என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
    அடுக்கம்பாறை :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி கடந்த 25 நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி முருகன் கடந்த 15-ந் தேதி இரவு சுமார் 7.15 மணி அளவில் வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் காவலுடன் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்பட உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பரிசோதனை முடிவில் ‘நார்மல்’ என வந்ததால் முருகன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அன்று இரவு மீண்டும் உடல்நிலை மோசமானதால் 11 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் தனது உண்ணாவிரத்தை தொடர்ந்து வந்தார். தொடர் உண்ணாவிரதத்தில் உள்ள முருகனிடம் அவரின் உடல்நிலையை எடுத்து கூறி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு இளநீர் குடித்து தனது உண்ணாவிரதத்தை முருகன் முடித்துக்கொண்டார். மேலும் உடனடியாக உணவு கொடுக்க முடியாது என்பதால் முதலில் பழ வகைகளை உட்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது பழ வகைகள், பழச்சாறுகள் மற்றும் இளநீர் மட்டுமே அவர் சாப்பிட்டு வருகிறார். நேற்று அவருக்கு கண், இதயம், நரம்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கார் நிறுத்தும் இடத்தில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அங்கு வந்த ஒருவர் திடீரென தான் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கவனித்த அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் லதா, பிரேமா ஆகியோர் ஓடி வந்து, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை தட்டி விட்டு, தீப்பெட்டியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர், தீப்பெட்டியை கொடுக்காமல் கையில் இறுக்கி வைத்துக் கொண்டார்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடமிருந்த தீப்பெட்டியை பறிமுதல் செய்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் கே.வி.குப்பம் அருகே மேல்மாயில் ரோடு வடுகந்தாங்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான தண்டபாணி (வயது 46) எனத் தெரிய வந்தது.

    தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தண்டபாணி கூறுகையில், எனக்கும் எனது உறவினர் ஒருவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் தகராறு ஏற்பட்டது. அதில் அவர் என்னை தாக்கினார். இதுகுறித்து நான் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றேன். அங்கு, பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் எனது புகாரை ஏற்க மறுத்து, உறவினருக்கு சாதகமாகப் பேசினார்.

    மேலும் என் மீது கஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகள் பதிவு செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்து, அதன் பிறகு உள்ளே அனுமதிப்பார்கள். ஆனால் நேற்று தண்டபாணி மண்எண்ணெய் பாட்டிலை யாருக்கும் தெரியாமல் உள்ளே கொண்டு வந்துள்ளார். போலீசார் சரியாக சோதனை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. பெண்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்ட மறைவான அறை பயன்படுத்தாமலேயே உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும், எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

    தண்டபாணி தீக்குளிக்க முயன்ற சம்பவத்துக்கு பிறகு கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்கு வந்த பொதுமக்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரணாம்பட்டு அருகே தந்தையை தாக்கிய வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனை கதவின் கண்ணாடி, ஜன்னலை அடித்து உடைத்தனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள கள்ளிச்சேரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 26). அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் அப்பு (19). இருவரும் கூலித்தொழிலாளர்கள். நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் செல்வம் என்பவர் இறந்து விட்டார். அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்க அலெக்ஸ் சென்றபோது, அங்கு சக்திவேலும் வந்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த அலெக்ஸ், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் மாலை 6.30 மணியளவில் அலெக்ஸ் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது சக்திவேலின் மகன் அப்பு சென்று, நீ எப்படி என் அப்பாவை அடிக்கலாம்? என அலெக்சிடம் கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் அலெக்சின் மார்பு, வயிறு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதில் மயங்கி விழுந்த அலெக்சை அங்கிருந்தவர்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அலெக்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அலெக்ஸ் இறந்து போனதை அறிந்த அவரது உறவினர்கள் 200-க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அப்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனையில் கதவின் கண்ணாடிகள், ஜன்னலை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்ரண்டு ஸ்ரீதரன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அப்புவை தேடி வருகின்றனர்.
    போலி கணக்கு மோசடி வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற கதர் கிராம தொழில் வாரிய துறை அதிகாரிக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்
    காஞ்சீபுரம்:

    வேலூர் மாவட்டம் வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 65). இவர் காஞ்சீபுரத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்துறை கண்காணிப்பாளர் மற்றும் களைத்தல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பதவியில் இருந்தபோது அந்த துறையில் போலியான கணக்கு எழுதி மோசடி செய்ததாக இவர் மீது கடந்த 2006-ம் ஆண்டு கதர் கிராம தொழில் வாரிய துறையின் துணைப்பதிவாளர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகண்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் காஞ்சீபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு சின்னகண்ணுவை விடுதலை செய்தது. மேலும் இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் இளவரசு ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி கயல்விழி, சின்னகண்ணுவின் மீது நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல், பொய்யான கணக்கு வழங்குதல் உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 33 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் செல்போனில் வீடியோ காலில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    தொடர்ந்து 24 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது உடல் மிகவும் சோர்வடைந்தது.இதனால் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஆனாலும் உடல் சோர்வு குறையவில்லை. அவருக்கு உணவு வழங்க வேண்டுமென டாக்டர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் எனக் கூறினர். அவர் மறுத்ததால் கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென முருகன் மிகவும் சோர்வடைந்தார். அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு ஈ.சி.ஜி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகளை செய்தனர். 30 நிமிடம் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    இரவு 11 மணியளவில் முருகனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பொது வார்டில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரிக்கு வந்த போது உடல் மெலிந்து மிகவும் சோர்வடைந்த நிலையில் மெதுவாக முருகன் நடந்து சென்றார்.

