என் மலர்
வேலூர்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் வேலூர் கோட்டை மூடப்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கோட்டைக்கு சென்று சுற்றி பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வின்படி கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பொதுமக்கள் கோட்டை கொத்தளம், மதில்சுவர் நடைபாதையில் சென்று சுற்றி பார்க்கவும், நடைபயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்பட்ட வேலூர் கோட்டை வெறிச்சோடியது.
இந்தநிலையில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் சுற்றுலாத்தலங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டது. அதன்படி 9 மாதங்களுக்குப் பிறகு வேலூர் கோட்டையில் நேற்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, நுழைவு வாயில் பகுதியில் தொல்லியல்துறை சார்பில் கோட்டை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் கோட்டைக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விவரங்களை கேட்டு பதிவு செய்தனர்.
முகக் கவசம் அணிய வேண்டும், என வலியுறுத்தினர். முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதில் சுவர் நடைபாதைக்கு செல்லும் கதவு மூடப்பட்டுள்ளது. இதனால் மதில்சுவர் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்லவில்லை. ஒருசிலர் வேறு மாற்று வழியில் சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கோட்டை பல நாட்கள் மூடப்பட்டு இருந்ததால் நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பாம்புகள், தேள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்கலாம். சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செடி, கொடிகள் வளர்ந்துள்ள இடத்துக்குச் செல்லக்கூடாது, எனத் தடை விதிக்கவில்லை. ஆனால் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் கவனமாக செல்லவும், என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மதில் சுவர் கதவு திறக்கப்படும், எனத் தெரிவித்தனர்.
ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வராததால் வேலூர் கோட்டையை நம்பி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குதிரை சவாரி தொழிலாளர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், பெட்டிக் கடைக்காரர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது கோட்டையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மோர்தானா அணைக்கு அடுத்த நிலையில், பெரிய அணையாக கே.வி.குப்பத்தை அடுத்த செஞ்சி ராஜாதோப்பு அணை உள்ளது.
தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் மலைப்பாங்கான நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைநீர், மோர்தானா அணையின் இடதுபுற கால்வாய் வழியே விடப்படும் நீர் ஆகியவை ராஜாதோப்பு அணைக்கு வரும்.
இந்த அணையின் உயரம் 24.57 அடி. கொள்ளளவு 20 மில்லியன் கன அடியாகும். ‘நிவர்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக குடியாத்தம் மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. இந்த உபரி நீரும், மலைப்பகுதிகளில் பெய்த மழைநீரும் அணைக்கு வந்ததால் ராஜாதோப்பு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
தற்போது அணையின் மொத்த உயரமான 24.57 அடி தண்ணீர் நிரம்பி நேற்று உபரிநீர் வெளியேறியது. கடந்த 2017-ம் ஆண்டு நிரம்பிய இந்த அணை மீண்டும் தற்போது நிரம்பி வழிகிறது. இந்த அணை நிரம்பி வழிவதை அறிந்த கிராம மக்கள், விவசாயிகள் குடும்பத்தினருடன் அணையை பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிரம்பி வழிவதை ஆய்வு செய்து, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக காளை மாடு வளர்த்து வந்தார். கள்ளூர் பஜ்ஜி என பெயரிடப்பட்ட அந்த காளையை தங்களது குடும்பத்தில் ஒருவராக குடும்பத்தினர் பாசமாக வளர்த்து வந்தனர். கள்ளூர் பஜ்ஜி காளை உள்ளூர் மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. அந்த காளைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக காளை உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காளைக்கு மாலைகள் அணிவித்து இறுதிச்சடங்கு செய்தனர்.
மேலும் மேளதாளங்கள் மற்றும் பட்டாசுகள் வெடித்து கண்ணீர்விட்டு கதறி அழுது பிரியா விடை கொடுத்தனர். காளையை சுற்றி குமார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. காளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவரது மனைவி நளினியுடன் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்.
தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அரசு தன்னை ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும்.
விடுதலை செய்யாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
சிறைக்காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முருகன் தற்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை அவரது மனைவி நளினியுடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி வந்தார். அதற்கும் தற்போது தடை செய்துள்ளனர். தொடர்ந்து முருகனிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாம் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஜெகன் (வயது18). சக்திவேல் என்பவரது மகள் அபிநயா (15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
அவர்களது உறவினர்களுடன் இன்று 10-க்கும் மேற்பட்டோர் வேன் மூலமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு வந்தனர்.
