என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேலூரில் போலீஸ்காரர்களை வழிமறித்து சாராய கும்பல் தாக்குதல்- 2 பேர் படுகாயம்

    வேலூர் அல்லேரிமலையில் சோதனைக்கு சென்ற போலீஸ்காரர்களை வழிமறித்து சாராய கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அல்லேரிமலை கிராமத்துக்கு சென்று அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் சாராயம் காய்ச்சுவதில் இருந்து விடுபட்டு சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாராய கும்பலை பிடிக்க நெல்லிமரத்து கொல்லை பகுதிக்கு போலீசார் பைக்கில் சென்றனர். அவர்கள் சென்ற பாதையில் மரங்கள் வெட்டி போடப்பட்டு இருந்தது.

    இதனால் பைக்குகளை நிறுத்தி விட்டு போலீசார் அந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சாராய வியாபாரி கணேசன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட சாராய கும்பல் திடீரென போலீசார் முன்வந்து நின்றனர்.

    அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் சாராய கும்பல் போலீசாருடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கினர்.

    போலீசார் செல்போனில் சாராய கும்பலை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாராய கும்பல் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்த கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளை எடுத்து போலீசாரை பயங்கரமாக தாக்கினர். இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

    பின்னர் சாராய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். கும்பல் தாக்கியதில் ஏட்டு அன்பழகன் (வயது35), போலீஸ்காரர் ராகேஷ்(29) ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் உடலின் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த 2 போலீசாரும் உடனடியாக வேலூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மலையில் இருந்து கீழே இறங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அவரை போலீசார் மீட்டு அருகே உள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 120 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், தலைமையிலான போலீஸ் படை இன்று காலை அல்லேரி மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பறக்கும் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சாராய கும்பலை கூண்டோடு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாராய வியாபாரிகள் பலர் தலைமறைவாகி உள்ளனர்.

    Next Story
    ×