என் மலர்
வேலூர்
சென்னை திருநின்றவூரில் இருந்து இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று ரேணிகுண்டாவுக்கு சென்றது.
காலை 5.30 மணிக்கு அரக்கோணம் அருகே உள்ள மோசூர் என்ற இடத்தில் சென்றபோது ரெயிலில் 22-வது பெட்டி தடம் புரண்டது. உடனடியாக ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட சரக்கு ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
5 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்தது. சரக்கு ரெயில் தடம்புரண்ட இடத்தில் கூடுதலாக தண்டவாள பாதைகள் உள்ளன. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.
அரக்கோணம் பகுதியில் ரெயில் பெட்டிகள் அடிக்கடி தடம் புரண்டு வருகிறது. மேலும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் ஓட்டேரியில் உள்ளது ஆதி திராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்களுக்கான விடுதி இயங்கி வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 பேர் தங்கி உள்ளனர்.
இதில் கடந்த 10 ஆண்டுகளாக வார்டனாக பணியாற்றி வந்தவர் சண்முகம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் மதுமிதா ஆதிதிராவிடர் விடுதியில் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது உடல் நலம் சரி இல்லாததால் விடுதியின் வார்டன் வெளியே சென்றுள்ளார்.
விடுதியில் இல்லை என்பதால் சண்முகத்தை இடை நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அருகில் உள்ள பாலிடெக்னிக் விடுதியின் வார்டனாக கருணாநிதியை தற்காலிகமாக நியமித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்கும் படி கூறினர். நேர்முக உதவியாளரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது அலுவலகத்தில் இருந்த மாணவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் டீ கொடுத்து உபசரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.
வேலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 220 வங்கிகளில் பணியாற்றும் 1500 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அண்ணாசாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி அருகே வங்கி ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இன்று 2- வது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் காசோலைகள் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டன. ஆன்லைன் சேவைகள் வழக்கமாக நடைபெறுகிறது. சில இடங்களில் ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து போனது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது. 2 நாட்களில் சுமார் ரூ.650 கோடி ரொக்கம் மற்றும் காசோலை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம் பகுதியில் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரன், சரவணன், சக்கரவர்த்தி, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் இன்று காலையில் குடியாத்தம் அடுத்த பரவக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் நான்கு சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள் மேலும் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்தன இதனையடுத்து போலீசார் அந்த நாட்டு வெடிகுண்டுகளையும் அதற்கான மூலப் பொருட்களையும் பத்திரமாக கொண்டு வந்தனர்.
மேலும் அங்கிருந்து நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீ.கோட்டா அடுத்த ஏழுசுத்தி கோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் நடராஜன் (வயது 35) என்பதும் அவருக்கு மாமியார் வீடு குடியாத்தம் அடுத்த பரவக்கல் அடுத்த கிடங்குராமாபுரம் என தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் வீடு எடுத்து தங்கி நடராஜன் கூலி வேலை செய்து வந்ததும் நிலங்களில் காவல் காக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அப்போது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குடியாத்தம் தாலுகா போலீசார் நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் சுவரில் துளையிட்டு சுமார் 15 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து இரவு வரை கணக்கெடுக்கப்பட்டது. மேலும் வேலூர் மாநகர் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. மாநகர எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் வேலூரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஸ்பிரே மூலம் அடித்து மறைத்துள்ளனர்.
நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன் அங்கு தொங்க விடப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை மட்டும் குறிவைத்து எடுத்துள்ளான்.
இந்த சம்பவத்தில் லாக்கரில் இருந்த சுமார் 70 கிலோ தங்கம், வைர நகைகள் தப்பியுள்ளது.
வடமாநில கொள்ளையர்கள் புகுந்தால் எந்த நகையையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
மொத்தத்தையும் அள்ளிச்சென்று விடுவார்கள். இந்த சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்காது என போலீசார் கருதுகின்றனர்.
மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘பிரபல தங்க நகைக்கடையின் மொத்த தங்கம், வைர நகைகள் இருப்பு 90 கிலோ. இதில், 70 கிலோ அளவுக்கு லாக்கரில் வைத்து நேற்று முன்தினம் இரவு பூட்டியுள்ளனர். மீதமிருந்த 20 கிலோ தங்க நகைகள் ஷோகேஸ்களில் அப்படியே விட்டுள்ளனர்.
நள்ளிரவில் கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளையிட்டு பின்னர் ஏ.சி. துளையின் வழியாக உள்ளே புகுந்த ஒரு மர்ம நபர், தரைத்தள ஷோகேஸ் பகுதிக்கும் பக்கவாட்டு சுவருக்கும் இடையில் இருந்த 1 அடி அகலம் இடைவெளியில் நுழைந்துள்ளார்.
அங்கிருந்து தரைத்தளத்தின் பால் சீலிங் பகுதிக்கு சென்றவர், அந்த பால் சீலிங்கை உடைத்து உள்ளே குதித்துள்ளார்.
