என் மலர்
வேலூர்
- குறை தீர்வு கூட்டம் நடந்தது
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் காட்பாடி செங்குட்டையை சேர்ந்த பாரதி (வயது 43). என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்று சென்ற பாரதி, மனு அளிக்க கலெக்டர் அருகே சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து, எழுப்பினர். காலை முதல் பாரதி சாப்பிடாமல் இருந்ததால் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை ஏற்று, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனையடுத்து பாரதி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- கலெக்டரிடம் பொதுமக்கள் வேண்டுகோள்
- தூய்மை பணி மேற்கொள்ள உத்தரவு
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணையார் திப்பை மலைப்பகுதிக்கு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணிக்க கொல்லை - அப்புக்கல் இடையே சாலை வசதி செய்து தர வேண்டும். ஏரிக்கொல்லை கிராமத்தில் இருந்து அணைக்கட்டுக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் நேரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து யாதவபுரம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள திடக்கழிவுகளை பார்வையிட்டார், அதனை உடனடியாக அகற்றி கிராமத்தை தூய்மை பணி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தை பார்வையிட்ட கலெக்டர் தொழிலாளர்களிடம், பணிக்கான ஊதியம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர்,சாந்தி, அப்புக்கல் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சபரி சோபனா உடன் இருந்தனர்.
- 73 எந்திரம் ஒதுக்கீடு
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழ்நாடு அரசுவேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவு பணிக ளுக்கு 2-வது தவணையாக பொதுப்பிரிவினருக்கு 53, ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 20 என்று மொத்தம் 73 பவர்டில்லர் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறு,குறு, பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகிய விவசாயிகளுக்கு 50 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 40 சத வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
2022-23-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் முன்னுரிமை அடிப்படையில் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
பவர்டில்லர் எந்திரம் பெற விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா. அடங்கல், சிறு, குறு விவசாய சான்று, ஆதார் அட்டை நகல், பவர்டில்லர் எந்திரத்தின் விலைப்புள்ளி, வங்கிக்கணக்கின் முதல் பக்கம் மற்றும் ஆதிதிராவிடர், பழங் குடியின விவசாயிகளாக இருப்பின் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் வேலூர் தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பாலிடெக்னில் கல்லூரி எதிரே உள்ள வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் உத்தரவு
- பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும் என அறிவுரை
வேலூர்:
வேலூர் முஸ்லிம் அரசு பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
அவர் பேசியதாவது:-
பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று புத்தாண்டாக கருதி மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும்.
மாணவர்கள் ஒரு குறிக்கோளை வைத்து படிக்க வேண்டும். மாணவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை சரிவர கவனிக்காதது தான் தோல்விக்கு காரணம்.
மாணவர்கள் ஒவ்வொரு வரும் தினமும் இரண்டு நிமிடம் ஒதுக்கி மனசாட்சி படி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
100-க்கு 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது இல்லை நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.
10 ஆண்டுகள் கழித்து நாம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்க ளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், பொது அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் தொடங்கியது. 4 லட்சத்து 44 ஆயிரம் பாட புத்தகங்கள், 99 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்கள் சிரமம் அடைந்து வந்ததாக புகார் வந்தது.
மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலே அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை பொது மேலாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் 10 நாட்களில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்து தரப்படும்.
வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெற்றோரை இழந்து குழந்தை தவிப்பு
- ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(27),மேஸ்திரி.
இவரது மனைவி பவித்ரா(25) இருவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பவித்ரா சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை பவித்ரா வீட்டில் இருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பிரம்மபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காதல் மனைவி திடீரென இறந்ததால் ராஜசேகர் அதிர்ச்சி அடைந்தார். பைக்கில் பிரம்மபுரம் தண்வாளம் அருகே சென்றார். அப்போது வந்த சகரக்கு ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் பவித்ரா மரணம் தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெற்றோரை இழந்த 2 வயது குழந்தை தவித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை
- குறியீடு கிடைக்காததால் அதிகாரிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைப்பகுதியில் குறியீடு கற்கள் கிடைக்காததால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலைப்பகுதியில் உள்ள அத்தி மரத்துக் கொல்லை பகுதியை சேர்ந்த விஜி - பிரியா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா.
இவர் கடந்த 27-ந்தேதி இரவு பாம்பு கடித்த நிலையில் போதிய மருத்துவ வசதி மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை சாலை வசதி இல்லாததால் மலைப்பகுதிக்கு கையால் சுமந்து நடந்தே செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆய்வு செய்தார்.
இதனையடுத்து அல்லேரி மலைப்பகுதிக்கு சாலை அமைக்க அளவீடு பணி நடந்து. மேலும் அனுமதி கேட்டு மத்திய அரசின் பர்வேஸ் போர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கு, வனத்துறைக்கு மாற்று இடம் வழங்க அல்லேரி மலை பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பெரிய பாறைகள் மற்றும் மரங்கள் இருப்பதால் இடத்தை துல்லியமாக அளவீடு செய்ய முடியவில்லை.
