search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் வற்றி உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் வற்றி உள்ளதை படத்தில் காணலாம்.

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று முதல் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

    வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் பெய்த தொடர்மழையின் காரணமாக கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த மாதம் 12-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அபிஷேகநீர் வெளியே செல்லும் வழியாக அகழி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்தது. கோவில் வளாகத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீரில் நடந்து சென்றபடி பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    கடந்த மாதம் 29-ந் தேதி கோவிலின் அம்மன் கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. அதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் மற்றும் அம்மன் தினமும் கோவில் ராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. அதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

    ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் மின்மோட்டார் மூலம் கோட்டை விளையாட்டு மைதானத்தில் வெளியேற்றும் பணி நடந்தது. ஆனால் அகழியின் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. அதனால் அனைத்து தண்ணீரையும் உடனடியாக வெளியேற்ற முடியவில்லை.

    இதற்கிடையே கோட்டை அகழி உபரிநீர் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின்னர் கால்வாய் வழியாக மீன்மார்க்கெட் பகுதியில் வெளியேற தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி பெரிய அளவிலான மின்மோட்டார்கள் மூலம் கோவில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் இரவு, பகலாக தொடர்ந்து வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவில் வளாகத்தில் தேங்கி காணப்பட்ட தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் ஊழியர்கள் ஆங்காங்கே காணப்பட்ட சகதியை அப்புறப்படுத்தி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தினார்கள். கோவில் வளாகத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் இன்று (சனிக்கிழமை) முதல் சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கோவிலில் வழக்கம்போல் சாமிக்கு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அகழியில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்தால் அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×