என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே வனத்துறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் உதவி வன அலுவலர் ராஜ்குமார், வனச்சரகர் இளங்கோ தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ஆம்பூர் அடுத்த வெள்ளக்குட்டை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை திடீரென நிறுத்தி விட்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர் . இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று காரில் சோதனை நடத்திய போது 6 செம்மர கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் காரை மீட்டு ஆம்பூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். காரில் செம்மரம் கடத்தி வந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ஆந்திராவிலிருந்து செம்மரம் கடத்தி வரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வள்ளலார் நினைவு தினமான நாளை வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்திற்கும் வள்ளலார் நினைவு தினமான நாளை சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது.

    இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு, மது கூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    ஜோலார்பேட்டை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பிரபாகரன் (வயது21). கட்டிட மேஸ்திரி. இவர் 2 நாட்களுக்கு முன் அச்சமங்கலம் நோக்கி பைக்கில் சென்றார்.

    அப்போது அங்குள்ள அம்மன் கோவில் அருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து  எதிர்பாராத விதமாக பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அவர் இறந்தார். ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் கொலையில் மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் ரமேஷ் (வயது43).டேங்க் ஆபரேட்டர். இவருக்கு நதியா(37). என்ற மனைவியும் பிரபாகரன்(19). நரசிம்மன்(12) என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ரமேஷ் கடந்த 4-ந்தேதி தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின் புறத்தில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்க் ஆபரேட்டரை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். 

    இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான டேங்க் ஆபரேட்டர் ரமேஷ் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நதியாவின் சகோதரர் அரவிந்தன் (30). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

    இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன் குடிபோதையில் இருந்த ரமேஷ் வீட்டில் தனியாக இருந்த அரவிந்தனின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்தனின் மனைவி அரவிந்தனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் தனது வாழ்க்கையை வீணடித்த ரமேஷை பழிவாங்க அரவிந்தன் முடிவெடுத்தார். மேலும் ரமேஷின் நடவடிக்கையில் விரக்தியடைந்த நதியாவும் அரவிந்தனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிலிருந்த ரமேஷை அரவிந்தன் செல்போன் மூலம் குடிக்க அழைத்தார். அதை நம்பி அவரும் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது இருவரும் குடித்தனர்.

    அதன்பின் அரவிந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷின் தலையில் வெட்டி படுகொலை செய்தார். ஜோலார்பேட்டை போலீசார் இதுதொடர்பாக நதியா மற்றும் அரவிந்தன் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

    ஆற்காடு அருகே மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் முருகேச முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (62) விவசாயி. இவரது 2 மகன்கள் ரணுவத்தில் வேலை செய்து வருகின்றனர்.

    முருகனுக்கு விளாபாக்கம் அடுத்த சாத்தூர் கூட்டுரோடு அருகே விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் கரும்பு பயிரிட்டு உள்ளனர். பன்றிகள், எலிகள் தொல்லை இருந்ததால் விவசாய நிலத்தை சுற்றி மின்சார வேலி அமைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்றிரவு முருகன் பயிருக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மின்சாரம் தாக்கி முருகன் இறந்து கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் முருகன் பிணத்தை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் முருகன் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    அரக்கோணம் அருகே குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த சிறுணமல்லி மதுரா புதுமல்லி கிராமத்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி சுஜாதா (வயது22) இருவரும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை சிறுணமல்லி ஏரிக்கரை கங்கையம்மன் கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் சுஜாதா சேலையால் தூக்கில் தொங்கினார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெமிலி அடுத்த புன்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சுஜாதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுஜாதா தற்கொலை குறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் சுஜாதாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 1½ ஆண்டுகளில் சுஜாதா தற்கொலை செய்து கொண்டதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆம்பூர் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பாலூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது25). இருவரும் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்துவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்றவர்கள் இருவரும் இரவு பைக்கில் வீடு திரும்பினர். உமராபாத் அடுத்த கலாம் நகர் என்ற இடத்தில் பைக் வந்தபோது நிலை தடுமாறி இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் இந்து முன்னணி பிரமுகர் சென்ற காரின் மீது மோதுவது போல் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    இந்து முன்னணியின் வேலூர் கோட்டதலைவராக உள்ளவர் மகேஷ். இவருக்கு அதிக கொலை மிரட்டல்கள் வந்தது. மேலும் கொலை முயற்சி சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் இவருக்கு பாதுகாப்பு அளிக்க துப்பாக்கி எந்திய 2 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

