என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டதால் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான தடையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மற்ற நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து அனைத்தும் விடப்பட்டு உள்ளதாலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு வருவதாலும் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். பவுர்ணமி நேற்று மாலை 6.41 மணிக்கு தொடங்கி இன்று (சனிக்கிழமை) இரவு 8.45 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும் பவுர்ணமி நேற்று மாலையில் தொடங்கியதால் நேற்று பகலில் ஏராளமானோர் தனித் தனியாக கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் காரில் சென்றவாறு ஆய்வு செய்தார். பின்னர் மதியத்திற்கு மேல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் வெளியூர் பக்தர்கள் மட்டுமல்லாது உள்ளூர் பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையொட்டி திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். பவுர்ணமி நேரத்தில் கிரிவலப் பாதையில் நேற்று மக்கள் யாரும் கிரிவலம் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
    திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் 2 கிரில் சிக்கன் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று சிக்கனை சாப்பிட தொடங்கி உள்ளார். சிக்கனை அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது அதில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு கொண்டு சென்று காண்பித்து உள்ளார். கடையின் உரிமையாளர் உடனடியாக சிக்கனை கீழே கொட்டி விட்டு, கிரில் சிக்கனுக்காக அவர் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து இதை பெரிது படுத்த வேண்டாம் என்று சமாதானம் செய்து அனுப்பி உள்ளார்.

    இந்த தகவல் வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் கேட்ட போது, இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் இன்று (நேற்று) விடுமுறை, நான் வெளியே இருக்கிறேன் என்று பதில் அளித்தார். பொதுமக்கள் வாங்கும் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதா என்றும், பாதுகாப்பானதா என்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணி மேற்கொண்டு பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    திருவண்ணாமலையில் ஆட்டோவில் தவற விட்ட 10 பவுன் நகையை மீட்ட போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை மூலக்கரை சேர்ந்தவர் ரேவதி (வயது 32). இவர், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாநகருக்கு ஆட்டோவில் சென்றார். அப்போது ரேவதி தன் கையில் வைத்திருந்த பையை அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் வைத்தார்.

    வீட்டுக்கு சென்ற பின்னர் பையை ஆட்டோவில் தவறவிட்டது அவருக்கு தெரியவந்தது. அதில் 10 பவுன் நகைகள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆட்டோவை பல இடங்களில் தேடி பார்த்தார். எனினும் ஆட்டோவை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதைத்தொடர்ந்து ரேவதி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர், ஏட்டு குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில், ரேவதி பயணம் செய்த ஆட்டோ சலீம் என்பவர் ஓட்டியது தெரியவந்தது. சலீமிடம் போலீசார் விசாரணை செய்ததில் பையை, ரேவதி தவறவிட்டது அவருக்கு தெரியவில்லை. நகைப்பை ஆட்டோ இருக்கைக்கு பின் இருந்ததை சலீம் மற்றும் போலீசார் பார்த்தனர்.

    அதைத் தொடர்ந்து பையை போலீசார் எடுத்து அதில் இருந்த நகையை மீட்டு ரேவதியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசாருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் ரேவதி நன்றி தெரிவித்தார்.
    வாணாபுரம் அருகே முன்விரோத தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    வாணாபுரம்:

    வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70), விவசாயி. அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பாக்யராஜ் (38), தொழிலாளி. இவர்களுக்குள் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாகவும், சம்பவத்தன்று ஏழுமலைக்கும், பாக்கியராஜுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு ஏழுமலையை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போளூர் அருகே குளிக்க சென்ற அக்காள்-தங்கை குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசிப்பவர் ஸ்ரீபக்சிங். வடமாநிலத்தை சேர்ந்த இவர் கூர்காவாக உள்ளார். இவருக்கு 7 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உண்டு. அவர்களில் சாந்தி (வயது 11) பெரியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், பகவதி (8), காந்திநகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    பெரியகரம் கிராமத்தின் அருகில் உள்ள ஏரி பக்கத்தில் 6 அடி ஆழ குட்டை உள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக குட்டையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் சாந்தி, பகவதி ஆகிய இருவரும் நேற்று கிராமத்தின் அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.

