search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன்
    X
    பேரறிவாளன்

    வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

    புழல் ஜெயிலில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை போலீசார் அழைத்து சென்றனர்.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் இன்று ஜோலார்பேட்டை வருகிறார். இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் அவரது மனைவி அற்புதம்மாள். இவர்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் பேரறிவாளன் கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளார். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறார். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மேலும் ஒரு மாதத்துக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. பின்னர் பரோல் முடிந்ததும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் மூட்டு வலி, சிறுநீரக, தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை வசதிக்காக வேலூர் ஜெயிலில் இருந்த பேரறிவாளன் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து, அவருக்கு ஒரு மாத பரோல் கிடைத்துள்ளது. இன்று காலை புழல் ஜெயிலில் இருந்து வேலூர் ஜெயிலுக்கு பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

    அங்கு பரோல் படிவம் ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை அழைத்து சென்றனர். வீட்டு மாடியில் பேரறிவாளனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றார். அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர். அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    பேரறிவாளனை யாரும் சந்திக்க அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர்.

    அவரது வீட்டில் டி.எஸ்.பி. தங்கவேலு, 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 35 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி அவரது மகள் திருமணத்திற்கு 51 நாட்கள் பரோலில் வந்தார். திருமண ஏற்பாடு நடக்காததால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அதனை கோர்ட்டு நிராகரித்தது. முருகனின் பெற்றோர் உடல்நிலை சரியில்லாததால் அவரும் பரோல் கேட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவரது அறையில் செல்போன் கைப்பற்றியதை தொடர்ந்து தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பரோல் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது.
    Next Story
    ×