    மகேஷ், இந்து முன்னணி இயக்கம் தொடர்பான பணிக்கு பல்வேறு இடங்களுக்கு காரில் செல்வார். அவர்களுடன் அந்த போலீஸ்காரர்களும் பாதுகாப்புக்காக செல்வார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அவர் வேலூர் நேதாஜி மார்கெட்பகுதியில் காரில் சென்றார். அப்போது அங்கு அவரது காரில் மோதுவது போன்று மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மகேஷ் மீதான தாக்குதலுக்காக அவர்கள் வந்திருக்கலாம் என கருதி போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது போலீஸ்காரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் அதிக அளவிலான மக்கள் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மகேஷ், போலீசாரையும் அழைத்துச் சென்றார். எனினும் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர்கள் மார்க்கெட் பகுதியில் வேலைபார்ப்பது தெரியவந்தது. எதிர்பாராத விதமாக சம்பவம் நடந்ததாக கூறினார். இதனையடுத்து வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் இடிக்கும் பணி இன்று தொடங்கியது. ஓட்டல் இருந்த இடத்தில் மேற்கூரைகளை அகற்றி இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.45 கோடி செலவில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து கட்டப்பட உள்ளது. பஸ் நிலையம் கட்டுமானப்பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் 24 மாதங்கள் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

    அதனால் வருகிற 9-ந்தேதி முதல் பஸ்கள் தற்காலிக இடமாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இப்போது புதிய பஸ் நிலையத்தின் கிழக்குப்பகுதியில் சென்னை மற்றும் திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி செல்லவும், பிற மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் எல்லாம் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இயங்கிவரும் 35-க்கும் அதிகமான கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன.

    கடைகள் முன்பு உள்ள இடத்தில் தற்போது வியாபாரம் செய்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் நுழைவு வாயில் அருகே உள்ள ஓட்டல் காலி செய்யப்பட்டது.

    இதற்காக இப்போது இயங்கிவரும் புதிய பஸ்நிலைய விரிவாக்கத்திற்காக கட்டிடங்கள் இடிக்கும் பணி இன்று தொடங்கியது. ஓட்டல் இருந்த இடத்தில் இன்று மேற்கூரைகளை அகற்றி இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    செல்லியம்மன் கோவில் பின்புறம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அதில் இன்று தார் சாலை போடும்பணி நடந்தது.

    இந்த இடத்தில் இருந்து 9-ந்தேதி முதல் சென்னை, பெங்களூர், திருப்பத்தூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ரூ.7 கோடியில் பள்ளிக்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட தலா 3½ கோடி மதிப்புள்ள 2 பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

    ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியிருக்கும் இந்த கட்டிடங்களை காணொலி காட்சி மூலமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததர். இதை முன்னிட்டு 100 பேர் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் பாண்டுரங்கன், நெமிலி ஒன்றிய செயலாளர் விஜயன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் லோகநாதன், உள்ளிட்ட கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    காணொலி காட்சி திறப்பு விழாவிற்கு பின்னர் சு.ரவி எம்.எல்.ஏ. பள்ளி வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
    வேலூர் மாவட்டத்தில் விதி மீறி வாகனம் ஓட்டியது தொடர்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அரசு முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார்.

    போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி. பிமோஷ்குமார், திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, எஸ்.பி.க்கள் பிரவேஷ்குமார், விஜயகுமார், மயில்வாகனன், சிபிசக்கரவர்த்தி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் டி.எஸ்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அந்த ஆண்டு சுமார் 17 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த ஆண்டு 10 ஆயிரமாக உயிரிழப்பு குறைந்துள்ளது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 870 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டு 375 ஆக குறைந்துள்ளது.

    வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்காக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் விபத்து நடந்த பகுதிகளில் 15 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து விடுவதால் உயிரிழப்புகள் வெகுவாக தடுக்க முடிகிறது.

    தமிழகத்தில் 65 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 3 கோடி வாகனங்கள் நடமாடுகிறது இவற்றில் 2.கோடியே 45 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன.

    அதிகபட்ச வாகன விபத்து இருசக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. எனவே பைக் ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது அவசியம். அதேபோல் காரில் செல்பவரும் சீட் பெல்ட் அணிவது அவசியம் இதன் மூலம் விபத்துக்கள் குறையும்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அதிவேக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது தொடர்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வரும் காலத்தில் லைசென்ஸ் எடுக்க சிறப்பு பாடத்திட்டம் கொண்டு வரப்படும். வேலூர் மாவட்டத்தில் 40 சதவீதம் விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கிறது.

    டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 4 மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலூர்:

    டெல்லியை சேர்ந்தவர் டாக்டர் சுனில் அகர்வால் (வயது 59). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நலப்பிரிவு சர்ஜெரி தலைவராக பணியாற்றி வந்தார்.

    நேற்று வேலூரில் இருந்து கோவைக்கு காரில் சென்றார். அவருடன் அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் விமலின், டெக்னிசியன் வினோத் ஆகியோர் சென்றனர். காரை டாக்டர் விமலின் ஓட்டிச் சென்றார்.

    நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் சுனில்அகர்வால் இறந்தார். இவரது மனைவி இந்திரா டாக்டராக உள்ளார். 2 மகன்கள் உள்ளனர்.

    விபத்து தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×