ கொளுந்து விட்டு எரிந்ததால் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து குறித்து கோவில் நிர்வாகிகள் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா குமார், பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தீ விபத்து நடந்ததை தொடர்ந்து பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு அனுமதிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    தீ அணைக்கப்பட்டு சகஜ நிலை திரும்பிய பின்னர் இன்று காலை 8 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • பட்டாசு வெடித்த போது தீப்பொறி சாரத்தின் மீதுபட்டு தீப்பிடித்தது.

    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சாக்கு துணிகளால் ராஜகோபுரம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சிலர் பேன்சி ரக பட்டாசு வெடித்தப் போது அதில் இருந்து வெளிவந்த தீப்பொறி கோயில் சாரத்தின் மீது சுற்றப்பட்டிருந்த சாக்கில் பட்டு தீப்பிடித்தது.

    இதில் கோயில் உச்சிபகுதி முழுவதும் சாரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சிவகாசி தீயணைப்பு படையினர் இரண்டு வாகனங்களுடன் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து சிவகாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • ராஜபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் ஆய்வு செய்த ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி (விருதுநகர் மாவட்ட பொறுப்பு நீதிபதி)சிவஞானம் அலுவலக பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராஜபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அமிர்த ராஜ், செயலாளர் கனகராஜ், பொருளாளர் தங்கத்துரை உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர் .

    வழக்கறிஞர் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நீதிமன்ற வளாகத்தில் நூலகம் திறக்க வேண்டும் என வக்கீல் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், விரைவில் சார்பு நீதிமன்றம் திறக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதுகுறித்து அரசசின் கவனத்திற்கு கொண்டு சென்று திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வக்கீல்களும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

    இதை தொடர்ந்து வக்கீல்களிடம் பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறி ஞர்கள் பொது மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தவறில்லை. அதே வேளையில் சார்பு நீதிமன்றம் வேண்டும் என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது நல்லதல்ல. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலக பணிக்காக தினந்தோறும் வருவது வழக்கம். ஆனால் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு வருவது அவருடைய வேலைகளை விட்டு, விட்டு வருகின்றனர். அப்படி வரும் நேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்தால் அது அவர்களுக்கும் பாதிக்கும், வழக்கறிஞர்களையும் பாதிக்கும்.

    ஆகையால் வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    • பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
    • பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு, மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    முதல்வர் செந்தில்குமார் மற்றும் டீன் மாரிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் டாக்டர்.தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பொறியியல் கல்லூரியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்வி கற்பதில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மற்றும் அவர்களின் நற்செயல்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், வாழ்க்கையில் சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதனால் நேரம், காலம் எவ்வாறு வீணடிக்கப்பபடுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு கதைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

    மாணவர்கள் தங்கள் உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காப்பதன் மூலமாக, மனதையும், சிந்தனையையும் நல்வழியில் செலுத்தி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் எனக்கூறினார். உலகை வல்லரசாக்கும் திறமை, இன்றைய இளைஞர்களாக மாணவர்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீராம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×