என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 18 பேரை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 18 பேரை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.

    காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிர்மலா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஷாஜாதி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் நாகராஜன் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி லத்தேரி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்னர்.

    திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் சியாமளா குடியாத்தம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், லத்தேரி இன்ஸ்பெக்டர் மனோன்மணி பள்ளி கொண்டாவுக்கும், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி திருவண்ணாமலை தெள்ளார் போலீஸ் நிலையத்துக்கும், செய்யாறு கலால் பிரிவு மங்கையர்க்கரசி திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அங்கிருந்த தமிழரசி கே.வி.குப்பத்துக்கும், போளூர் கலால் பிரிவு பிரேமா திருவண்ணாமலை ஏ.சி.டி.யு. பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய கவிதா போளூர் கலால் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனிமொழி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய பவுலின் வேலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி வேலூர் தெற்கு போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கும், கண்ணமங்கலம் சாலமோன் ராஜா செங்கத்துக்கும், அங்கு பணியாற்றிய ஹேமாவதி கண்ணமங்கலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் கவிதா செய்யாறு கலால் பிரிவுக்கும், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    காட்பாடியில் நடந்து சென்ற வியாபாரி மனைவியிடம் 5 பவுன் செயினை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    வேலூர்:

    காட்பாடி திருநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். வேலூர் மண்டி தெருவில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுமதி (வயது 50). நேற்று வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த சுமதி கத்தி கூச்சலிட்டார்.

    இது குறித்து விருதம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பேரறிவாளன் விடுதலை பெற்று வீட்டுக்கு திரும்புவதே முழு நிம்மதி என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை வீட்டிற்கு வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அப்போது அற்புதம்மாள் கூறியதாவது:-

    எனது மகன் 2-வது முறையாக பரோலில் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இது மட்டும் போதாது. பேரறிவாளனின் 28 ஆண்டு கால வாழ்க்கை வீணாகி விட்டது. தற்போது 29 ஆண்டு நடக்கிறது. அவர் விடுதலை பெற்று வீட்டுக்கு வர வேண்டும் அது தான் எனக்கு முழு நிம்மதி. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    2-வது முறையாக பரோல் வழங்கிய அரசுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் இன்று ஜோலார்பேட்டை வருகிறார். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் அவரது மனைவி அற்புதம்மாள். இவர்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் பேரறிவாளன் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளார். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறார். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. பின்னர் பரோல் முடிந்ததும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மூட்டு வலி, சிறுநீரக, தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை வசதிக்காக வேலூர் ஜெயிலில் இருந்த பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து, அவருக்கு ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது. இன்று காலை புழல் ஜெயிலில் இருந்து வேலூர் ஜெயிலுக்கு பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

    அங்கு பரோல் படிவம் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர். வீட்டு மாடியில் பேரறிவாளனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றார். அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர். அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    பேரறிவாளனை யாரும் சந்திக்க அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    அவரது வீட்டில் டி.எஸ்.பி. தங்கவேலு, 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 35 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமணத்திற்கு 51 நாட்கள் பரோலில் வந்தார். திருமண ஏற்பாடு நடக்காததால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அதனை கோர்ட்டு நிராகரித்தது. முருகனின் பெற்றோர் உடல்நிலை சரியில்லாததால் அவரும் பரோல் கேட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவரது அறையில் செல்போன் கைப்பற்றியதை தொடர்ந்து தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பரோல் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
    வேலூர் சிறையில் உள்ள முருகன் இன்று காலை உணவை சாப்பிட மறுத்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18-ந் தேதி சிறை போலீசார் கைதிகள் அறையில் சோதனை நடத்தினர்.

    அப்போது முருகன் அறையில் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் 18-ந்தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    சிறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி 20 நாட்களாக இருந்த உண்ணாவிரதத்தை கடந்த 6-ந்தேதி முருகன் கைவிட்டார். இதையடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர்.

    தனி சிறை வேண்டாம். ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறு முருகன் சிறை அதிகாரிகளிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை போலீசார் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று சிறை போலீசாரிடம் முருகன் நேற்று மனு அளித்தார்.

    அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார். இன்று காலை உணவை சாப்பிட மறுத்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    முதியவரை கல்லால் தாக்கி கொன்று பணத்தை கொள்ளையடித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தை சேர்ந்தவர் காசிநாதன் (64). விவசாயம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். பள்ளிகொண்டா அம்பேத்கர் நகரை சேர்ந்த நந்தா என்கிற முத்துக்குமார் காசிநாதனிடம் பணம் பறிக்க திட்டமிட்டார்.

