என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராஜபாளையம் அருகே கார் மோதி இளம்பெண் பலி- பொதுமக்கள் மறியல்
- ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி, சரக்குவேன் டிரைவர்.
- விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர புளியமரத்தில் மோதி நின்றது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி, சரக்குவேன் டிரைவர். இவரது மனைவி பாண்டிசெல்வி (வயது 26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
தினமும் பாண்டிசெல்வி தனது மகள்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை அவர் மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். பள்ளியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தென்காசி-ராஜபாளையம் மெயின்ரோட்டை பாண்டி செல்வி கடக்க முயன்றார்.
அப்போது தென்காசியில் இருந்து வேகமாக வந்த அய்யப்ப பக்தர்களின் கார் எதிர்பாராத விதமாக பாண்டிசெல்வி மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர புளியமரத்தில் மோதி நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டிசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காரில் இருந்த அய்யப்ப பக்தர்களும் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் விபத்தில் பெண் பலியானதை அறிந்த அந்தப்பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், பள்ளி அமைந்துள்ள இந்தப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற கோர விபத்துகள் நடந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதன் காரணமாக இன்று 2 குழந்தைகளின் தாய் பரிதாபமாக இறந்துள்ளார்.
எனவே இந்தப்பகுதியில் நிரந்தரமாக வேகத்தடை அல்லது வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். மறியல் காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