    அவர் எப்போதும் காவி உடையில் சாமியார் போல காணப்படுவார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் கைதிகளுக்கான வெள்ளை நிற உடையை அணிந்திருந்தார்.

    இன்று காலையில் முருகனுக்கு மீண்டும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை பரிசோதித்தனர். அவர் ஓ.ஆர்.எஸ். கரைசல் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார்.

    இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.

    வெளியில் உள்ள உணவு எதையும் நான் சாப்பிட மாட்டேன் தரமான பொருட்கள் கொடுத்தால் நானே சமைத்து சாப்பிடுவேன். வேறு யார் கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து முருகன் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். முருகன் சிகிச்சை பெறுவதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் கூடுதல் பாதுகாப்பாக நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பழங்கால சிலைகள், கல்வெட்டுகள், வாள்கள், கத்திகள், நாணயங்கள், ஓவியங்கள், துணிகள், கற்களால் ஆன ஆயுதங்கள் என எண்ணற்ற பொருட்கள் உள்ளது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.

    இப்பொருட்கள் அனைத்தும் அரிய பொருட்கள் என்பதால் அருங்காட்சியத்துக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அருங்காட்சியகம் முழுவதும் பல இடங்களில் 8 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பை அதிகப்படுத்த அருங்காட்சியக ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி கோட்டையில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறியதாவது:-

    அருங்காட்சியகத்துக்கு கூடுதலாக பாதுகாப்பை அதிகரிக்க தற்போது புதிய 4 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் இருளிலும் தெளிவாக தெரியும். இத்துடன் ஒலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. யாராவது உள்ளே புகுந்து பேசினால் அதையும் கேட்க முடியும். அடுத்த கட்டமாக மேலும் 4 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் காட்சிகளை செல்போனில் வீட்டில் இருந்தே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நிவர் புயல் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
    குடியாத்தம்:

    நிவர் புயல் காரணமாக பெய்த மழையால் மோர்தானா அணை நிரம்பி, கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மோர்தானா அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல ஏரிகள் நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் ஏரிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி, எர்த்தாங்கல் ஏரி, செட்டிக்குப்பம் ஓட்டேரியை கலெக்டர் பார்வையிட்டு மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் எம்.சண்முகம், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, ஹேமலதா, ஒன்றிய பொறியாளர் சிலம்பரசன், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 பெரிய பாசன ஏரிகள் உள்ளது. அதில் தற்போது 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 6 ஏரிகள் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்ட உள்ளன. மோர்தானா அணை 260 மில்லியன் கன அடியும், ராஜதோப்பு அணை 20 மில்லியன் கன அடியும் கொள்ளளவு கொண்டது. தற்போது சதுப்பேரி ஏரி 30 சதவீதம் நிரம்பி உள்ளது.

    பொன்னை அணைக்கட்டு மூலம் 18 ஏரிகளும், மோர்தானா கால்வாய்கள் மூலம் 19 ஏரிகளும் நிரம்புவதால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. கரும்பு விளைச்சல் இல்லாததால் ஆம்பூர் சர்க்கரைஆலை திறக்கப்படவில்லை. இந்தாண்டு 10 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் இந்தாண்டு ஆம்பூர் சர்க்கரைஆலை திறக்க வாய்ப்புள்ளது. அம்முண்டி சர்க்கரைஆலை கரும்பு அரவைக்காக இம்மாதம் 21-ந் தேதி திறக்க வாய்ப்பு உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளும், நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் பொங்கல் பண்டிகை விவசாயிகளின் மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகையாகும். தற்போது நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 800 அடியில் இருந்த தண்ணீர் தற்போது 200 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் இது 100 அடிக்கு கீழே தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் கோட்டை திறக்கப்பட்ட முதல்நாளிலேயே 3,326 பேர் வந்து பார்த்துள்ளனர். கோட்டை பூங்காவும் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் குடும்பம், குடும்பமாக வந்து பொழுது போக்குகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகரின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் வேலூர் கோட்டை 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றும் பலர் ஆர்வமாக சென்று பார்த்தனர். இதில் ஏராளமான வடமாநிலத்தவர்களும் அடங்குவார்கள்.