இவர்கள் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் சின்னமலை பாண்டவர் தீர்த்த குளத்தில் குளித்தனர்.
அப்போது ஜெகன், அபிநயா இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தனர். அவர்களுடன் வந்தவர்கள் அலறி கூச்சலிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் குளத்தில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். குளத்தில் சேற்றில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் பொதுமக்கள் மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கொண்ட பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சோளிங்கர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சோளிங்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
ஆனால் கோவில் குளத்தின் பகுதிகளில் போதிய பாதுகாப்பில்லை எனவேதான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
வெளியூர் பக்தர்கள் அதிகமாக வரக்கூடிய நாட்களில் கோவில் குளம் பகுதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உறவினர்களுடன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி அவர் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஏற்கனவே சிறை காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீது சிறை அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) உயர் பாதுகாப்பு கட்டிடத்தில் அடைக்கப்பட்டுள்ள முருகன் அறையை சோதனையிட முதல்நிலை காவலர்கள் இருளப்பன், சரவணன், 2-ம் நிலை காவலர் சக்திவேல் மற்றும் பெண் காவலர் ஒருவர் கொண்ட குழுவினர் சென்றனர். அப்போது முருகன் காவலர்களை பணி செய்ய விடாமல் திட்டினார். மேலும் அவர் உடைகள் அணியாமல் இருந்தார். அறையில் இருந்த பொருட்களை காவலர்கள் மீது வீசி காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறுகையில், முருகன் விடுதலையை தாமதப்படுத்த அவர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகள் போடுகின்றனர். அவரின் காவி உடையை ஜெயில் அதிகாரிகள் பறித்து விட்டு, வெள்ளை உடையை அணிய கூறுகின்றனர். இதுவரை அவர் காவி உடையை தான் அணிந்து வந்தார். எனவே வேறு உடையை அணிய மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது அறையை சோதனை செய்ய சென்ற குழுவில் வேண்டும் என்றே பெண் காவலர் ஒருவரை இடம்பெற செய்துள்ளனர். ஆண்கள் ஜெயிலில் பெண் காவலரை பணியில் அமர்த்துவது தேவையற்றது. இதில் உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே பெண் காவலரை சோதனை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் என்றார்.
இந்த நிலையில் வக்கீல் புகழேந்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
முருகன் கடந்த 29 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்து வருகிறார். முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான கோரிக்கை கவர்னர் கையெழுத்துக்காக நிலுவையில் உள்ளது. வேலூர் ஜெயிலில் முருகனை சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாலும், அவரை மன நோயாளியாக மாற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாலும் அவர் 25 நாட்களாக தொடர்ந்து உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் மீது தற்போது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தனிமை சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
அவரை விடுதலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். எனவே முருகனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்றும் முருகன் 19-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் வேலூர் கோட்டையை சுற்றி பார்க்கவும், அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள கோவில், தேவாலயத்தில் மட்டும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனால் கோட்டை வெளிப்புறம் அமைந்துள்ள பூங்காவில் பொதுமக்கள் காலை, மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் இந்த பூங்காவில் அமர்ந்து பொழுதை போக்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பொதுமக்கள் கோட்டை வெளிப்புற பூங்காவில் நடைபயிற்சி சென்றனர். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே கருப்பு நிறத்தில் மர்ம பெட்டி (சூட்கேட்ஸ்) ஒன்று இருந்தது. பலர் நடைபயிற்சி சென்றதால் யாராவது அதனை வைத்திருப்பார்கள் என்று அனைவரும் நினைத்து கொண்டனர். ஆனால் வெகுநேரமாகியும் அதனை யாரும் எடுக்கவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த பெட்டி குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில், எந்த பொருட்களும் இல்லை. அந்த பெட்டி ட்ரோன் கேமரா வைக்க வைக்கப்படும் பெட்டி என்று தெரிய வந்தது. அதையடுத்து நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வேலூர் கோட்டையின் உள்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் யாராவது நேற்று முன்தினம் இரவு அல்லது நேற்று அதிகாலை ட்ரோன் கேமரா மூலம் கோட்டை மற்றும் அதன் உள்பகுதியை படம் பிடித்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் கோட்டை பூங்காவில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






