என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் பஸ்சில் மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது65). இவர் நேற்று காட்பாடியில் உள்ள ராணுவ படை வீரர் கேண்டீனில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார்.

    பின்னர் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் வந்து, தனியார் பஸ்சில் 4 கைப்பைகளுடன் ஏறினார். காட்பாடி குடியாத்தம் ரோடு அருகே பஸ் சென்றபோது அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே பத்மாவதி கத்தி கூச்சலிட்டார். குடியாத்தம் ரோடு பகுதியில் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் செயின் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து பத்மாவதி அணிந்திருந்த செயினை பறித்து சென்றது யார் என விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் பெய்த தொடர்மழையின் காரணமாக கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த மாதம் 12-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அபிஷேகநீர் வெளியே செல்லும் வழியாக அகழி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்தது. கோவில் வளாகத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீரில் நடந்து சென்றபடி பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலின் அம்மன் கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. அதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் மற்றும் அம்மன் தினமும் கோவில் ராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. அதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் மின்மோட்டார் மூலம் கோட்டை விளையாட்டு மைதானத்தில் வெளியேற்றும் பணி நடந்தது. ஆனால் அகழியின் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. அதனால் அனைத்து தண்ணீரையும் உடனடியாக வெளியேற்ற முடியவில்லை.

    இதற்கிடையே கோட்டை அகழி உபரிநீர் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னர் கால்வாய் வழியாக மீன்மார்க்கெட் பகுதியில் வெளியேற தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி பெரிய அளவிலான மின்மோட்டார்கள் மூலம் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் இரவு, பகலாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவில் வளாகத்தில் தேங்கி காணப்பட்ட தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள் ஆங்காங்கே காணப்பட்ட சகதியை அப்புறப்படுத்தி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தினார்கள். கோவில் வளாகத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் இன்று (சனிக்கிழமை) முதல் சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கோவிலில் வழக்கம்போல் சாமிக்கு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அகழியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்தால் அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    குடியாத்தம் அருகே காப்பு காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதையடுத்து தண்டோரா போட்டு கிராம பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப்பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது.

    குடியாத்தம் வனச்சரகத் தில் உள்ள காப்புக்காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

    அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது. தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த சிறுத்தைகள் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும் மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைன குண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் ஜோடி ஜோடிகளாக சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி பகுதியில் பாறைகள் மீது பெரிய சிறுத்தைகள் 2 படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட மாடு மேய்ப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

    அதேபோல் பரதராமி எடுத்த கொட்டாளம் செக்போஸ்ட் அருகே வனப்பகுதியில் 2 பெரிய சிறுத்தைகள் பகல் நேரங்களில் சாலையை கடந்து சென்றது. அதேபோல் தனகொண்டபல்லி காட்டுப் பகுதியிலும், கொட்டாரமடுகு வனப்பகுதியிலும் சிறுத்தைகள் சுற்றித்திரிந்து வருகிறது.

    இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்குதகவல் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் வனப்பகுதியில் 4 ஜோடி பெரிய சிறுத்தைகளும் குட்டிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலாவருவதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப்பாது காவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் கொட்டார மடுகு, கல்லப்பாடி முதலியார்ஏரி, கொட்டாரம், கொத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சில தினங்களாக தண்டோரா மூலம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் தங்களின் கால்நடைகளை இரவு நேரங்களில் பத்திரமாக வைத்திருக்கவும், தேவையில்லாமல் காப்புக்காடு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

    சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பெரும்பாலும் காப்புக் காட்டிற்க்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதால் சிறுத்தை நடமாட்டத்தால் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

    லத்தேரி அருகே மாந்தோப்புக்கு சென்ற பெண் பாம்பு கடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட கேசவாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 22). இவர், வீட்டின் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்றார். அப்போது பாம்பு கடித்துள்ளது.

    இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீதேவி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து பனமடங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.
    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா வருகிற 12-ந் நடைபெறவுள்ளது.

    இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிம்ம குளம் திறப்பு 11-ந் தேதி நள்ளிரவு திறக்கப்படுகிறது.