பின்னர், ஷோகேஸ்களில் இருந்த விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகளை மட்டும் கொள்ளையடித்து தப்பியுள்ளார். லாக்கரை உடைக்காததால் அதிலிருந்த 70 கிலோ தங்கம், வைர நகைகள் தப்பியுள்ளது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடைக்குள் கொள்ளையன் ஒருவர் மட்டுமே புகுந்துள்ளார். அவருக்கு உடந்தையாக வந்த கொள்ளை கும்பல்கள் வெளியில் நின்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நள்ளிரவு 1 மணி அளவில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து அவர் ரெயில் மூலம் பெங்களூரு சென்றிருக்கலாம். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற 3 ரெயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற நள்ளிரவு 1 மணியில் இருந்து 2 மணிக்குள் எத்தனை வாகனங்கள் தோட்டப்பாளையம் சாலையில் கடந்துள்ளது என்ற விவரங்களையும் சேகரித்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
மேலும் சந்தேகப்படும்படியான பெங்களூரு கொள்ளையனையும் அவருக்கு உடந்தையாக இருந்த கும்பலை பிடிக்கவும் தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வேலூர் மாநகரில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வேலூர்- காட்பாடி ரோட்டில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே 4 தளங்களை கொண்ட கட்டிடத்தில் பிரபலமான நகைக்கடை உள்ளது.
தரைத்தளத்தில் தங்கம், வைர நகைகளும், முதல் தளத்தில் வெள்ளிப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன. 2-வது தளத்தில் நகைக்கடை ஊழியர்கள் தங்குமிடம் உள்ளது. 3 மற்றும் 4-வது தளத்தில் தனியார் மருத்துவமனையின் ஆய்வகம் செயல்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் ஊழியர்கள் நகைக்கடையை பூட்டிச் சென்றனர். இரவில் கடையின் வெளியே காவலர்கள் பணியில் இருந்தனர்.
நேற்று காலை 9.30 மணி அளவில் ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த நகை பெட்டிகள் திறந்து கிடந்தன. மேலும், ஷோகேசில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. ஆனால் பெரும்பாலான நகைகள் அங்கேயே இருந்தது. மேலும் கடையின் பின்புறத்தில் ஒருநபர் செல்லும் வகையில் சிறிய அளவிலான துளையும் இருந்தது. இதனால் கடையில் கொள்ளை நடந்திருப்பதை அறிந்த ஊழியர்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் மற்றும் போலீசார் அங்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நகைக்கடையின் பின்புறம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

டி.ஐ.ஜி.பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நகைக் கடை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வருவதும், அங்கிருந்த கேமராக்களில் ஸ்பிரே அடித்ததும் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை நடந்த நகைக்கடை இருக்கும் காட்பாடி சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அவற்றையும் அருகில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடையில் 15 கிலோ தங்க நகைகளும், ½ கிலோவைர நகைகளும் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடி ஆகும். தொடர்ந்து கொள்ளை போன நகைகளின் துல்லிய மதிப்பீடு குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர்.
காட்பாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தில்ஷாத், இளங்கோவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் குடியாத்தம் காட்பாடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.
இது பற்றிய தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேரணாம்பட்டு:
பேர்ணாம்பட்டு பகுதியில் கடந்த 6 மாதங்களாக பூட்டிய வீடுகளை ஒரு கும்பல் நோட்டமிட்டு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்று கைவரிசை காட்டி வந்தனர்.
பேரணாம்பட்டு பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிக்கந்தர், பரிதா பானு, முத்தம்மா, துபாய் லட்சுமி ஆகிய 4 பேர் வீடுகளில் அடுத்தடுத்த நாட்களில் 17 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சத்து 26 ஆயிரமும் கொள்ளை போனது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 10-ந்தேதி பேர்ணாம்பட்டு சேரன் வீதியில் சாந்தி, ஆனந்தன் ஆகிய வீடுகளில் தங்க நகைகளும், காமராஜர் நகரில் சுந்தரி, அமுதா ஆகியோரது வீடுகளில் 5 பவுன் நகைகளும் பாத்திமா வீட்டில் 3 பட்டுப்புடவைகளும் 3 செல்போன்களும் டிசம்பர் 6-ந்தேதி கொத்தப்பல்லி கிராமத்தில் யுவராஜ் என்பவரது வீட்டில் 8 பவுன் தங்க நகைகளும், ஒரு எல்இடி டிவி, ரூ.13, ஆயிரமும் திருடுபோனது.
இந்த தொடர் திருட்டு சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட தனித்தனி புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் 3 பேர் ஒரு பைக்கில் வந்தனர். முன்னுக்கு பிரணாக கூறியதால் அவர்களை பிடித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு உதயேந்திரத்தை சேர்ந்தவர் சுவேல் (வயது 26). பேர்ணாம்பட்டு டவுன் குட்டைப் பகுதியை சேர்ந்த மணி (22) பேரணாம்பட்டு சேரன் வீதியை சேர்ந்த இர்பான் அகமது (22) என்பது தெரியவந்தது.
