search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கோவில்
    X
    திருவண்ணாமலை கோவில்

    திருவண்ணாமலையில் 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

    திருவண்ணாமலையில் தொடர்ந்து 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது.
    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வாழ்வில் உள்ள தடைகளை நீக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அக்டோபர் மாதத்தில் 2 பவுர்ணமி வருகிறது. கடந்த 1-ந் தேதி பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி 2-வது முறையாக பவுர்ணமி வருகிறது. 30-ந்தேதி மாலை 6.41 மணிக்கு தொடங்கி 31-ந்தேதி இரவு 8.45 மணி வரை பவுர்ணமி நேரம் ஆகும். ஆனால் இந்த பவுர்ணமிக்கும் மாவட்ட நிர்வாகம், பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது.

    தொடர்ந்து 8-வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கிறது. ஆனால் மற்ற நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும் பவுர்ணமி தினத்தன்று கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம்.

    அதன்படி வருகிற 30-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்னாபிஷேகம் நடைபெறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல பக்தர்கள் சாமிதரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நவம்பர் மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

    விழாவின் நிறைவாக 29-ந் தேதி மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீப திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்றும், கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடைக்குமா? என்றும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×