என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேலூர் லாட்ஜில் கர்ப்பிணி மனைவியை கொன்று ராணுவவீரர் தற்கொலை

    வேலூர் லாட்ஜில் கர்ப்பிணி மனைவியை கொன்று ராணுவவீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (35). ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப்படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுல் (26). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. அமுல் தற்போது கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த வாரம் குழந்தை பிறக்க இருந்தது. ஜம்மு காஷ்மீரில் இருந்து புருஷோத்தமன் ஒரு மாதம் விடுப்பில் கடந்த 25-ந்தேதி ஊருக்கு வந்தார்.

    புருஷோத்தமனின் தந்தை ஆறுமுகம் (75) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு நேற்று முன்தினம் இரவு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் புருஷோத்தமன், அமுல் ஆகியோர் மருத்துவ மனையில் உடனிருந்தனர்.

    இரவு நேரமானதால் ஊருக்கு செல்லாமல் சி.எம்.சி. மருத்துவமனைக்கு எதிரே உள்ள விடுதியில் இருவரும் தங்கினர்.

    இந்நிலையில், ஆறுமுகத்தின் மூத்த மகன் ராஜ்குமார் (38) என்பவர் விடுதியில் தங்கியுள்ள தம்பி புருஷோத்தமனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், எதிர்முனையில் அவர் பேசாததால் விடுதிக்கு சென்று அறைக்கதவை தட்டினார். நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை என்பதால் மருத்துவமனைக்கு திரும்பிவிட்டார்.

    பகல் 1 மணியளவிலும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார், விடுதி மேலாளர் கனி மற்றும் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் அமுல் பிணமாகவும் புருஷோத்தமன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தனர்.

    வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    உதவி கலெக்டர் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×