    கடந்த ஆண்டு மே மாதம் 28-ந்தேதி பகல் விவசாய நிலத்தில் இருந்த காசிநாதனை முத்துக்குமார் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த ரூ.1000, ஒரு செல்போன் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார்.

    பள்ளிகொண்டா போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்தது.

    நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் நந்தா என்கிற முத்துகுமாருக்கு ஆயுள் தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தார்.
    வாலாஜாவில் திருமண வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    வாலாஜா:

    வாலாஜாவில் உள்ள கிராமணி தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 50). சொந்தமாக பீடி மண்டி நடத்தி வருகிறார். அவருடைய மனைவி கோமளா (42). இவர்களுக்கு அரிபாபு (28) என்ற மகனும், பவித்ரா (24), பாரதி (20) என 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனின் மூத்த மகள் பவித்ராவிற்கு நேற்று காலை ஆரணியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக நேற்று முன்தினம் மாலை சரவணன் தனது குடும்பத்தினருடன் ஆரணிக்கு சென்றுவிட்டார்.

    திருமணம் முடிந்து நேற்று சரவணன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் மர்ம நபர்கள் வீடு முழுவதும் மற்றும் காம்பவுண்டு சுவர் பகுதியில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும்.

    தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
    அரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் இருந்து 8½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 60). தனியார் நிறுவன ஓய்வுபெற்ற அலுவலர். இவரது மனைவி ஜெயந்தி (55).

    இவர்கள் நேற்று கட்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் ஆந்திரா மாநிலம் ராஜம்பேட்டை பகுதியில் இருந்து ஏறி பயணம் செய்தனர்.

    ரெயில் திருத்தணி ரெயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது ஜெயந்தி வைத்திருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதில் 8½ பவுன் நகை, ஒரு செல்போன் வைத்திருந்தார்.

    இதுகுறித்து ஜெயந்தி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று பயணித்தார்.

    ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வரும் போது வசந்தகுமாரின் செல்போனை அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் நைசாக திருடினார்.

    இதை பார்த்த வசந்தகுமார் அந்த வாலிபரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதி பண்ணாவாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும், அவர் மீது சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடியதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    வேலூர் ஜெயிலில் ஒரு மாதத்திற்கு பிறகு இன்று நளினி முருகன் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியுடன் சந்திப்பு அனுமதி மறுக்கப்பட்டது.

    தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் உண்ணாவிரதம் இருந்தார்.

    உண்ணாவிரதத்தை கைவிட கோரி முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஜெயிலில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று நளினியை சந்தித்து பேச சிறைத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு இன்று காலை கலால் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகனை வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 8.50 மணி முதல் 9.50 மணி வரை சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


    தனியார் பள்ளி உதவித் தலைமையாசிரியர் அவரது மனைவி மற்றும் மகள்களை கட்டிப்போட்டு நகை, பணத்தை 4 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் காட்பாடியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி செங்குட்டை சி.எம் ஜான் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 52). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு அவரது மனைவி மற்றும் 2 மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.15 மணிக்கு 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். சத்தம்கேட்டு கண்விழித்த முத்து மற்றும் அவரது குடும்பத்தினரை கும்பல் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் 4 பேரையும் கயிறால் கட்டிப்போட்டு வாயில் சத்தம்போட முடியாதபடி துணியை வைத்து அமுக்கினர். இதனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

    பின்னர் கும்பல் வீட்டில் இருந்த 28 பவுன் நகை ரூ.17 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முத்துவின் மோட்டார் சைக்கிளையும் கும்பல் ஓட்டிச் சென்றுவிட்டனர்.

    கொள்ளையர்கள் கட்டி போட்டதால் விடிய விடிய முத்து மற்றும் அவரது மனைவி மகள்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

    இன்று காலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 4 பேரும் கயிறால் கட்டப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். கட்டுகளை அவிழ்த்து மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.

    இதுகுறித்து முத்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.கொள்ளையர்கள் 4 பேரும் முகமூடி எதுவும் அணியவில்லை. அவர்கள் வெளியூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் காட்பாடியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    செங்குட்டை பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 அரசு பேருந்துகளை அதிகாரிகள் இன்று ஜப்தி செய்தனர்.
    வேலூர்:

    அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் டெப்போவுக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில், நிலுவைத் தொகை ரூ.1.75 கோடியை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து, அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10 பேருந்துகளை ஜப்தி செய்தனர். இந்த நடவடிக்கையால் அங்கிருந்த ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர் ஜெயிலில் 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

    தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த 20 நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

    உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து வந்தார். நேற்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.

    ஜெயில் அதிகாரிகள் அவரிடம் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறையில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும். நளினியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்தார்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து முருகன் பழம் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

    முன்னதாக முருகனுக்கு ஆதரவாக 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நளினி நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.



    ×