எனவே வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்ப பிரிவு குழுவின் உதவியோடு ஜி.பி.எஸ். கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்க ழகத்தின் நிபுணர் குழுவினர், ஜி.பி.எஸ். கருவியுடன் அல்லேரி மலையில் அளவீடு பணியில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் நெட்வொர்க் வசதி இல்லாததால், அளவீடு செய்யும் பணி செய்ய முடியவில்லை. இதனால் அதிகாரிகள் திரும்பி வந்துவிட்டனர்.
3 நாட்களாக தேடியும் அரசாங்க குறியீடு கற்கள் கிடைக்காததால் நிலத்தை அளவிடும் பணியினை தொடர முடியவில்லை. குறியீடு கிடைக்காததால் நிலையில் ஏமாற்றுத்துடன் அதிகாரிகள் திரும்பினர்.
மேலும் வனத்துறைக்கு ஒப்படைக்க தேவைபடும் நிலத்தை அருகில் உள்ள பீஞ்சமந்தை உள்ளிட்ட குக்கிராமங்களில் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கலெக்டர் பாட புத்தகங்களை வழங்கினார்
- மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி திறந்த முதல் நாளிலே மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டன. விடுமுறை காலத்தில் அவர்கள் தேர்வில் பெற்ற தேர்ச்சியையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுவிட்டது.
கடந்த மாதம் இறுதியில் வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கி, இந்த மாதம் தொடக்கத்தில் உக்கிரத்தை காட்டியது.
தமிழ்நாட்டில் வேலூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது. அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பு தேதி 2-வது முறையாக தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியானது.
அந்த வகையில், 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் வேலூர் மாவட்டத்தில் 1,266 பள்ளிகள், திருவண் ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 55 பள்ளிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 980 பள் ளிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,168 பள்ளி. கள் என 4 மாவட்டங்க ளில் 5 ஆயிரத்து 469 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் கடந்த சில நாட்களாக வகுப்பறைகளை முழு அளவில் தயார்படுத்தும் பணிகள் நடைபெற்றது. கழிவறைகள், குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை உட் பட 4 மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்தனர்.
பள்ளிகளில் நீண்ட இடைவெளிக்கு பின்பு சந்தித்த தனது சக மாணவர்களை அரவணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அனைத்துப் பள்ளிகளிலும் நேற்று முதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அதன்படி வேலூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாட புத்தகங்களை வழங்கினார். அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று மாணவ சேர்க்கை விறுவிறுப்பாக நடந்தது.
- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.
- சென்னைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 4½ நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.
இந்தப் பணிமனையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை சென்னைக்கு காலை 5 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல காலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய பஸ் பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பஸ்சை இயக்க வேண்டிய பேரணாம்பட்டு அடுத்த வேப்பனேரியை சேர்ந்த டிரைவர் தேவராஜ். பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்டக்டர் பாபு வரவில்லை.
அவர்களை கிளை மேலாளர் வெங்கடேசன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர்கள் அழைப்பை எடுக்காததால் சக பணியாளர்கள் பஸ்சை இயக்கினர்.
இந்த நிலையில் இன்று காலை தேவராஜ், பாபு பணிக்கு வந்தனர். அப்போது சென்னை பஸ்சை இயக்க சென்றனர்.
தேவராஜும், பாபுவும் அந்த பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மண்ணெண்ணெய் எடுத்து வந்து தீக்குளிக்க போவதாக கூறி பஸ்சின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டரிடமும், டிரைவரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
உங்களுடைய பணி குறித்து ஏற்கனவே நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது நீங்கள் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பஸ்சை இயக்க வேண்டும் என விளக்கி கூறினர்.
இதில் சமாதானம் அடைந்த டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து சென்றனர்.
இதனால் இன்று காலை 5 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 4½ நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்தச் சம்பவம் பணிமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலூரில் அமித்ஷா பேசியபோது பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.
- இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்தனர். இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி மாநகர் முழுவதும் மிகப்பெரிய பேனர், கொடி உள்ளிட்டவை வைத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிக்கொண்டிருந்த போது, மேடை அருகே இருந்த பெரிய பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்தது. பேனர் அருகே மக்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
- காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 26). இவர் மின்வாரிய ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல் (28). ஐடி கம்பெனி ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தனித்தனியாக இவர்களின் செல்போனை தொடர்பு கொண்டார்.
அவர் பெங்களூருவை சேர்ந்த குமார் என்றும் ரூ.500 நோட்டுகளை கொடுத்தால் இரட்டிப்பாக ரூ.2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணம் வீட்டில் இருந்த நகைகள் அடகு வைத்தும் மற்றும் நண்பர்கள் உறவினர்களிடமிருந்து கடனாக பணத்தை பெற்றனர்.