    சிம்மக்குளம், சூரிய தீர்த்தம் (பாலாறு) மற்றும் பிரம்மக்குளம் தீர்த்தம் ஆகியவற்றில் பெண்கள் நீராடி குழந்தை வரம் வேண்டி கோவிலில் இறைவன் முன்படுத்து உறங்கி ஆண்டு தோறும் சாமி தரிசனம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

    இந்த திருவிழாவையொட்டி அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11-ந் தேதி முதல் சிம்மக்குளம் உள்ளிட்ட நீர்நிலை தீர்த்தங்களில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் உள்ளதாலும், இந்த பெருந்தொற்று நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2 நாட்கள் திருவிழாவில் பொதுமக்கள் பொது தரிசனம் செய்ய இணையவழி மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

    பொது தரிசனம் செய்ய விருப்பமுள்ளவர்கள் www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

    மேற்படி தரிசனமானது 1 மணி நேரத்திற்கு 180 பக்தர்கள் வீதம் ஒரு நாளைக்கு 3000 பக்தர்கள் 6.30 முதல் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வயதானவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி ஒரு தவணையாவது செலுத்தாதவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் ஆகியவற்றை எடுத்துவர அனுமதி இல்லை. கோவிலில் தீர்த்தம், விபூதி மற்றும் குங்குமம் போன்ற எவ்வித பிரசாதங்களும் வழங்கப்படமாட்டாது.

    இந்து சமய அறநிலையத் துறை மூலம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நோய் பரவல் தொற்று தடுப்பதற்கான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஆற்காடு அருகே ஆசிரியர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி பிரபாவதி. இருவரும் நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயக்குமாரின் தாயார் இந்த வீட்டை பூட்டி விட்டு ஜெயக்குமாரின் மற்றொரு வீட்டுக்கு சென்று இரவு படுத்துத் தூங்கினார்.

    நேற்று அதிகாலை அவரின் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டுக்கு வந்து ஜெயக்குமார் பார்த்தபோது, மர்ம நபர் யாரோ பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி கால் கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த வாலிபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது35). இவர் நேற்றிரவு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது சரக்கு ரெயில் ஒன்று வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தோஷ் குமாரை எழுந்திருக்கும்படி கூச்சலிட்டனர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை.

    வேகமாக வந்த ரெயில் சந்தோஷ் குமார் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி ரெயில்கள் வருவதால் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடிக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆரணியில் வீடு புகுந்து நகை திருடியவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஆரணி:

    ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி செல்வி (வயது 54). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். செல்வியின் வீட்டில் நுழைந்த மர்மநபர் 4½ பவுன் தாலி சரடை திருடி சென்றனர். செல்வி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தருமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருடரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், வெங்கடேசன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ரூபன்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆரணி அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (44) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஆரணி முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் செல்வியின் வீட்டில் புகுந்து ஆகஸ்டு மாதம் 4½ பவுன் தாலி சரடை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். குமரேசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வேலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 29), தச்சுத்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும் பேச்சு குறைபாடுடைய 15 வயது மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அவருடைய பாட்டியிடம் கதறி அழுதபடி கூறி உள்ளார்.

    அதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து திருமாலை கைது செய்தார்.
    கணியம்பாடி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அடுக்கம்பாறை:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். வேண்டா (36) என்ற 2-வது மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். சாந்தமூர்த்தி தினமும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சாந்தமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேல்ஆலத்தூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இதன் வழியாக குடியாத்தம் நகருக்கு இப்பகுதியில் உள்ள மேல் ஆலத்தூர், கூடநகரம், அணங்காநல்லூர், பட்டு, கொதகுப்பம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வந்தனர்.

    மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குகிறது. இந்த தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை சார்பில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இரண்டு மோட்டார்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு அந்த தண்ணீரை வெளியேற்றி அருகில் உள்ள கிணற்றில் விடப்பட்டு வந்தது. தற்போது அந்த கிணறும் நிரம்பிவிட்டது.

    மழை இல்லாவிட்டாலும் சுரங்கப்பாதையின் இரு பக்கத்திலும் உள்ள சுவர்களில் இருந்து ஊற்று போன்று தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் தினமும் சில அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். நேற்று காலையில் சுமார் 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது.

    அதனால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டனர். தண்ணீரை வெளியேற்றி பம்ப் செய்யப்படும் மோட்டார்களில் ஒன்று பழுதாகி விட்டதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. தண்ணீரை வெளியேற்றினாலும் மீண்டும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணப்பெண் தனது பெற்றோரிடமும், மணமகனின் பெற்றோரிடமும் திருமணத்தை நிறுத்தும்படி கூறியதால் இரு தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊசூரை அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருதரப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பேசி முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடு நடந்தது. பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு குடும்பத்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணப்பெண் தனது பெற்றோரிடமும், மணமகனின் பெற்றோரிடமும் தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், அதனால் திருமணத்தை நிறுத்தும்படியும் கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த இரு தரப்பு பெற்றோரும் செய்வதறியாமல் திகைத்தனர்.

    அதேபோல் மணமகனும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இரு தரப்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக சமாதானம் செய்தும் மணப்பெண் ஏற்கவில்லை. இந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை, இனி என்னை கட்டாயப் படுத்தாதீர்கள் என்று உறுதியாக கூறினார். இதனால் வேறுவழியின்றி இருதரப்பினரும் சுமூகமாக பேசி திருமணத்தை நிறுத்தினர்.


    ×