search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கையில் ஸ்பிரேயுடன் வருவதையும், கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடிப்பதையும் படத்தில் காணலாம்.
    X
    கையில் ஸ்பிரேயுடன் வருவதையும், கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடிப்பதையும் படத்தில் காணலாம்.

    நகைக்கடை கொள்ளை: முகமூடி அணிந்த கொள்ளையன் உருவப்படம் சிக்கியது

    வேலூரில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், முகமூடி அணிந்த கொள்ளையனின் உருவப்படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. கொள்ளை சம்பவத்தின் போது, கடையில் லாக்கரில் இருந்த 70 கிலோ நகைகள் தப்பின.
    வேலூர்:

    வேலூர்-காட்பாடி செல்லும் சாலையில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே பிரபலமான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இந்த கடையின் பின்புறத்தில் சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

    15 கிலோ தங்க நகைகள், அரை கிலோ வைரநகைகள் கொள்ளைபோனது. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில், நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரின் உருவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த உருவப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், நகைக்கடைக்குள் வரும் நபர் முகத்தில் சிங்கத்தின் படம் பதித்த முகமூடி மற்றும் தலையில் விக் (தலைமுடி) அணிந்துள்ளார். கையில் பெயிண்ட் ஸ்பிரேயும் வைத்துள்ளார். கொள்ளையன் தனது அடையாளத்தை மறைக்க இவற்றை பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

    கொள்ளையின்போது, அந்த ஆசாமி ஷோகேஸ்களில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை மட்டுமே கொள்ளையடித்து தப்பியுள்ளார். கடையில் உள்ள லாக்கரை அவர் உடைக்கவில்லை. இதனால் லாக்கரில் இருந்த 70 கிலோ தங்க, வைர நகைகள் தப்பியது தெரியவந்தது.

    இதற்கிடையே நேற்றுமுன்தினம் நகைக்கடையின் தென்பகுதியில் உள்ள காலி இடத்தில் போலீசாரால் விக் ஒன்றை கைப்பற்றியிருந்தனர். அந்த விக் கொள்ளையன் பயன்படுத்தியது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த ‘விக் மேன்’ யார்? என்பதை கண்டுபிடிக்க வேலூர் நகரில் முகமூடி விற்பனை செய்யும் கடைகள், விக் விற்பனை செய்யும் கடைகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×