என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கோட்டகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (வயது 70), பாலையா (55). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இது குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குண்ணகம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
    சேத்துப்பட்டு: 

    தேசூரை அடுத்த குண்ணகம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. 

    முகாமில் டாக்டர் மணிமாறன், செவிலியர் பவானி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். 
    திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் கே.வி. சேகரனும், அதிமுக சார்பில் அக்ரிகிருஷ்ணமூர்த்தியும் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    போளூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய பகுதியிலும், இந்த மாவட்டத்தின் 4-வது பெரிய நகரம். பல்லவர்கள் ஆட்சிக்கு முன்பு முக்கிய நகரமாக விளங்கியது. 1951-ம் ஆண்டு போளூர் சட்டமன்ற தொகுதி உருவானது.

    போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன.

    போளூர் தொகுதி

    மொத்தம் 2 லட்சத்து 42,915 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 19,269 பேர், பெண்கள் 1 லட்சத்து 23,642 பேர், மூன்றாம் பாலினத்தவர் 40 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.

    போளூர் தொகுதி

    இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

    மேலும் போளூர் பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலைக்காக சென்னை மற்றும் பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு அதிகளவில் சென்றுள்ளனர்.

    போளூர் தொகுதி

    இந்த தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 15 தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், காமன்வெல்த் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    போளூர் தொகுதியில் கடந்த முறை 285 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. இதனால் தற்போது 48 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 333 வாக்குச்சாவடி மையங்களாக உயர்ந்துள்ளது.

    போளூர் தொகுதி

    போளூர் ஒன்றியத்தில் 7 வாக்குச்சாவடிகளும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 11 வாக்குச்சாவடிகளும் என 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நிறைவேற்றப்பட வேண்டிய பிரச்சினைகள்

    போளூரை அடுத்த பாக்மார்பேட்டையில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முன் வந்தது. ஆனால் இன்று வரை அமைக்கவில்லை. போளூரில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும். போளூர் பெரிய ஏரிக்கு செய்யாற்றில் இருந்து மஞ்சளாறு வழியாக மழைநீர் வந்து சேருகிறது. குடிநீர் பற்றாக்குறை தீர பெரிய ஏரிக்கு கூடுதல் நீர்வழித்தடம் அமைக்க வேண்டும்.

    ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். போளூரை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்த வேண்டும். வசூர் கிராமத்தில் உள்ள விதை நெல் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த வேண்டும். மொடையூரில் கற்சிற்ப கலையை மேம்படுத்த சிற்பிகளுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருமலையில் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சமணர் (ஜெயின்) ஆலயம், ஆவணியாபுரம் வைணவ கோவில், போளூர் சுயம்பு சம்பத் கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் போன்றவற்றை சுற்றுலாதல மாக மாற்றி வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்.

    போளூர் தொகுதி

    போளூர் பஸ் நிலைத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். போளூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். தொகுதியில் உள்ள சாலை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். விவசாய கல்லூரி அமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., காமராஜர், அண்ணா, இந்திராகாந்தி ஆகிய தலைவர்கள் போளூரில் தங்கிய பயணியர் மாளிகை தொடர்ந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மூடியே உள்ளது.

    அதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போளூர் தாலுகாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். பெண்ணையாறு செய்யாறு இணைப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். முடையூரில் சிற்ப கல்லூரி அமைக்க வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள கே.வி. சேகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்  அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

    போளூர் தொகுதி
    போளூர் தொகுதி

    1951- மாணிக்கவேல் நாயக்கர்- பொது நல கட்சி
    1957- அண்ணாமலை- சுயேச்சை
    1962- கேசவ ரெட்டியார்- தி.மு.க.
    1967- குப்பம்மாள்- தி.மு.க.
    1971- சீனிவாசன்- தி.மு.க.
    1977- சுப்பிரமணியன்- அ.தி.மு.க.
    1980- பலராமன்- காங்கிரஸ்
    1984- ஜெ.ராசாபாபு- காங்கிரஸ்
    1989- ராஜேந்திரன்- தி.மு.க.
    1991- வேதியப்பன்- அ.தி.மு.க.
    1996- எ.ராசேந்திரன்- தி.மு.க.
    2001- நளினி மனோகரன்- அ.தி.மு.க.
    2006- விஜயகுமார்- காங்கிரஸ்
    2011- எல். ஜெயசுதா- அ.தி.மு.க.
    2016- கே.வி. சேகரன்- தி.மு.க.
    வாக்குப்பதிவை வலியுறுத்தி உருவாக்கிய சிலையை சிற்பி சுரேஷ் திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தாழம்ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37) சிற்பி. இவர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் அடையாள மையிடும் ஒற்றை விரலை உயர்த்தி காட்டும் கற்சிலை செய்துள்ளார்.

