search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்ட போது எடுத்த படம்.

    2 மினிவேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல் - 5 பேர் கைது

    பெங்களூருவில் இருந்து வேலூருக்கு 2 மினிவேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து வேலூருக்கு 2 மினிவேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்கள் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இரவில் சோதனைச்சாவடி, சுங்கச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடும் படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து வேலூருக்கு குட்கா பாக்குகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் வடக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியிலும், விரிஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகிலும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    நேற்று அதிகாலை கிரீன் சர்க்கிள் வழியாக வந்த ஒரு மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். அதில் குட்கா பாக்குகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மினிவேனில் இருந்த டிரைவர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்வர்லால் (வயது 26), ரமேஷ்குமார் (24), வாணியம்பாடி செட்டியப்பனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (33) எனத் தெரிய வந்தது. பன்வர்லால், ரமேஷ்குமார் ஆகியோர் சுண்ணாம்புக்காரத் தெருவில் தங்கியிருந்து ஒருகடையில் வேலை செய்து வந்ததும், 3 பேரும் சேர்ந்து பெங்களூருவில் இருந்து குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை வேலூரில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    அதில் பெங்களூருவைச் சேர்ந்த பீமாராவ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுலால் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பன்வர்லால் உள்பட 3 பேரை கைது செய்தனர். மினிவேனில் 25 அட்டை பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் விரிஞ்சிபுரம் வழியாக ஒரு மினிவேனை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதில், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லத்தின்கான் (24), விஜயராம்சுதேசி (33) எனத் தெரிய வந்தது. அந்த மினிவேனில் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு குட்கா பாக்குகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். மினிவேனில் கடத்தி வந்த 750 கிலோ எடையிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்கள், மினிவேன்கள் ஆகியவற்றை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைதான 5 பேரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து, குடியாத்தம் கிளை சிறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், குட்கா பாக்குகள் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் பீமாராவ், மஞ்சுலால் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறோம். வேலூர் மாவட்டத்தில் கடைகள், குடோன்களில் குட்கா பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? எனக் கண்காணித்து வருகிறோம். வேலூர் வழியாக குட்கா பாக்குகள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    Next Story
    ×