ஞானபிரகாஷ் தான் வைத்திருந்த ரூ.25 லட்சம் பணத்துடன் கடந்த 4-ந் தேதி வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த குமார் ஞானபிரகாஷிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது காரில் இருந்து போலீஸ் உடையில் இறங்கிய நபர் உட்பட 4 பேர் நாங்கள் அனைவரும் போலீஸ்காரர்கள்.
உங்களிடம் உள்ளது ஹவாலா பணமா என சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ஞானபிரகாசை காரில் ஏற்றுக்கொண்டு காஞ்சிபுரத்திற்கு சென்றனர். காஞ்சிபுரம் அருகே கார் சென்றபோது ஞானப்பிரகாசத்தை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்னை நோக்கி சென்றுவிட்டனர்.
இதேபோல் முகமது ஜமீல் அன்று மாலையே வேலூர் மாங்காய் மண்டி அருகே ரு.15 லட்சத்துடன் காத்திருந்தார். அப்போது காரில் போலீஸ் உடையில் வந்த நபர்கள் முகமது ஜமீனிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு காரில் சென்றனர்.
பின்னர் முகமது ஜமீல் வடக்கு போலீஸ் நிலையம் வந்து விசாரித்த போது பணத்தை பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ் என தெரியவந்தது.
இதுகுறித்து ஞானபிரகாஷ் மற்றும் முகமது ஜமீல் ஆகியோர் வடக்கு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.40 லட்சம் மோசடி செய்தது பெங்களூருவை சேர்ந்த டேனியல், அருண்குமார், அம்ரோஸ், கிருஷ்ணகிரியை சேர்ந்த கண்ணன் என தெரியவந்தது. அவர்களை பெங்களூரில் மடக்கி பிடித்தனர்.
பிடிபட்டவர்களில் டேனியல் என்பவர் போலீஸ் சீருடையில் வந்து மிரட்டியது தெரிய வந்தது
போலீசார் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் பொன்னையை சேர்ந்த ஒருவர் பணம் பறிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ 2.30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.
- காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.
- காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டது என்றார் அமித்ஷா.
வேலூர்:
வேலூரில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பெயர் எடுத்துள்ளவர் அண்ணாமலை.
தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு சேர்த்தவர் பிரதமர் மோடி.
காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்தி பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.
திருக்குறளை 23 மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழிசெய்திருக்கிறார் பிரதமர்.
9 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு 95,000 கோடி ரூபாய்தான் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிக்காக 58,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.
6 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது
தமிழகத்தில் குடிநீர் இணைப்பு இல்லாத ஊர்களில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள்ளது.
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சார்பில் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் படிக்கத் தொடங்கி விட்டனர்.
திமுக 18 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கூட கொண்டு வரவில்லையே, ஏன்?
தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு 62 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி சுற்று பகுதி முழுவதும் ராட்சத பலூன்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதற்காக சென்னை பெங்களூரு 6 வழிச்சாலை அருகே உள்ள கந்தனேரியில் பிரம்மாண்ட மேடை அமைத்துள்ளனர்.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே சிங், மத்திய தகவல் தொடர்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று மதியம் ஹெலிகாப்டர் மூலமாக சென்னையிலிருந்து வேலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.
அங்கிருந்து 6 வழிச்சாலை வழியாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்கிறார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் 6 வழிச்சாலை வழியாகவே வேலூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுவதையொட்டி வேலூரில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கார் வேன்களில் கந்தனேரி மைதானம் அருகே தொண்டர்கள் வந்து இறங்கினர். மேலும் தொண்டர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர்.
விரிவாக்க பணிகளுக்குப்பிறகு அமித்ஷா வருகை தரும் ஹெலிகாப்டர் தான் முதன் முதலாக வேலூர் விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது. இதனால் சென்னை-வேலூர் விமான நிலையம் வரை ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் நேற்று மாலை நடந்தது.
சென்னையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 45 நிமிடங்களில் வேலூர் வந்தடைந்தது. அப்போது வேலூர் விமான நிலையத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஹெலிகாப்டர் தரை இறங்கியது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது.
அமித்ஷா செல்லும் பாதைகளில் 6 வழிச்சாலையில் வல்லண்டராமம் கிங்கினி அம்மன் கோவில் கந்தனேரி சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.
மேலும் பொதுக்கூட்டம் முடிந்ததும் அமித்ஷா கார் செல்ல வசதியாக 6 வழிச்சாலையில் இருந்த தடுப்பு சுவர் அகற்றப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா வருகை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கந்தனேரி பொதுக்கூட்ட மைதானத்தில் மேடையை சுற்றிலும் மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள மலை பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 4 போலீஸ் சூப்பிரண்டுகள் முகாமிட்டுள்ள நிலையில் கூடுதலாக 2 போலீஸ் சூப்பிரண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும் கந்தனேரி சுற்று பகுதி முழுவதும் ராட்சத பலூன்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் வரை அமித்ஷா பயணம் செய்யும் சாலையை ஒட்டி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை உடனடியாக போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டுமென அந்த பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறுகளை வழங்கினார்.
அமித்ஷா வருகையால் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.