    3 நாளில் அதனை உருவாக்கிய சிற்பி சுரேஷ் அதனை திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்.

    மேலும் அவர் செய்த திருவள்ளுவர் சிலை, சாமி சிலைகள் உள்ளிட்டவைகளையும் வைத்திருந்தார். இதனை பார்வையிட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் பொதுமக்கள் சிற்பி சுரேசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


    கலசப்பாக்கம் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணியில் இருந்து கீழ் தாங்களல் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவலறிந்த எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    முதற்கட்ட விசாரணையில் கொலையான நபர் கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பர்வதம் மகன் பிரகாஷ் (வயது 28) என்று தெரியவந்தது. இவரை கொடூரமாக கொலை செய்தது யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதும்,சொர குளத்தூர் காப்புக்காட்டில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததும் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த 2 கொலைக்கான காரணங்களையும் அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை.

    இந்த நிலையில் 3-வது சம்பவமாக வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.



    ஊழல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    திருவண்ணாமலை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    15-ந் தேதி (அதாவது இன்று) மதியம் 1.30 மணிக்கு கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாலையே தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். அ.ம.மு.க.விற்கு இந்தத் தேர்தலில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. எங்களது கூட்டணி கட்சியினருக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை சோதனை செய்த அதிகாரிகளை அவர் பணியிடம் மாற்றம் செய்தது அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது. சசிகலா அரசியலுக்கு மீண்டும் வருகைக்காக நான் வற்புறுத்துவேன்.

    ஊழல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்.

    தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பண மூட்டைகளை நம்பி நிற்கிறது. ஒரு கட்சி, பணத்தை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் அது எந்த மாதிரியான முடிவு வரும் என்பது இந்த தேர்தலில் தெரியவரும். இதுவரை ஆர்.கே.நகருக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே தானிபூண்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    வேட்டவலம்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வாக்களிக்க பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே தானிபூண்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை வந்த பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரிடம் இருந்து ரூ.90 ஆயிரமும், சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த தீனதயாளன் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபற்றி பறக்கும் படை அலுவலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:-

    உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதால் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.

    திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் ரவுடி வசூர் ராஜாவிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47) ரியல் எஸ்டேட் அதிபர்.

    இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பங்க்பாபுவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கூலிப்படையை வைத்து வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.

    கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அ.தி.மு.க .பிரமுகர் கனகராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பங்க்பாபுவை , கனகராஜ் மனைவி மற்றும் மாமியார் உள்பட உறவினர்கள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தற்போது ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து அதிரடி விசாரணை நடத்தினர்.

    திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபர் பங்க்பாபு கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தகொலையில் வேலூரை சேர்ந்த ரவுடி வசூர்ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளோம்.

    அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.




    அதிமுக இதுவரை வெற்றியை கண்டிராத தொகுதியாக இருக்கும் திருவண்ணாமலை ஓர் கண்ணோட்டம்
    தமிழகத்தில் தலைசிறந்த ஆன்மீக நகரமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தியளிக்கும் அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இங்கு மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள கிரிவலப் பாதையில் ரமணர், சேஷாத்திரி, யோகி ராம்சுரத்குமார் ஆகிய மகான்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும் இடைக்காடர், குகை நமச்சிவாயர், மூக்குப்பொடி சித்தர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் சன்னதிகளும் உள்ளன.

    திருவண்ணாமலை தொகுதி

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் ஒவ்வொரு பவுர்ணமி தினங்களிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் இதன் மூலம் வியாபாரிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

    திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் செங்கம் தாலுகாவில் மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், ராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள் வருகிறது.

    திருவண்ணாமலை தொகுதி

    சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான்,

    அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு,

    திருவண்ணாமலை தொகுதி

    காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள் மற்றும் திருவண்ணாமலை நகராட்சி பகுதிகள் இந்த திருவண்ணாமலை தொகுதியில் அடங்கியுள்ளன.

    இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 851பேர் உள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 856 .பெண்வாக்காளர் கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 956. மூன்றாம் பாலினத்தவர் 39 பேர்.

    திருவண்ணாமலை தொகுதி

    திருவண்ணாமலை தொகுதியில் முக்கிய நகரமாக திருவண்ணாமலை நகரம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை ஒன்றியத்தில் 59 பஞ்சாயத்துகள் உள்ளன. திருவண்ணாமலை தொகுதியில் முதலியார் மற்றும் வன்னியர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் யாதவர், ரெட்டியார், நாயுடு, ஆதி திராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. 8 முறை வெற்றி பெற்றுள்ளது. 

    கடந்த 29 ஆண்டுகளாக தி.மு.க.வை எந்த கட்சியும் வெல்ல முடியவில்லை. அதற்கு முன்னர் காங்கிரஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. இங்கு ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை.

    லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருவண்ணாமலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு எந்த கட்சியும் தீர்வு காணவில்லை. திருவண்ணாமலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

    இப்பணியை முடித்தால் ஓரளவு போக்குவரத்து நெருக்கடி குறையும். மேலும் புறவழிச்சாலை பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. திருவண்ணாமலை பஸ் நிலையம் கட்டிடம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. மூன்று முறை இடிந்து விழுந்தும் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    திருவண்ணாமலை தொகுதி

    திருவண்ணாமலை தொகுதியில் பால் உற்பத்தி அதிகளவில் உள்ளது. மேலும் மலர் சாகுபடியும் அதிக அளவில் உள்ளது. அவைகளைப் பதப்படுத்தி சந்தைப் படுத்தினால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே பால் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

    இந்த தொகுதியில் டான்காப் மூலம் தொடங்கப்பட்ட கடலை எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. பின்னர் அது மூடப்பட்டுவிட்டது. அதனை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    திருவண்ணாமலை தொகுதியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் தொழிலாளர்கள் பலர் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். சென்னை, பெங்களூர் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வேலை பார்க்கின்றனர். மேலும் திருப்பூர், கோவை போன்ற நகரங்களுக்கு சென்று ஸ்பின்னிங் மில்களில் வேலை பார்க்கின்றனர். மேலும் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஏற்படுத்தினால் மக்களின் வருமானத்திற்கு வழி பிறக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள எ.வ. வேலுவிற்கு திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வெற்றி

    திருவண்ணாமலை தொகுதி

    1951- ராமச்சந்திர ரெட்டியார்- காங்கிரஸ்
    1957- பி.யு.சண்முகம்- சுயேட்சை
    1962- பி.பழனிபிள்ளை- காங்கிரஸ்
    1967- விஜயராசு- காங்கிரஸ்
    1971- பி.யு.சண்முகம்- தி.மு.க.
    1977- பி.யு.சண்முகம்- தி.மு.க.
    1980- நாராயணசாமி- காங்கிரஸ்
    1984- ரவீந்திரன்- காங்கிரஸ்
    1989- பிச்சாண்டி- தி.மு.க.
    1991- கண்ணன்- காங்கிரஸ்
    1996- பிச்சாண்டி- தி.மு.க.
    2001- பிச்சாண்டி- தி.மு.க.
    2006- பிச்சாண்டி- தி.மு.க.
    2011- எ.வ.வேலு- தி.மு.க.
    2016- எ.வ.வேலு- தி.மு.க.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் முன்பு உலக நன்மைக்காக 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நேற்று தொடங்கி இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று நாதசுர இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 39 வதுஆண்டாக நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மக்களை வெகுவாக கவர்ந்த பக்தி பாடல்களை இசைத்து மகிழ்வித்தனர்.

    கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

    உலக மக்கள் எந்தவித இயற்கை இடர்பாடுகளும் இல்லாமல், கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்காமல் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    செங்கம் அருகே சிலை உடைக்கப்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் அண்ணாநகர் பகுதியில் சிமெண்டால் செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சிலை உடைக்கப்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த செங்கம் டி.எஸ்.பி. சரவணகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    வேட்டவலம் அருகே கூலித்தொழிலாளி ஏரியில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேட்டவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த அவர், அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரமேஷ் (வயது 48) எனத் தெரியவந்தது. அவர் 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து டீக்குடிக்க கடைக்குச் சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 3 நாட்களாக பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஏரியில் கிடந்த கூலித்தொழிலாளியின் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் பிணத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    ×