    காலை மற்றும் மாலையில் பலர் நடைபயிற்சியும் மேற்கொண்டனர். இதனால் மீண்டும் கோட்டை மக்கள் நடமாட்டத்துடன் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    கோட்டைக்கு வருபவர்களை தொல்லியத்துறை சார்பில் அவர்களின் விவரம் பதிவு செய்து பின்னர் உள்ளே அனுமதிக்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் கோட்டை திறக்கப்பட்ட முதல்நாளிலேயே 3,326 பேர் வந்து பார்த்துள்ளனர். இவர்களின் விவரம் தொல்லியல்துறை உத்தரவின் பேரில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோட்டை கண்காணிப்பு அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டைக்கு எவ்வளவு பயணிகள் வருகிறார்கள் என்ற புள்ளி விவரம் தொல்லியல் துறைக்கு அனுப்பப்படுகிறது. இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் வருங்காலங்களில் கோட்டைக்கு தேவைப்படும் வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    கோட்டை பூங்காவும் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் குடும்பம், குடும்பமாக வந்து பொழுது போக்குகின்றனர். காதல் ஜோடிகளும் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் கோட்டை மீண்டும் களைகட்ட தொடங்கியது.
    உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    அடுக்கம்பாறை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என டாக்டர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. நேற்றும் முருகன் 23-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென முருகன் மிகவும் சோர்வடைந்தார். இதனால் அவரை பலத்த போலீஸ் காவலுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு ஈ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற பரிசோதனை செய்தனர். சுமார் 1½ மணி நேர பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அவர் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் உடல் சோர்வாக இருந்ததால் மீண்டும் முருகன் இரவு 11 மணி அளவில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முருகன் உடல் மெலிந்து மிகவும் சோர்வடைந்த நிலையில் மெதுவாக நடந்து சென்றார். அவர் எப்போதும் காவி உடையில் சாமியார் போல் காணப்படுவார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் கைதிகளுக்கான வெள்ளை நிற உடையை அணிந்திருந்தார்.

    முருகனின் காவி உடையை வேண்டும் என்றே ஜெயில் அதிகாரிகள் பறித்து விட்டதாக அவரது வக்கீல் புகழேந்தி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் 23-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என டாக்டர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர்.

    அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. நேற்றும் முருகன் 23-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஜெயில் அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    விறகுக்கடை நடத்தும் பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் அமுதா (வயது 55). இவர், அதே பகுதியில் விறகுக்கடை வைத்துள்ளார். கடந்த 1.2.2015 அன்று விறகுக்கடையில் இருந்தபோது, வேலூர் கொணவட்டம் தாமரை குளத்தெருவைச் சேர்ந்த முகமதுகலீல் (43) என்பவர் அங்கு வந்தார்.

    திடீரென அவர், அமுதாவை மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கழற்றி தருமாறு கூறினார். அதற்கு அவர் மறுக்கவே, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, அவரின் கழுத்தில் வைத்து மிரட்டி நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து அமுதா வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இதுகுறித்த வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி பாலசுப்பிரமணியன் மேற்கொண்டார். பின்னர் அவர் தீர்ப்பு கூறினார். அதில் முகமதுகலீல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் முகமதுகலீலை வேலூர் மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.மோகன் ஆஜராகி வாதாடினார்.
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பொதுமக்கள் பலர் மனு அளிக்க வந்திருந்தனர். நுழைவு வாயில் அருகே ஒரு மூதாட்டி திடீரென மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று மண்எண்ணெய் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் அவரிடம் சோதனை செய்தபோது 2 பாட்டில்களில் மண்எண்ணெய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    அப்போது திடீரென அங்கிருந்த முதியவர் ஒருவரும் தன் மீது மண்எண்ணெய் ஊற்றினார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் முதியவரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது அந்த முதியவருக்கு ஆதரவாக அவரது கிராமத்தை சேர்ந்த சிலர் சூழ்ந்துகொண்டதால் போலீசார் பாட்டிலை பறிமுதல் செய்ய போராடினர். முதியவர் தரையில் உருண்டு கதறினார். தொடர்ந்து பாட்டிலை கைப்பற்றி அவர் மீது தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

    விசாரணையில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்ட இருவரும் கணவன்-மனைவி என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமும், உடன் வந்த அவரது தரப்பை சேர்ந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களுடன் வந்தவர்கள் ஒரே கோரிக்கைகளுக்காக வந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்த முதியவர் கூறியதாவது:-

    எனது பெயர் கேசவன் (வயது 68). எனது மனைவி பெயர் நாகம்மாள் (66). நாங்கள் இருவரும் பொன்னை அருகே உள்ள எஸ்.என்.பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 2 பேர் ராணுவ வீரர்களாகவும், ஒருவர் வெளிநாட்டிலும் வேலை செய்து வருகின்றனர்.

    நாங்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். எங்களது நிலம் மற்றும் பாலன் உள்ளிட்ட 5 பேருக்குசொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தை எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதை தட்டிக்கேட்டால் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து பொன்னை போலீசில் புகார் அளித்தோம். எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    எங்கள் நிலத்தை அரசு அவர்களுக்கு வழங்கிவிட்டதாக கூறி ஆக்கிரமிப்பு செய்கின்றனர். நடவடிக்கை எடுக்கக்கோரி நான் உள்பட அந்த 4 ஏக்கருக்கு சொந்தமான உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தோம் என்றார்.

    இதையடுத்து போலீசார் அவர்களின் மனுக்களை அதிகாரிகளிடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.
    ×