search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முருகனுக்கு தொடர்ந்து சிகிச்சை

    வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் செல்போனில் வீடியோ காலில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    தொடர்ந்து 24 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது உடல் மிகவும் சோர்வடைந்தது.இதனால் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஆனாலும் உடல் சோர்வு குறையவில்லை. அவருக்கு உணவு வழங்க வேண்டுமென டாக்டர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் எனக் கூறினர். அவர் மறுத்ததால் கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென முருகன் மிகவும் சோர்வடைந்தார். அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு ஈ.சி.ஜி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகளை செய்தனர். 30 நிமிடம் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

    இரவு 11 மணியளவில் முருகனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பொது வார்டில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரிக்கு வந்த போது உடல் மெலிந்து மிகவும் சோர்வடைந்த நிலையில் மெதுவாக முருகன் நடந்து சென்றார்.

    அவர் எப்போதும் காவி உடையில் சாமியார் போல காணப்படுவார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் கைதிகளுக்கான வெள்ளை நிற உடையை அணிந்திருந்தார்.

    இன்று காலையில் முருகனுக்கு மீண்டும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை பரிசோதித்தனர். அவர் ஓ.ஆர்.எஸ். கரைசல் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார்.

    இன்றும் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அடிக்கடி தியானம் செய்து வருகிறார்.

    வெளியில் உள்ள உணவு எதையும் நான் சாப்பிட மாட்டேன் தரமான பொருட்கள் கொடுத்தால் நானே சமைத்து சாப்பிடுவேன். வேறு யார் கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து முருகன் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். முருகன் சிகிச்சை பெறுவதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×