என் மலர்tooltip icon

    வேலூர்

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் சாலை பணியை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட ராமாபுரம் சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்தது. இந்த சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.75 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. இந்த நிலையில் தார்சாலை தரமற்றதாக போடபட்டதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் நேற்று மாலை ராமாபுரம் தார் சாலையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலையின அகலம் மற்றும் நீளம் குறித்தும், தரத்துடன் சாலைபோடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். சாலை தரமாக உள்ளதாகவும், சாலையின் இரு புறமும் போதிய இடவசதி இல்லாததால் மண் அணைக்க முடியாத காரணத்தினால் சாலை ஓரங்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது, அதை சீரமைக்க கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், இளநிலை பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,061 ஆக அதிகரித்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 127 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,061 ஆக அதிகரித்துள்ளது.

    வேலூர் அருகே வேன்களில் கடத்தி செல்லப்பட்ட 50 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட 50 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், குட்காவை கடத்திய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குட்கா பொருட்களை காஞ்சிபுரம், வேலூருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க சென்னை மண்டல செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், தலைவர் பீமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அதற்காக மாவட்டம் தோறும் புதிதாக ஆம்புலன்சுகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. அதற்கு ஆட்கள் தேவைப்படும் நேரத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    தமிழக அரசு பி.எல். விடுப்புக்காக வழங்கிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவத்துறை சேவையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தனியார் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் நடைபெற்ற ரேடியேட்டர் ஊழல் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியை கடைபிடித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு ஊரடங்கையொட்டி ஒரேநாளில் ரூ.8 கோடியே 8 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளன. வேலூர் கோட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளது. அரக்கோணம் கோட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 8-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

    இதையொட்டி நேற்று முன்தினம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடிமகன்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை உற்சாகத்துடன் வாங்கி சென்றனர். இதன்காரணமாக வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.2 கோடிக்கு மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடியே 95 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.3 கோடியே 13 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது.

    இதன் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரூ.8 கோடியே 8 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 131 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சிறுமிகள் திருமணத்தை குறைக்க சமூக நலத்துறை அதிகாரிகள், சைல்டுலைன் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் குழந்தை திருமணம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் சிறுமிகள் திருமணம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

    கொரோனா ஊரடங்கு காலமாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 131 சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யும் பெற்றோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்படுவார்கள். மேலும் திருமண ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் நடந்த முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக ரூ.4 கோடியே 79 லட்சத்தில் 26 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் த.வேலழகன், பொதுப் பணித்துறை வேலூர் கோட்ட கட்டிடங்கள் பிரிவு செயற் பொறியாளர் சங்கரலிங்கம், உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி. வீரமணி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    2 நாட்களுக்கு முன்பு வேலூரில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனையும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கவில்லை, என அவர் கூறினார்.

    இது, முதல்-அமைச்சரின் அலுவல் ஆய்வுகூட்டம். வேலூரில் நடந்த முதல்- அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களுக்கும் அழைப்பு இல்லை. இதற்காக, அழைப்பிதழும் அடித்து அழைக்கப்படவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் நானாகவும், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இது முழுக்க தமிழக முதல்-அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்ட அலுவல் ஆலோசனைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதை வைத்து தி.மு.க.வினர் அரசியல் பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கடைகளை அடைத்து, அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கடைசி நாளான நேற்று வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா குறித்த முழு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து பணியாளர்களையும் நிரந்தரம் செய்யவேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கடைகளை அடைத்து, அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் டாக்டர் உள்பட 184 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 19-ந் தேதி 161 பேரும், நேற்று முன்தினம் 144 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதன்பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் ஒரேநாளில் வேலூர் மாவட்டத்தில் 90 பெண்கள் உள்பட 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், மருத்துவமனை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் பாகாயம் பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் சைதாப்பேட்டை, வேலப்பாடி, சேண்பாக்கம், சத்துவாச்சாரி, பூந்தோட்டம் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி உள்ளது.

    வேலூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோன்று மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,161 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத 4 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு வேலூரை அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் ஒன்றிய சமூக நலஅலுவலர் பூங்கொடி, சைல்டுலைன் அலுவலர்கள், பாகாயம் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் கடந்தாண்டு பிளஸ்-2 முடித்த மாணவிக்கும், பாலமதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் கோவில் ஒன்றில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து கொடுப்போம் என்று சமூகநல அலுவலர் எழுதி வாங்கினார்.

    வடுகந்தாங்கல் அருகே பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமிக்கும், மேல்மாயிலை சேர்ந்த 33 வயது வாலிபருக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி சமூகநல அலுவலர், சைல்டுலைன் அலுவலர் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதேபோன்று கருகம்புத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், குடியாத்தம் தட்டம்பாறையை 33 வயது வாலிபருக்கும், பனமடங்கி அருகேயுள்ள பள்ளத்தூரை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவிக்கும், குடியாத்தம் கருனீகசமுத்திரத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலர்கள், ஒன்றிய சமூகநல அலுவலர்கள், போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தினார்கள்.
    பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    * அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    * அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும்; தேவையின்றி வெளியே செல்லாதீர்.

    * மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

    * காய்ச்சல் முகாம்கள் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.

    * கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

    * முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    * இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான்.

    * குடிமராமத்து பணிகள் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன.

    * தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    வேலூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,880 ஆக அதிகரித்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5,850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 2,89,787 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, சேலம், கோவை, கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,880 ஆக அதிகரித்துள்ளது.


    ×