என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் அடுத்த அல்லேரிமலை கிராமத்துக்கு சென்று அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் சாராயம் காய்ச்சுவதில் இருந்து விடுபட்டு சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாராய கும்பலை பிடிக்க நெல்லிமரத்து கொல்லை பகுதிக்கு போலீசார் பைக்கில் சென்றனர். அவர்கள் சென்ற பாதையில் மரங்கள் வெட்டி போடப்பட்டு இருந்தது.
இதனால் பைக்குகளை நிறுத்தி விட்டு போலீசார் அந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சாராய வியாபாரி கணேசன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட சாராய கும்பல் திடீரென போலீசார் முன்வந்து நின்றனர்.
அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் சாராய கும்பல் போலீசாருடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கினர்.
போலீசார் செல்போனில் சாராய கும்பலை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாராய கும்பல் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளை எடுத்து போலீசாரை பயங்கரமாக தாக்கினர். இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
பின்னர் சாராய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். கும்பல் தாக்கியதில் ஏட்டு அன்பழகன் (வயது35), போலீஸ்காரர் ராகேஷ்(29) ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் உடலின் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த 2 போலீசாரும் உடனடியாக வேலூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மலையில் இருந்து கீழே இறங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அவரை போலீசார் மீட்டு அருகே உள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 120 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், தலைமையிலான போலீஸ் படை இன்று காலை அல்லேரி மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பறக்கும் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சாராய கும்பலை கூண்டோடு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாராய வியாபாரிகள் பலர் தலைமறைவாகி உள்ளனர்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுப்பம் ஊராட்சி சாமுண்டிபுரம், ஓட்டேரிகோடி, உள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமங்களில் இறப்பவர்களை நீண்டகாலமாக நிரந்தர மயானம் இல்லாத காரணத்தால் ஓட்டேரி மதகு தண்ணீர் செல்லும் கால்வாய் ஓரம் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்துள்ளனர்.
தற்போது அந்த கால்வாயின் ஒருபுறம் ரோடு போடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இறந்தவர்களின் உடல்களை குறுகிய இடத்தில் அடக்கம் செய்யும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்த பகுதியில் அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி நிரந்தரமாக சாலை வசதியுடன் மயானம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் யுவராஜ் (வயது22). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுப்பெண்ணான சுப்புலட்சுமி கணவர் வீட்டில் அதிகமான வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை யுவராஜ் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து மாலை 6.45 மணியளவில் பசியோடு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் மனைவி சுப்புலட்சுமி அடுப்பில் தண்ணீர் சுடவைத்துக் கொண்டிருந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி கணவனை அடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பசியோடு வீட்டுக்குள் வந்த யுவராஜூக்கு மனைவி தன்னை அடித்ததால் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் அங்கிருந்த ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சுப்புலட்சுமி மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் சுப்புலட்சுமி இறந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 03 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 870 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்தது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் வேலூரில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,436 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர்:
வேலூர் கொணவட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை கொணவட்டம் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள திருமண மண்டபம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த கருகம்புத்தூர் ஹாஜிபுராவை சேர்ந்த மஸ்தான் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மஸ்தான் ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர் மீண்டும் அவர் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (35). ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப்படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுல் (26). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. அமுல் தற்போது கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த வாரம் குழந்தை பிறக்க இருந்தது. ஜம்மு காஷ்மீரில் இருந்து புருஷோத்தமன் ஒரு மாதம் விடுப்பில் கடந்த 25-ந்தேதி ஊருக்கு வந்தார்.
புருஷோத்தமனின் தந்தை ஆறுமுகம் (75) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நேற்று முன்தினம் இரவு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் புருஷோத்தமன், அமுல் ஆகியோர் மருத்துவ மனையில் உடனிருந்தனர்.
இரவு நேரமானதால் ஊருக்கு செல்லாமல் சி.எம்.சி. மருத்துவமனைக்கு எதிரே உள்ள விடுதியில் இருவரும் தங்கினர்.
இந்நிலையில், ஆறுமுகத்தின் மூத்த மகன் ராஜ்குமார் (38) என்பவர் விடுதியில் தங்கியுள்ள தம்பி புருஷோத்தமனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், எதிர்முனையில் அவர் பேசாததால் விடுதிக்கு சென்று அறைக்கதவை தட்டினார். நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை என்பதால் மருத்துவமனைக்கு திரும்பிவிட்டார்.
பகல் 1 மணியளவிலும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார், விடுதி மேலாளர் கனி மற்றும் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் அமுல் பிணமாகவும் புருஷோத்தமன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தனர்.
வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
உதவி கலெக்டர் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.






