search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்
    X
    வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்

    வேலூர் கோட்டையில் சுற்றுலா பயணிகள் அனுமதி

    9 மாதங்களுக்கு பிறகு வேலூர் கோட்டையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேலூர்:

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் வேலூர் கோட்டை மூடப்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கோட்டைக்கு சென்று சுற்றி பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வின்படி கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் பொதுமக்கள் கோட்டை கொத்தளம், மதில்சுவர் நடைபாதையில் சென்று சுற்றி பார்க்கவும், நடைபயிற்சி செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்பட்ட வேலூர் கோட்டை வெறிச்சோடியது.

    இந்தநிலையில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் சுற்றுலாத்தலங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டது. அதன்படி 9 மாதங்களுக்குப் பிறகு வேலூர் கோட்டையில் நேற்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, நுழைவு வாயில் பகுதியில் தொல்லியல்துறை சார்பில் கோட்டை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் ஊழியர்கள் கோட்டைக்கு வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விவரங்களை கேட்டு பதிவு செய்தனர்.

    முகக் கவசம் அணிய வேண்டும், என வலியுறுத்தினர். முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதில் சுவர் நடைபாதைக்கு செல்லும் கதவு மூடப்பட்டுள்ளது. இதனால் மதில்சுவர் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செல்லவில்லை. ஒருசிலர் வேறு மாற்று வழியில் சென்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கோட்டை பல நாட்கள் மூடப்பட்டு இருந்ததால் நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பாம்புகள், தேள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. அங்குள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் பின்னர் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்கலாம். சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் செடி, கொடிகள் வளர்ந்துள்ள இடத்துக்குச் செல்லக்கூடாது, எனத் தடை விதிக்கவில்லை. ஆனால் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் கவனமாக செல்லவும், என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மதில் சுவர் கதவு திறக்கப்படும், எனத் தெரிவித்தனர்.

    ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வராததால் வேலூர் கோட்டையை நம்பி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குதிரை சவாரி தொழிலாளர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், பெட்டிக் கடைக்காரர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். தற்போது கோட்டையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×