என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி, சரக்குவேன் டிரைவர்.
    • விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர புளியமரத்தில் மோதி நின்றது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி, சரக்குவேன் டிரைவர். இவரது மனைவி பாண்டிசெல்வி (வயது 26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    தினமும் பாண்டிசெல்வி தனது மகள்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை அவர் மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். பள்ளியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தென்காசி-ராஜபாளையம் மெயின்ரோட்டை பாண்டி செல்வி கடக்க முயன்றார்.

    அப்போது தென்காசியில் இருந்து வேகமாக வந்த அய்யப்ப பக்தர்களின் கார் எதிர்பாராத விதமாக பாண்டிசெல்வி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர புளியமரத்தில் மோதி நின்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டிசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் காரில் இருந்த அய்யப்ப பக்தர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் விபத்தில் பெண் பலியானதை அறிந்த அந்தப்பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பள்ளி அமைந்துள்ள இந்தப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற கோர விபத்துகள் நடந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதன் காரணமாக இன்று 2 குழந்தைகளின் தாய் பரிதாபமாக இறந்துள்ளார்.

    எனவே இந்தப்பகுதியில் நிரந்தரமாக வேகத்தடை அல்லது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். மறியல் காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லை என அறிவித்து இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.

    • சிவகாசியில் ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கு நடந்தது.தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளர் இளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், 1 வளர் இளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 45ஆயிரம் மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

    அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

    எதிர் காலத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். தமிழ்நாட்டிலேயே விருது நகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்களை தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை காப்பற்றுவதற்கும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்களுக்கும் உண்டு.

    இதுவரை தொழிலா ளர்களுக்கு பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 35 ஆயிரத்து 961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாக பணியாற்றவேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. விபத்தில்லா பட்டாசு நடக்கும் ஆலைகள் பின்பற்றும் வழிமுறைகளை மற்ற தொழிற்சாலைகள் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விருதுநகர் அருகே பெண் போலீசை ஆபாசமாக திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • பழைய பஸ் நிலையம் தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஒரு வாலிபர் படுத்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் லட்சுமிநகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 21). இவர் அதிகாலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு தாய்மார்கள் பாலூட்டும் அறையில் ஆலங்குளம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (26) என்ற வாலிபர் படுத்திருந்தார். அதைப்பார்த்த சிவானந்தம் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    அப்போது அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் அவரை வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித் அவர்கள் இருவரையும் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். மேலும் பாலூட்டும் அறையின் கண்ணாடியை உடைத்து சிவானந்தத்தையும் அடித்து உதைத்தார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ்நிலையத்தில் சிவானந்தம் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டார்.

    • ராஜபாளையம் அருகே அய்யப்ப பக்தர் விபத்தில் பலியானார்.
    • சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகணேசன் (29). சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த இவர் சம்பவத்தன்று புத்தூரில் நடந்த பூஜையில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். குடல்வேலி விளக்கு அருகே வந்த போது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது. படுகாயமடைந்த சிவகணேசன் பரிதாபமாக இறந்தார். தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள், சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் வெம்பக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 21 திருநங்கைகள், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 27 சிறுபான்மையினர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர்ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியாக திருநங்கைகளுக்கும், சிறுபான்மையர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அவர்களுக்கு குடும்ப அட்டைகள், குடியிருப்பு வீடுகள், உதவித்தொகை, இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரத்தில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 6 திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

    தமிழகத்திலேயே முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் 1 திருநங்கைக்கு மாவட்ட அளவிலான ஊராட்சி களுக்கான வளமையத்தின் தலைமையாளராக பணி நியமன ஆணையும், 1 திருநங்கைக்கு வள மையத்தின் உதவியாளர் கணினி இயக்குபவராக பணிநியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளன.

    இது போன்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், வருவாய் கோட்டாட்சியர்கள் விசுவநாதன்(சிவகாசி), அனிதா(சாத்தூர்), விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கநாதன், வத்திராருப்பு வட்டாட்சியர் உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் திடீரென மரணமடைந்தார்.
    • அவருக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி- அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

    சிவகாசி

    சிவகாசியில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதா கிருஷ்ணன் நேற்று திடீரென மரணமடைந்தார்.

    சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன் (வயது 67). 2014-ம் ஆண்டு நடந்த விருதுநகர் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இவர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளராகவும், 3 முறை சிவகாசி யூனியன் தலைவராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க. வில் பல்வேறு பதவிகள் வகித்த இவர், தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.

    ராதாகிருஷ்ணனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது உடலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைத்தலைவர் வனராஜா, சிவகாசி தி.மு.க. ஒன்றிய செயலாளரும், யூனியன் துணைத்தலை வருமான விவேகன்ராஜ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சந்திரன், விருதுநகர் அ.ம.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான்சந்தோஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.எம்.ராஜா உட்பட அரசியல் கட்சி நிர்வாகிகளும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    ராதாகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடபட்டி மேலூர் கிராமத்தில் இன்று மாலை நடக்கிறது.

    ராதாகிருஷ்ணனின் மகன் தர்மராஜாவை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். 

    • விருதுநகர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
    • விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பரங்கிரிநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருகில் உள்ள மாரிமுத்து என்ற வாலிபருடன் பூங்கொடி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை மணிகண்டன் பலமுறை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் இரவு பார்த்தபோது, மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

    விருதுநகர் டவுன் ஜே.சி.பி. காம்பவுண்டை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (45). இவரது மகன் மாரிமுத்து (28). வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு சுப்புலட்சுமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் தாமோதரன். இவரிடம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தளவாய்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சப்-கலெக்டர் போல் நடித்து பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் தனது நண்பர் மாசிலாமணி என்ப வர் மூலமாக தாமோத ரனின் பேரன் சதீஷ்குமாருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தர வில்லை.

    இதுதொடர்பாக தாமோ தரன் கேட்டபோது, அவரை யும், அவரது பேரனையும் கொலை செய்து விடுவதாக செந்தில்குமாரும், மாசிலா மணியும் மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக ராஜபாளையம் குற்றவியல் நீதி மன்றத்தில் தாமோதரன் வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்குமார், மாசிலாமணி மீது தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகரின் முக்கிய பகுதியில் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலை வடுகர்கோட்டை பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் உள்ளது. இந்த வங்கியின் முன்பு ஏ.டி.எம்.மையம் இருக்கிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த ஏ.டி.எம். எந்திரம் உடைந்துள்ளதாக வங்கியின் அதிகாரிக்கு செல்போனில் தகவல் வந்தது. இதையடுத்து அவர் அதுகுறித்து உடனடியாக அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். மிஷின் உடைக்கப்பட்டு முன்பகுதி திறந்த நிலையில் இருந்துள்ளது. ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் எதுவும் திருட்டு போகவில்லை.

    இதையடுத்து ஏ.டி.எம். மையத்தின் அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.

    நகரின் முக்கிய பகுதியில் வங்கியின் முன்பு இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • மாடிப்படியில் தவறி விழுந்து 2 பேர் இறந்தனர்.
    • கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 42). மாடிப்படியில் தவறி விழுந்து மயக்கம் அடைந்தார். அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக அவரது மகள் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழராஜகுல ராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகில் உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தகுமார் (41). மாடிப்படியில் தவறி விழுந்தவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.dwa

    • வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் திருட்டு போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுலோன் காலனியை சேர்ந்தவர் ராசய்யா (வயது 73). குடும்பத்துடன் மதுரைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ராசய்யா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×