search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விபத்துக்களை தடுக்க நடவடிக்கை - விதிமீறிய 1 .20 லட்சம் பேர் லைசென்சு ரத்து

    வேலூர் மாவட்டத்தில் விதி மீறி வாகனம் ஓட்டியது தொடர்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அரசு முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார்.

    போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி. பிமோஷ்குமார், திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, எஸ்.பி.க்கள் பிரவேஷ்குமார், விஜயகுமார், மயில்வாகனன், சிபிசக்கரவர்த்தி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் டி.எஸ்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் நிருபர்களிடம் கூறுகையில்:-

    இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அந்த ஆண்டு சுமார் 17 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த ஆண்டு 10 ஆயிரமாக உயிரிழப்பு குறைந்துள்ளது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 870 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டு 375 ஆக குறைந்துள்ளது.

    வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்காக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் விபத்து நடந்த பகுதிகளில் 15 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து விடுவதால் உயிரிழப்புகள் வெகுவாக தடுக்க முடிகிறது.

    தமிழகத்தில் 65 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன 3 கோடி வாகனங்கள் நடமாடுகிறது இவற்றில் 2.கோடியே 45 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன.

    அதிகபட்ச வாகன விபத்து இருசக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. எனவே பைக் ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது அவசியம். அதேபோல் காரில் செல்பவரும் சீட் பெல்ட் அணிவது அவசியம் இதன் மூலம் விபத்துக்கள் குறையும்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது அதிவேக மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது தொடர்பாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வரும் காலத்தில் லைசென்ஸ் எடுக்க சிறப்பு பாடத்திட்டம் கொண்டு வரப்படும். வேலூர் மாவட்டத்தில் 40 சதவீதம் விபத்துக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நடக்கிறது.

    டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 4 மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×