    தண்ணீர் அதிகமாக இருந்ததாலும், இருவருக்கும் நீச்சல் தெரியாததாலும் அவர்கள் குளிப்பதற்காக குட்டையில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி உள்ளனர். அப்போது அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதைகேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து சென்றனர். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

    அவர்களை பொதுமக்கள் தேடினர். சிறிது நேரத்தில் இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மூச்சுத்திணறி இறந்துவிட்டனர். இதனால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபக்சிங், அவருடைய மனைவி சீதாசிங் மற்றும் 5 சகோதரிகள், சகோதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    போளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கண்ணகுருக்கை கிராமம் செங்கம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாமலை (வயது 76) என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென மோதியதில் அண்ணாமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் மினி லாரி அருகில் இருந்த கட்டிடத்தின் மீது மோதி நின்றது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மினி லாரி மீது மோதியது. இதனால் முன்பக்க கண்ணாடி உடைந்தது. லாரி டிரைவர் ஏழுமலை (38) என்பவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாய்ச்சல் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆந்திராவில் இருந்து கண்ணமங்கலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற லாரியில் இருந்து 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் போலீசார், கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து கண்ணமங்கலம் வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 100 கிலோ கஞ்சா 40 பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரி, 2 மோட்டார் சைக்கிள்களுடன் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்த உலகநாதன் (வயது 48), ஜாகீர்உசேன் (48), நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த லாரி டிரைவர் லூர்து அந்தோணி (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது. வினாடிக்கு 1,215 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு 7321 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இவை தவிர சிறிய, பெரிய ஏரிகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல 52 அடி உயரம் கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 49.2 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மீதமுள்ள 1,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றில நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1,215 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 22-ந்தேதி 79 அடியாக இருந்த சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 82.20 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமானால் விரைவில் சாத்தனூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலையில் தொடர்ந்து 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது.
    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வாழ்வில் உள்ள தடைகளை நீக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அக்டோபர் மாதத்தில் 2 பவுர்ணமி வருகிறது. கடந்த 1-ந் தேதி பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி 2-வது முறையாக பவுர்ணமி வருகிறது. 30-ந்தேதி மாலை 6.41 மணிக்கு தொடங்கி 31-ந்தேதி இரவு 8.45 மணி வரை பவுர்ணமி நேரம் ஆகும். ஆனால் இந்த பவுர்ணமிக்கும் மாவட்ட நிர்வாகம், பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது.

    தொடர்ந்து 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது. ஆனால் மற்ற நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும் பவுர்ணமி தினத்தன்று கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம்.

    அதன்படி வருகிற 30-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்னாபிஷேகம் நடைபெறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல பக்தர்கள் சாமிதரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    விழாவின் நிறைவாக 29-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீப திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்றும், கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    தேசூர் அருகே விபத்தில் மின்ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    தேசூரை அடுத்த கெங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது 40), மின்ஊழியர். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு மோட்டர் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    தென்திண்ணலூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது, செந்தாமரைகண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீருதீன் வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
    கண்ணமங்கலம் அருகே பணத் தகராறில் பெண்ணை கொலை செய்த தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 65). இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கணேசன் (35) என்பவர் பணம் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்கும்படி, ராஜேஸ்வரி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரியை அடித்துக்கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்து, நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார். 

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து நகைகளை மீட்டனர். கணேசன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் ஜெயிலில் உள்ள கணேசனிடம் வழங்கப்பட்டது.
    கலசபாக்கம் அருகே 3 கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த பில்லூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து சாமி சிலையில் இருந்த தங்க மாங்கல்யத்தை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஜெயின் கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதேபோல் கலசபாக்கம் திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாமி சிலையின் மாங்கல்யத்தையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×