3 பேரும் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதில் சுவேல் மீது மட்டும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் 14-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வந்து மீண்டும் தனது கைவரிசையை காட்டி போலீசிடம் சிக்கியுள்ளான்.
திருடிய தங்க நகைகளை கொடுத்து மது பாட்டில்கள் வாங்கி ஜாலியாக ஊர் சுற்றியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து திருடிய மொத்தம் 10 பவுன் தங்கநகைகள் எல்இடி டிவி, ஆந்திரா பதிவெண் கொண்ட பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா தொற்று 2019-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் இன்று வரை 38 பேருக்கு ஒமைக்ரான் பரவியுள்ளது. தடுப்பூசி இதனை கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியை பொருத்தவரை சிம்பன்ஸியில் இருந்து பெறப்பட்ட வீரியம் குறைக்கப்பட்ட அடினோ வைரஸ் மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்து அதனை மனித உடலுக்குள் செலுத்தும் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி செயலிழந்த கொரோனா வைரஸ் தீ நுண்மியை மருத்துவ நுட்பத்தில் உரிய மாற்றங்கள் செய்து உடலில் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவ குழுவினர் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.
கோவிஷீல்டு கோவேக்சின் 2 தடுப்பூசிகளையும் மாறி மாறி செலுத்தி கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது இந்த 2 தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தி குறித்தும் ஏற்கனவே தடுப்பூசி போட்டு அவர்களுக்கு பூஸ்டர் 3-வது தடுப்பூசி தேவையா என்பது குறித்து வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ககன்தீப் கங் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 200 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திய தன்னார்வலர்கள் 200 பேர் தேவைப்படுகின்றனர்.
இதுபற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தன்னார்வலர்கள் எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் ஆராய்ச்சிக்கு ஒத்துழைத்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்பது நமக்குத் தெரியாது, ஃபைசர் தடுப்பூசி 2 தவணைகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு ஆன்ட்டிபாடியை நியூட்ரலைஸ் செய்வதற்கான தன்மை 40 விழுக்காடு குறைவாக உள்ளது.
ஏனைய தடுப்பூசிகளின் செயல்பாடுகளிலும் பெரிய வித்தியாசம் இருக்க காரணம் இல்லை. முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் இவை அனைத்தும் ஆய்வக தரவுகள்தான். இந்த தொற்று, தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களைத் தாக்கும்போதுதான் தடுப்பூசியின் முழுமையான செயல்பாடுகள் தெரியவரும்.
ஒமைக்ரான் தொற்று விகிதம் மிக அதிகம், இது டெல்டா வகை தொற்றைவிட அதிகமாக இருக்கும்.
இத்தொற்று எதிர்ப்புச் சக்தியை உடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாலும் பரவக்கூடிய தன்மை அதிகம் உள்ளதாலும் தொற்று விகிதம் அதிகமாகவுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களையும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களையும் மீண்டும் அதிகளவில் தாக்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைவான ஆக்சிஜன் தேவைகளை கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்.
பொதுவாக ஓட்டலில் ஆண் தொழிலாளர்கள் தான் பரோட்டா போடுவார்கள். பரோட்டாவுக்கு மாவு பிசைவது மற்றும் மாவை கல்லில் அடிப்பது என்பது கடினமான வேலையாகும். இதனால் ஆண் மாஸ்டர்கள் மட்டுமே இதனை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வகையில் வேலூரில் பெண் ஒருவர் பரோட்டா மாஸ்டராக களத்தில் இறங்கியுள்ளார்.
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி துர்கா (வயது28). பெண் குழந்தை உள்ளது.
துர்காவுக்கு திருமணமான 1½ ஆண்டில் வடிவேல் இறந்துவிட்டார். இதனால் தன்னுடைய மகளுக்காக ஓட்டலில் வேலை செய்ய முடிவு செய்தார்.
ஏற்கனவே துர்காவின் தந்தையும் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் வேலூர்- காட்பாடி ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஓட்டலில் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.
திருமணமான பிறகு 1½ ஆண்டுகள் ஓட்டலுக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் வடிவேல் திடீரென இறந்து விட்டதால் வறுமையில் வாடினார்.
மீண்டும் குடும்ப சூழ்நிலையை கருதியும், தனது மகளை நன்றாக படிக்க வைத்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதே ஓட்டலுக்கு மீண்டும் வேலைக்கு சென்றார்.
துர்கா ஓட்டலில் சுறுசுறுப்பாக வேலை செய்வதை கண்ட ஓட்டல் மேனேஜர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரோட்டா போடும் பணியை அவருக்கு கொடுத்தார்.
துர்கா பரோட்டாவிற்கு மாவு பிசைவது, பரோட்டா போடுவது என அனைத்து வேலையும் கவனித்து அசத்தி வருகிறார்.
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை பரோட்டா போடும் பணியில் ஈடுபட்டு வரும் அவர் இடையிடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது உள்ளிட்ட வேலையையும் கவனிக்கிறார்.
இவர் போடும் பரோட்டாவும் தனி சுவையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.






